Header Ads



தேர்தல் முடிவுகள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தலைமைக்கும் உணர்த்துவதென்ன..?


(அல்ஹாஜ் யூ.கே. நாபீர்)

நடைபெற்று முடிந்த மேல் மாகாண மற்றும் தென் மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் பல்வேறு பட்ட கட்சி மற்றும் சமூகம் சார்ந்த முடிவுளை எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித்தலைமைக்கு உண்டாக்கியுள்ளமை யாராலும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி யாக தன்னை சித்தரித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம்காங்கிராஸ் இந்த மாகாண சபை தேர்தலில் அடைந்து கொண்டுள்ள வெற்றி எவ்வாறு நோக்கப்டுகின்றது. மேல்மாகாணத்தில் அதுவும் கொழும்பு மாவட்டத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் சுமார் 175,000 இற்கு மேற்ப்பட்ட முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர் அதில் அண்ணளவாக 145,000 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இருந்தபோதிலும் அவர்களில் நேற்று நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம்களை பிரதிநிதிப்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரசை வெற்றியின் பால் அவர்கள் பெரிதாக ஆதரித்ததாக கிடைக்கப்பெற்ற முடிவுகள் பறை சாற்றவில்லை. 

முன்னர் பெற்றிருந்த இரண்டு ஆசனங்களையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அவசியமான நிலையில் எழுந்த நிர்ப்பந்தத்தின் பெயரிலேயே கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் இராப்பகலாக பிரச்சாரத்தை மேற்கொண்டனர் அதிலும் குறிப்பாக மேற்குறித்த மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அல்ஹாஜ் றஊப் ஹக்கீம் நேரடியாக பிரச்சாரத்தை மேற்கொண்டார் இருந்தபோதிலும் முஸ்லிம்களின் கணிசமான அளவு வாக்குகள் வழமை போன்று ஐக்கிய தேசிய கட்சிக்கும் அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் தான் விழுந்தது என்பது வேதனைக்குரிய விடயமாகும். 

எமது நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பேரின வாதிகளின் சூழ்ச்சி நடவடிக்கைகளுக்கு மத்தியில் எமது முஸ்லிம் சமூகம் பேரினவாதிகளின் கட்சிக்களுக்கு வாக்களித்ததன் சூட்சுமம் தான் என்ன? பிரதான காரணம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பால் உள்ள நம்பிக்கை அற்ற தன்மையே என்பதை இந்த தேர்தல் பறை சாற்றுகின்றது. அதே நேரம் முஸ்லிம் காங்கிரசின் வாக்கு வங்கியான எமது அம்பாறை மாவட்டத்தில் அதுவும் கல்முனை தேர்தல் தொகுதியில் அண்மைக்காலமாக எழுந்து வரும் சர்ச்சைகள் கட்சி தாவல்களினால் முஸ்லிம் காங்கிரசின் கோட்டை என்று சகலராலும் போற்றப்படும் கல்முனையில் பாரியதொரு பின்னடைவை முஸ்லிம் காங்கிரஸ் இற்கு எதிர்வரும் தேர்தலில் ஏற்ப்படுத்துமா என்பது இப்போது எழும் கேள்வியாகும். 

இதற்க்கு காரணமாக கல்முனை மாநகர மேயர் தொடர்பான சர்ச்சையும் அதையொட்டிய சாய்ந்தமருது பிரதேச சபை கோரிக்கையை முன்னிறுத்தி முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் கட்சிதாவிச்சென்றதுவும் அதே நேரம் பல்வேறு பட்ட சூழ்ச்சிகளினால் சாய்ந்தமருதுவாழ் மக்களின் மனோநிலையை மாற்றி அவர்களை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திசை திருப்புவதற்கு முன்னாள் மாநகர முதல்வர் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளும் காரணமாக அமைகின்றது. 

அதே நேரம் தன்னை கல்முனை தேர்தல் தொகுதியில் நிலை நிறுத்துவது தொடர்பாக அமைச்சர் அதாவுல்லா கொண்டிருந்த நீண்டகால திட்டமும் அரங்கேறும் இடமாக வர இருக்கும் தேர்தல் முஸ்லிம் காங்கிரசுக்கு எச்சரிக்கை மணி எழுப்பக்கூடிய தேர்தலாக அமைய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சித்தலைவர் இந்த நேரத்தில் சிந்தித்து செயல் படவேண்டிய தருணம் இதுவாகும் காரணம் வெறும் போலிவார்த்தைகளை நம்பக்கூடிய சமூக அமைப்பு இன்று எமது பிரதேசத்தில் இல்லை வெறுமனே சிந்தனை இல்லது செயற்ப்படும் மக்கள் அருகிவருகின்றனர் எல்லோரும் சிந்திக்க தொடங்கிவிட்டனர் எமது சமூக விடுவுக்காக ஏங்கும் ஆரம்ப காலப்போராளிகளை திருப்தி படுத்தவேண்டிய கடப்பாடு முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு உண்டு. 

அதே வழமைக்கு மாற்றமான அரசியில் யுக்திகளை கையாள வேண்டியதன் அவசியமும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் புதிய முகங்கள் புதிய அபிவிருத்தி நடவடிக்கைகளை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டிய கடப்பாடும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு உள்ளது. அதே நேரம் அரசியல் கபட நாடகங்களினால் வெறுப்படைந்து இருக்கும் சாய்ந்தமருது மக்களை திருப்திப்படுத்தவேண்டிய தேவையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு உள்ளது அதில் முதல் கட்டமாக சாய்ந்தமருதை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் சகோதர் எம்.எம்.ஜெமீலுக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவியை வழங்கவேண்டியது அவசியமானதாகும் இதற்க்கான வலுவான காரணமும் உள்ளது அது யாதெனில். 

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பாக தேர்தல் சமயத்தில் ஆட்சியமைத்த கூட்டணிக்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் முதலமைச்சர் பதவியை முதல் இரண்டரை வருடங்களுக்கு நஜீப் ஏ மஜீதும் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இந்த முதலமைச்சர் பதவி பங்கிட்டு கொள்ளுவதாக ஒப்பந்தம் செய்திருந்தன. 

இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சி இருக்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். தற்போதைய நிலையில் சகோதரர் எம்.எம்.ஜெமீலை விட பொருத்தமானவராக எவரும் மாகாணசபையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

அண்மைக்காலமாக சகோதரர் ஜெமீல் அவர்களின் கட்சிக்கான அர்பணிப்பு மிக்க பங்களிப்பு சமூக ஒற்றுமைக்கான பிரயத்தனம் மிக்க செயற்ப்பாடுகள் அவரை அரசியல் முதிர்ச்சியுடைவராக காட்டுகின்றது இவரை மாகாணசபை முதல்வராக நியமிக்கும் பட்சத்தில் சாய்ந்தமருது மக்களை மாத்திரமன்றி அம்பாறை மாவட்ட மக்கள் அனைவரையும் திருப்தி படவைத்த பெருமையை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அடைந்துகொள்ளும் அதே நேரம் தனது வாக்கு வங்கியின் இஸ்த்திரத்தன்மையை பேணிக்கொள்ளலாம். சிந்தித்து செயல்படுமா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை....?? 

No comments

Powered by Blogger.