Header Ads



இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள தலைவலி - முஸ்லிம் தலைமைகள் நீக்குமா..?

(தந்திமகன்)

ஜெனீவாக் களத்தில் நவநீதம் பிள்ளை இலங்கை வாழ் முஸ்லிம்களின் இன்றைய நிலைமை அவதானித்து அதனை மனித உரிமைகள் அமையத்தில் அறிக்கைப்படுத்தப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அண்மைக்காலமாக சிறுபான்மைச் சமூகத்தினரிடையே பெரும்பான்மைச் சமூகத்தின் ஒருபிரிவினர் பல்வேறு விதத்தில் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம்களின் மதவிவகாரங்களோடு சம்பந்தப்பட்ட விடயங்களை வேண்டுமென்று நசுக்க முற்பட்டுள்ளனர். கொழும்பில் முஸ்லிம்கள் வாழுகின்ற இடங்கள், அவர்களது வணக்கஸ்தலங்கள் போன்றவற்றை திட்டமிட்டு வெளியேற்றப்படுவதற்கான முஸ்தீபுகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இதனை உறுத்திப்படுத்தும் வகையில் அங்குள்ள மக்களின் இருப்பிடங்களுக்கும் விலைபேசப்பட்டு வருகின்றமை மிகுந்த கவலையைத் தோற்றுவித்துள்ளது. இது சம்பந்தமாக பலதரப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களும், முஸ்லிம் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களது கோரிக்கை விடுத்தும் செவிடன் காதில் ஊதிய சங்குபோலாகி விட்டது. முஸ்லிம்களை அதிகளவில் இம்சைப்படுத்திய பொதுபலசேனா, ராவய போன்ற இயக்கங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரபீடம் எதனையுமே அசை போடாத நிலையில் மீண்டும் ஒரு ஜெனீவாக்களத்தை நோக்கிய பிடியில் இலங்கையை சிக்கவைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்தலையிடியில் ஆளும் அரசிலுள்ள முஸ்லீம் தலைவர்களை சிக்கவைத்து மாட்டிவிட சகல ஏற்பாடுகளும் செய்ய முற்பட்டுள்ளதை காணமுடிகிறது. தெஹிவல பள்ளியில் தொழக்கூடாது. கிரோன்பாஸ் பள்ளிவாசல் பலாங்கொட ஜெய்லானி பள்ளி உடைப்பு, மகியங்கணை பள்ளிவாசல் எதிர்ப்பு போன்றவற்றுடன் இந்நாட்டில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் புதிதாக கட்டக்கூடாது,  மாடு அறுக்கக்கூடாது. கழுத்தை வெட்டிக் கொலை செய்யும் அறபு நாடுகளுக்குச் செல்லக் கூடாது போன்ற பல்வேறுபட்ட சமாச்சாரங்களை பேரினவாதிகள் தங்களது அடக்குமுறைகளுக்குள் உள்வாங்கி ஆட்டிப்படைக்க முற்பட்டுள்ளனர். இஸ்லாமிய அடிப்படை வாதத்தையே சிக்குமாடச் செய்யும் நோக்குடன் ராவய மற்றும் பொதுபலசேனா போன்ற இயக்கங்களின் ஆதரவுக்கு ஆளுகின் ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துள்ள முஸ்லீம் தலைவர்களும் தலையாட்டி பொம்மைகளாக இருந்துவிட்டுப்போக நினைக்கும் இத்தகைய தலைவர்கள் இந்த சமூகத்தின் நிலைமையை சீர்தூக்கிப் பார்க்க முனையாதமைக்குரிய காரணத்தை வெளிபடையாகக் கூறவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  
வாழ்க்கைச் செலவுப் போராட்டம், பொருளாதாரப் பிரச்சினைகள், விலையேற்றம் போன்ற சுமைகளையும் சுமந்து கொண்டு தன்னால் மீண்டும் அரசுக்கு ஆதரவு கூறியுள்ள முக்கிய பிரதான முஸ்லீம் கட்சியின் தலைவரையும், ஜெனீவாக் களத்திற்குள் தமது கட்சி மூக்கை நுழைக்காது எனக்கூறும் அதன் செயலாளரையும் என்னவென்று சொல்வது.  அதாவது 'இலங்கை மீது சில சர்வதேச சக்திகள் விஷமப் பிரசாரம் செய்து வருகின்றன. அதிக அழுத்தம் கொடுத்தால் எதிர் விளைவுகளே ஏற்படும்' எனவும், பொறுப்புக் கூறும் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் மீது சர்வதேச சமூகம் அதிக அழுத்தங்களைக் கொடுத்தால் அது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும், 'அனைத்துலக சமூகம் சுமத்தும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கும், அனைத்து இன மக்களினதும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் தயாராகி வருகிறது' என்றும் முக்கிய முஸ்லிம் தலைமை தெரிவித்திருந்தது.

