Header Ads



ஆமையும், கோழியும்..!


(நூறு முஹம்மது)

ஆமையுடன் ஓட்டப் பந்தயத்தில் தோற்ற முயலின் கதை இன்றும் சிறுவர்களுக்கு சொல்லப்படும் பிரசித்தமான கதையொன்றாகும். அப்படியிருக்கையில் ஆமையும் முயலும் என்று இருக்க வேண்டிய தலைப்பு, ஏதோ தவறுதலாக இங்கு எழுதப்பட்டு விட்டதோ என்று யோசிப்பீர்கள். நீங்கள் நினைப்பது போலவே இதற்கு ஆமையும் முயலும் என்று கூட தலைப்பிட்டிருக்கலாம். அந்த கதைகூட ஓரளவு இந்தக் கட்டுரைக்கு பொறுத்தமானதுதான். அதுபற்றி இடைநடுவில் குறிப்பிடுவேன். 

கடந்த சில தினங்களாக பத்திரிகைகளின் முன்பக்கச் செய்தி, உட்பக்க கட்டுரைகள், முகநூலில் அதிகமாக பகிரப்பட்ட குறிப்பு, வலைத்தளங்களில் சொல்லப்பட்ட சூடான தகவல் எதுவென்று எவரிடம் கேட்டாலும் அது ஜனாதிபதிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கும் இடையிலான முரண்பாடு என்பதில் வேற்றுக் கருத்து இருக்க முடியாது. 

'முரண்படுவதாயின் மூட்டை கட்டிக் கொண்டு வெளியேறுங்கள்;' என்று ஜனாதிபதி எச்சரித்ததும், நீங்களாக வெளியேற்றுவதாயின் வெளியேற்றுங்கள், நாங்களாக வெளியேற மாட்டோம் என்று ஹக்கீம் கூறியதாகவும் செய்திகள் சொல்கின்றன. 

அதேவேளை....

'நாட்டைக் காட்டிக்கொடுக்கிறார் ஹக்கீம்' என்று அமைச்;சர் விமல்வீரவன்சவும் அவரின் எடுபிடி முஸம்மிலும் செய்தியாளர் மாநாடுகளில் கர்ஜித்தார்கள். தேசத்துரோக  குற்றம் செய்திருக்கிறார் ஹக்கீம் என்று அமைச்சர் சம்பிக ரணவக்கவும் மற்றும் சில அமைச்சர்களும் அமைச்சரவை கூட்டங்களின் போது, ஹக்கீம் மீது விரல் நீட்டினர். வழமையை போன்றே மூ(ஊ)த்த அரசியல்வாதி ஒருவரும் 'ஜெனிவாவுக்கு கோள் சொல்லி குழப்புகிறார் ஹக்கீம்' என்று அறிக்கை விட்டு ஜனாதிபதிக்கு தன் விசுவாசத்தை இன்னொருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார். 

இவை எவற்றை பற்றியும் ஆராயும் நோக்கம் இப்போதைக்கு இல்லை. இந்தக் குற்றச்சாட்டுக்களையும் அவற்றுக்கான மறுப்புகளையும் பற்றி பிறிதொரு நேரத்தில் ஆராய்வோம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக 'இது ஹக்கீமின் தேர்தல் ஜிமிக்கி' என்று பரவலாக பேசப்படுகின்ற  இன்றைய சூழலில் இந்த ஜிமிக்கி – ஜமுக்கியின் பின்புலம் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

கடந்த திங்கள் மார்ச் 03இல் ஜெனிவா மாநாடு தொடங்கிவிட்டது. அனேகமாக தேர்தல் திகதியான 29ம் திகதிக்கு முதல்நாளான 28ம் திகதி இலங்கைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு, நவநீதம் பிள்ளையிடம் முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்த மத, இன கலாச்சார விழுமியங்களுக்கு எதிரான பேரினவாத அழுத்தங்கள் குறித்த அறிக்கை வலு சேர்ப்பதாக இருப்பதே மேலே சொல்லப்பட்ட எரியும் பிரச்சினைகளுக்கு மூலாதாரமாகும். அது போக இவ்வறிக்கையின் பிரதியொன்றையோ அதன் சாராம்சத்தையோ எவ்வாறோ பெற்றுக்கொண்ட தமிழர் தரப்பு அத்தகவல்களுடன் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளை ஜெனிவா வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க தூண்டும் செயல்பாட்டில் இறங்கியிருப்பதாகவும் மு.கா. மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இங்கு வாசகர்களும், வாக்காளர்களும் கவனிக்க வேண்டிய மிக முக்கிய தகவல் என்னவென்றால் நவநீதம் பிள்ளையின் விஜயம் நேற்றோ முந்தாநாளோ நடந்தது அல்ல. அது கடந்த வருடம் ஜூன் மாதம் நிகழ்ந்தவொன்று. இன்று சூடாக  பேசப்படுகின்ற இந்த காட்டிக்கொடுப்பு இந்த மாகாணசபை தேர்தல் பற்றிய ஆரூடம் கூட சொல்லப்படாத ஒரு காலகட்டத்தில் நடந்தவொன்றாகும். அது தேர்தல் ஜிமிக்கி அல்ல என்பதற்கு வேறு சான்று அவசியம் இல்லை. 

