Header Ads



காணாமல் போன தமது உறவுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் முஸ்லிம்கள் முறைப்பாடு


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் இறுதி நாள் விசாரணைகள் 22-03-2014 நேற்று சனிக்கிழமை மண்முனை வடக்கு - மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இன்றைய அமர்வில் காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்  தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பராணகம, ஆணைக்குழுவின் ஆணையாளர்களான திருமதி மனோ ராமநாதன், திருமதி சுரஞ்சனா வித்தியரத்ன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர். 

அத்துடன், சட்ட அதிகாரிகளான சமிந்த அத்கோரல, துசித் முதலிகே ஆகியோரும் முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்தில் இருந்து  ஜனாதிபதி ஆணைக்குழுவினால் 52 பேருக்கு நேற்றைய நாள்  முறைப்பாடுகள் தொடர்பான  விசாரணைக்காக அழைக்கப்பட்டதோடு அதில் 42 தமிழர்களுக்கும் 3 முஸ்லிம்களுக்கும் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றன.

நேற்றைய விசாரணையில் இரகசியமாக சாட்சியமளிக்க வேண்டும் என ஒரு வயோதிபப் பெண் கேட்டுக் கொண்டார். அதன்படி  அவரது சாட்சியம் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்டது.

காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் இறுதி நாள் நிகழ்வில் ஆணைக்குழுவிடம் புதிதாக முறைப்பாடுகளை 399 தமிழர்களும் 161 முஸ்லிம்களுமாக 560 பேர் புதிதாக முறைப்பாடுகளை கையளித்தமை  குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.