மேலும், 'உள்ளக செயல்முறைகளின் மூலம் உண்மையைக் கண்டறிந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆர்வமாக இருக்கிறார். பொறுப்புக்கூறல் விவகாரத்தில், இலங்கை மீது கொடுக்கப்படும் மிகையான அழுத்தங்கள் எதிர் விளைவுகளை ஏற்படுத்தலாம். அது நல்லிணக்க முயற்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி, இனங்களுக்கு இடையிலான விரிசலை அதிகரிப்பதற்கும் அது காரணியாய் அமையலாம்' என்கிற கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

இக்கருத்துக்களை தாம் ஆமோதிக்கவில்லை போல் அக்கட்சியின் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார். அதாவது 'ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரவுள்ள பிரேரணை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட எந்த நடவடிக்கையிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க போவதில்லை' என்கிறவைகயில் தமது கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்களுடன் முஸ்லிம் மக்கள் சம்பந்தப்படவில்லை என்பதால் அந்த பிரச்சினையில் தமது கட்சியோ, தன்னுடைய சமூகத்தினரின் பங்குபற்றலோ தேவையற்றதென அவர் தெரிவித்திருந்தமை கவனித்தக்கதாகும்.

 'அரசாங்கம் போர்க் குற்றச்சாட்டுக்களை நிகராகரிக்குமாயின், நிராகரிப்பதற்கான சரியான விளக்கத்தை தெரிவிக்க வேண்டிய கடமைப்பாடு அரசுக்குரியது. தவறு செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் தான் தவறிழைக்கவில்லை என்பதை நிருபிப்பது கட்டாயமாகும். இது சாதாரணமான கூற்று. தான் நிரபராதி என்பதை நிருபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபித்தால், இரண்டு தரப்பினரின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்' எனவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு ஆளுக்காள் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டுள்ளமை இவர்களுக்குள்ளே சரியான தீர்மானம் எடுக்க முடியாமல் சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்கின்றார்கள் என பிரதியமைச்சரான பைசர் முஸ்தபா அண்மையில் கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார்.

அதாவது 'அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்தையே விமர்ச்சிக்கின்ற இவர்கள் அரசாங்கத்தின் வாகனங்களில், அரசாங்கத்தின் பாதுகாப்புடன் சென்று வருகின்றனர். அதேவேளை அரசாங்கத்தை குறையும் கூறிவருகின்றனர். இது எந்த வகையில் நியாயம்? என அந்த முஸ்லிம் கட்சியின் முக்கியஸ்தர்களிடம் வினாவியிருந்தார். மேலும் அவர் கருத்துரைக்கையில் 'இவர்களுக்கு கொழும்பில் இடமில்லை. தேர்தல் காலத்தில் மாத்திரம் புத்திசாதுர்யமிக்க வகையில் முஸ்லீம் மக்களுடன் விளையாடுவதற்கு முற்படவேண்டாம் எனவும் இக்கட்சியினரைப்பார்த்து பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா கோரிக்வை விட்டிருந்தார். ஆனால் இவர்கள் இதுவரையிலும் இக்கட்சியினர் இதற்கான சரியான பதிலை வழங்காது உள்ளனர். அப்படியானால் பிரதியமைச்சரின் கூற்றை ஏற்றுக் கொள்கின்றனர் போலும்.

