முஸ்லிம்களை நசுக்கும் மஹிந்த அரசாங்கத்தை விரட்டியடிப்போம் - முஜிபுர் ரஹ்மான் அழைப்பு
இந்த அரசின் ஆட்சியின் கீழ் நாட்டில் இன்று முஸ்லிம் சமூகம் நசுக்கப்பட்டு இனவாதம் தூண்டப்பட்டு மிகவும் மோசமானதொரு நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையிலிருந்து எமது சமூகத்தை மீட்டெடுக்க இந்த வங்குரோத்து அரசாங்கத்தினால் ஒருபோதும் முடியாதுள்ளது. எனவே நாம் ஒற்றுமையாக ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் ஓரணியில் திரண்டு இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டிய காலம் கணிந்துள்ளதாக மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மாளிகாவத்தை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,,
கொழும்பு மக்களை அரசாங்கம் பல வகையிலும் சோதித்து வருகின்றது. ஆரம்பத்தில் எமது மக்களின் வியாபாரத்தில் கை வைத்தார்கள். தற்போது எமது வீடுகளை இடித்து தரை மட்டமாக்குகின்றனர். அப்பாவி மக்களை வெளியேற்றிவிட்டு அந்த இடங்களை சூதாட்ட விடுதிகள் அமைப்பதற்கும் விபசார விடுதிகள் நடத்துவதற்கும் போதைபொருள் மத்திய நிலையமாக்குவதற்கும் வெளிநாடுகளுக்கு விற்க அரசு திட்டமிட்டுகொண்டிருக்கிறது. இவ்வாறு எமது மக்களை நசுக்கி அரசு சுகம் அனுபவிக்கின்றது.
மட்டுமன்றி கொழும்பு மாவட்டத்தில் கிராண்ட்பாஸ், தெஹிவளை, அத்திடிய, மெகட கொலன்னாவ, ராஜகிரிய கொஹிலவத்தை உள்ளிட்ட பல இடங்களில் பள்ளிவாசல்கள் தாக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளன. ஹபாயா தடை, ஹலால் எதிர்ப்பு, மாடறுப்புக்கு தடை விதித்தல் என எமது சமூகத்தின் மார்க்கக் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கு இந்த அரசாங்கம் துணை போகின்றது. அதனை தடுத்து நிறுத்த திரானியற்ற இந்த அரசாங்கத்தை இனியொருபோதும் ஆட்சியமைக்க இடமளிக்கக் கூடாது.
இவர்களின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருனத்தில் இருக்கின்றோம். இதற்கான சந்தர்ப்பம் தற்போது கிட்டியுள்ளது. அரசை வீழ்த்துவதற்கு இந்த மாகாண சபையை பயன்படுத்த வேண்டும்.
முஸ்லிம்களுக்கு அரசு அநியாயம் செய்வதாக கூறிக்கொண்டு இன்று சிலர் கொழும்பில் வாக்கு கேட்டு வந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் மஹிந்த அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் தேர்தல் மேடைகளில் மட்டுமே முஸ்லிம் சமூகம் என்று பேசித் திரிகின்றனர். ஆனால் இன்று வரை பாராளுமன்றத்திலோ அமைச்சரவை கூட்டத்திலோ பள்ளிவாசல்கள் தாக்குதல் பற்றி பிரஸ்தாபிக்கவில்லை.
இவர்கள் கொழும்பு முஸ்லிம்களின் வக்குகளை சின்னாபின்னமாக்கி பிரதிநிதித்துவத்தை குறைத்து விட்டு மக்களை பாதாள படுகுழியில் தள்ளிவிட முயற்சிக்கின்றனர். இவர்கள் சமூகத்தின் பெயரை வைத்துக்கொண்டு அரசியல் பிழைப்பை நடத்தி சுகபோகங்களை மாத்திரம் அனுபவிக்கின்றனர். இவர்களையும் சர்வாதிகார அரசாங்கத்தையும் விரட்டியடிக்க முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சி எனும் ஓரணியில் திரள வேண்டும். இதுவே காலத்தின் தேவையாகும் என்றார்.
DEAR MR. MUJEEB, உங்களின் வேண்டுகோலுக்கு செவிமடுக்கிறோம்...... ஆனால் உங்களி கட்சிக்குள் 'ஏகப்பட்ட பிரச்சினைகள்' இப்படியிருக்கும் போது உங்களின் கோரிக்கைகளை மக்கள் செவிமடுப்பார்களா ????
ReplyDelete