இங்கேதான் ஆமையும் முயலும் கதை வருகிறது. முயலைப்போல அரசாங்கம் தூங்கி வழிந்து கொண்டு இருந்திருக்கிறது. ஆமை வெற்றிகோட்டை கடந்தது போன்று முஸ்லிம் காங்கிரஸ் தன் இலக்கை எட்டிவிட்டதை தெரிந்துகொண்டு அரசுக்குள்ளிருக்கும் இனவாத அமைச்சர்கள் இப்போதுதான் கண் விழித்து சூரிய நமஸ்காரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆமையும் முயலும் கதை அப்படியிருக்க, இப்போது ஆமையும் கோழியும் பற்றி சொல்ல வேண்டிய நேரம் வந்திருக்கிறது. 

கடந்த வருடம் ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளையவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்த போது, இவ்வறிக்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் அவர்களால் கையளிக்கப்பட்டுள்ளது. 

அதே வேளை கடந்த டிசம்பர் மாதம் இலங்கை வந்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட சலோக்கா பெயானி என்பவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை அவரது அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அக்கலந்துரையாடலின் போது முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸனலி, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் சிலர் என்போர் கலந்து கொண்டுள்ளனர். நவநீதம் பிள்ளையின் விஜயம் போன்றே சலூக்காவின் விஜயமும் உத்தியோக பூர்வ விஜயம் என்பதனால் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளும் உடன் இருந்துள்ளனர். இச்சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அழுத்தங்கள் அடங்கிய பிறிதொரு அறிக்கை பகிரங்கமாக கையளிக்கப்பட்டிருக்கிறது. 

அரசாஙக்த்துக்கு தெரியாமல் ஒழித்து மறைத்து இருட்டில் நடத்தப்பட்ட நாடகம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது போல இப்போது கூக்குரலிடுவது இந்தத் தேர்தலில் பெரும்பான்மையின வாக்குகளை சூறையாடுவதற்கு அரசிலுள்ள சிலர் அரங்கேற்றியிருக்கும் கூத்தாகும். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் தானாக இதனை இத்தேர்தல் காலத்தில் பறையடித்து இலாபம் தேட முயலவில்லை. அரசாங்கம்தான் முஸ்லிம் காங்கிரஸ்  ஆமை போல ஊமையாய் இருந்து கொண்டு எவ்வளவு கச்சிதமாக தன் சமூகத்துக்கான கடமையை செய்கிறது என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு வால் பிடித்தது என்று காரசாரமாக விமர்சித்தவர்கள் அநேகர். பள்ளி வாசல்கள் தாக்கப்பட்ட போதும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் முற்றுகையிடப்பட்ட பொழுதும் இன்னோரன்ன பிற சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் காத்திரமாக எதுவும் செய்யவில்லையென்று முஸ்லிம் சமூகம் ஆத்திரப்பட்ட சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. 

குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்கென்று வலையும் தூண்டிலுமாக பலர் அப்போது களமிறங்கி கூடையை நிரப்பிக்கொண்டார்கள். மேடைகள் அதிர அவர்களின் மேதாவிலாசம் பளிச்சென்று வெளிச்சமிடப்பட்டது. இவர்களின் மெல்லுகிற வாய்க்கெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் அவலாகி அவதிப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்று அவர்களின் முழக்கம் பெரும் ஆறுதலாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், சத்தம் போட்டதை தவிர அவர்கள் சாதித்தது எதுவுமே இல்லை என்பதை இன்றும்கூட சமூகம் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் விசித்திரமானது. 

கோழி ஒரு முட்டையை இட்டுவிட்டு கொக்கரிப்பது போல முஸ்லிம் காங்கிரஸ் என்கிற பண்பட்ட, அரசியல் அனுபவம் வாய்ந்த கட்சி நடந்துகொள்ளவில்லை. ஆயிரம் முட்டைகளை இட்டுவிட்டு அமைதியாக இருக்கும் ஆமை போல கச்சிதமாக தன் காரியத்தை நிறைவேற்றியிருக்கிறது. 

உள்நாட்டு மேடைகள் கோழிகளால் நிரம்பி வழிந்த போது இந்த ஆமை சர்வதேச சமூகத்துக்குள் சத்தமில்லாமல் நுழைந்து முட்டையிட்டிருக்கிறது. 
இன்று முஸ்லிம் சமூகத்துக்கு நடந்த அநியாயங்கள் ஐக்கிய நாடுகள் சபையை எட்டியிருக்கிறது என்பது வேறு எவரும் சாதிக்காத முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே தன் சமூகக் கடமையை சரிவர நிறைவேற்றியிருக்கிறது என்பதற்கான சான்றாகும். பிரச்சினைகளை வைத்து வியாபாரம் பண்ணும் கட்சியல்ல முஸ்லிம் காங்கிரஸ் என்பதையும் சாதுர்யமாக சாதிக்கும் சக்தி அது என்பதையும் முஸ்லிம் காங்கிரஸை விமர்சிப்பவர்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். 

வேகம் எல்லோரிடமும் உண்டு. ஆனால் விவேகம் இப்போதைக்கு முஸ்லிம் காங்கிரஸிடம் மட்டுமே காணப்படுகிறது.  இப்போதும் மேடைகளில் கோழிகள் கொக்கரிக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஒரு கோழி மாத்திரம் இத்தேர்தலில் அடைகாக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.     

1 comment:

  1. Ithanai kedu kedda pichai keddu thirium Risad baduddinukku anuppavum avanukku arimuha wanavarhal iv nalla kariyathi cheingo.

    ReplyDelete

Powered by Blogger.