அதேவேளை ஐநாவின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் பத்தாயிரம் சொற்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை தயாரித்து கடந்த 26ம் திகதி இதனைச் சமர்ப்பித்திருக்கின்றார். மேலும், ஐந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் இராணுவத்தினர் குற்றம் இழைத்தாக அறிவித்த அறிக்கையையும், அரச சார்பற்ற நிறுவனத்தின் அறுபது சாட்சியாளர்கள் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ள நிலையில், இலங்கைவாழ் முஸ்லிம்களின் மீது கொட்டப்படுகின்ற பிரச்சினைகளும் எதிர்காலத்தில் ஜெனீவாக் களத்தில் இலங்கைமீது களைகட்டும் என்பது உறுதி. இதில் முஸ்லிம் தலைமைகள் தங்களது சமூகத்தின் ஆதரவுகள் தொடர்ந்து தேவையாக இருக்குமானால் தங்களுக்குள் பிரிவினைகளைத் தோற்றுவிக்காது ஒரு முகமாய் செயற்படவேண்டுமென்பதே சாதாரண மக்களின் கோரிக்கையாகும்.

சிங்கள ராவய அமைப்புக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

இதேவேளை முஸ்லிம் தலைவர்கள் எவருமே செய்ய துணியாத ஒரு காரியத்தை அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவர் எதிர்த்து பொலிசில் முறையிட்டுள்ளார். அதாவது அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக கடும் பிரச்சினைகளைத் தோற்றுவித்து வருகின்ற கடும்போக்கு சிங்கள ராவைய அமைப்புக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை செய்துள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி அவர்கள். அக்கரைப்பற்று பொலிஸ்  நிலையத்தில் தான் வழங்கியுள்ள முறைப்பாட்டில்  சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளுக்கு எதிராக சிங்கள ராவைய அமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிசாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக தெரிய வருகின்றது.

சிங்கள ராவய அமைப்புக்கு எதிராக, பதிவு செய்துள்ள முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 17 மற்றும் 19 பெப்ரவரி 2014 ஆம் திகதிகளில் வெளியான தமிழ் தினசரி பத்திரிகையில் இரண்டு செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. மேற்படி செய்திகளின்படி, நாட்டில் மாடறுப்பினை அரசாங்கம் உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்றும், அப்படி தடைசெய்யாது விட்டால், சிங்கள ராவய எனும் அமைப்பிலுள்ளவர்கள் தமக்குத் தாமே தீவைத்து தற்கொலை செய்து கொள்வார்கள் எனவும் அந்த அமைப்பினர் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தினை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் எனவும் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ண என்பவர் கூறியிருந்தார்.

இந்தச் செய்திகளிலுள்ள விபரங்களை உள்ளடக்கி, மேலும் பல தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தன. சிங்கள ராவய எனும் அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன என்பவர், குறித்த கூற்றினூடாக, நமது நாட்டின் நடைமுறையிலுள்ள இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவுகளான 291 (ஆ), 300, 301, 485 ஆகியவற்றின் படி குற்றங்களைப் புரிந்துள்ளார். இதேவேளை, சிங்கள ராவய அமைப்பினர் ஆர்ப்பாட்டங்கள் எவற்றிலும் ஈடுபடுதல் கூடாது என்று, கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் கௌரவ ஜிஹான் பலப்பிட்டிய கடந்த 30 ஜனவரி 2014 ஆம் திகதி உத்தரவொன்றினை வழங்கியிருந்தார். ஆயினும், மேற்படி நீதிமன்ற உத்தரவினையும் மீறி, சிங்கள ராவய அமைப்பினர் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும், சத்தியாக்கிரக நடவடிக்கைகளிலும், மோதல்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

சிங்கள ராவய அமைப்பின் இந்த நடவடிக்கைகள், நமது நாட்டின் மதிப்புக்குரிய நீதித்துறையினை அவமதிக்கும் செயற்பாடுகளாகும். மேலும், அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், முஸ்லிம் சமூகத்தினரின் சமய உணர்வுகளை பாதிக்க வேண்டும் என்ற திட்டமான கெடு நோக்கத்தினையுடைய கருத்துடனும், சமய நம்பிக்கைகளை நிந்தனை செய்ய எத்தனிப்பதுடன், அச்சத்தையும் மனக் கிலேசத்தினையும் ஏற்படுத்தி, சர்வதேச சட்டமான வாழு – வாழ விடு என்பதையும் மீறும் வகையில் சிங்கள ராவய எனும் அமைப்பு அண்மைக் காலமாக நடந்து வருகிறது. இவையனைத்தும் சட்டத்தின்படி குற்றச் செயல்களாகும். சிறுபான்மையாக வாழும், சக இனத்தவர்களான முஸ்லிம்களை அச்சப்படுத்துவதுடன் நின்றுவிடாது, இலங்கையின் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படுகின்ற பௌத்த தர்மத்துக்கும், புத்தபெருமானின் போதனைகளுக்கும் முரணாக பொதுஜனங்களை பிழையான வழியில் நடத்துவதற்கும் சிங்கள ராவய அமைப்பானது எத்தனிக்கின்றது.

தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வதென்பதை புத்த பெருமான் அவர்களோ, அவர்களின் சீடர்களோ எப்போதும் அங்கீகரித்திருக்கவில்லை. பௌத்த கொள்கைகளின் பிரகாரம், நபரொருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வது, மிக மோசமானதொரு முன்னுதாரணச் செயற்பாடாகும். அந்தவகையில், மனித உயிர்களை தீக்குளிக்கச் செய்து தற்கொலை புரியத் தூண்டுவதென்பது பௌத்த தர்மத்துக்கு மட்டுமன்றி, நாட்டின் சட்டத்துக்கும் எதிரான செயற்பாடாகும்.ஆகவே, இவ்வாறு சட்டம், ஒழுங்கு, நீதித்துறை, மனித நாகரீகம் மற்றும் பௌத்த தர்மம் போன்றவற்றினை பகிரங்கமாக மீறிச் செயற்படும் சிங்கள ராவய அமைப்பின் தலைவரையும், இந்த செயற்பாடுகளுடன் தொடர்புடைய சிங்கள ராவய அமைப்பின் நபர்களையும் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வினயமாக கேட்டுக் கொள்கிறேன். எனவும் அந்த முறைப்பாட்டில்  கூறப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலமாகத் தெரியவருகின்றது.

கட்சியரசியலுக்கு அப்பால் தன்னுடையதும், தனது சமூகத்தினதும் உரிமைகளை தட்டிக் கேட்க ஒருவராவது இருக்கின்றாரே என்று கூறும் அளவுக்கு நாட்டில் இன்று பேரினவாதிகள் சிலரின் அடாவடிகள் நாட்டில் வாழும் ஏனைய இனங்களை நிரந்தரமாக வாழ்வதற்கான அத்திவாரத்தையே ஆட்டங்காணச் செய்துள்ளது. இந்நிலையில் முஸ்லிம்களின் அரசியல் அதிகாரங்களை தட்டிக் கேற்கின்ற நிலையை தோற்றுவிக்க முஸ்லிம் தலைமைகள் ஒற்றுமைப்படுவதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன. இதனை எதிர்வரும் தேர்தல்களின் போது வாக்காளர்கள் தங்களது உரிமைகளை சரியான முறையில் இட்டு சுகபோகம் அனுபவிக்கும் சுயநல அரசியல்வாதிகளை முடிவுக்குக் கொண்டுவர தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டும்.

No comments

Powered by Blogger.