பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை கண்டித்து அமைச்சர் றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கை
1990ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து புலிகளால் விரட்டப்பட்டு கடந்த 24 வருடங்களாக அகதி முகாம்களிலும் ஓலைக் கொட்டில்களிலும் அவதி வாழ்க்கை வாழ்ந்து வரும் வடபுல முஸ்லிம்கள் மீண்டும் சமாதான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து தாம் வாழ்ந்த பிரதேசங்களில் குடியேறும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முயற்சியை தடுக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பு அண்மையில் பல்வேறு காழ்ப்புணர்வு கொண்ட கருத்துக்களை பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் பரப்பி வருகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மிகவும் கேவலமான, கீழ்த்தரமான கருத்துக்களை தெரிவித்துவரும் பொதுபலசேனா தற்போது இன்னொருபடி மேல் சென்று பாதிக்கப்பட்ட வடபுல முஸ்லிம்களையும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியான என்னையும் திட்டமிட்டு கேவலப்படுத்தி வருகின்றது.
பொய்யான செய்திகளை பரப்பி சிங்கள சமூகத்தையும் எம்மையும் பிரிக்கும் வகையிலான திட்டமிட்ட செயற்பாடுகளை செய்து வருகின்றனர். பத்து வீதமான முஸ்லிம்களுக்கு எதிராக 70 வீதமான பௌத்த சமூகத்தை திருப்பி விடுவதே இவர்களின் உள்நோக்கமாக இருக்கின்றது. வில்பத்து சரணாலய காடுகளை அழித்து பிறமாவட்ட முஸ்லிம்களை அங்கு நான் குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த பிரதேசத்தில் பல்வேறு கொட்டில்களை அமைத்துள்ளதாகவும் கதையளந்திருக்கும் இந்த பொதுபலசேனா மன்னாரிலிருந்து வில்பத்துவரையான பிரதேசத்தை அண்டி 'முஸ்லிம் மாநிலம்' ஒன்றை அமைப்பதற்கான செயற்பாடுகளில் நான் ஈடுபடுவதாகவும் மன்னாரில் 'அரபுக்கொலனி' ஒன்றை நான் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் விஷமப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்கள்மீது பொதுபலசேனா அடக்கு முறைகளையும் அட்டூழியங்களையும் பிரயோகித்து வருகின்றது.
முஸ்லிம்களின் ஹலால் உணவு விடயத்திலும் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் தொடர்பாகவும் தேவையற்ற தலையீடுகளை மேற்கொண்டு எமது இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
இவர்கள் எமது மத உரிமைகளில் வீணாக தலையிட்டும் வருகின்றனர். இலங்கை அரசியல் அமைப்பின்படி பிரஜையொருவர் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றவோ அனுசரிக்கவோ முடியுமென கூறப்பட்டுள்ளபோதும் பொதுபலசேனா எமது இஸ்லாமிய மதத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
முஸ்லிம்கள் உணவை வழங்கும்போது எச்சிலைத்துப்பி வழங்குவதாகவும் கதை அளக்கின்றனர்.
பொதுபலசேனாவின் இவ்வாறான கூற்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ எந்த அத்தியாயத்தில் எத்தனையாம் பக்கத்தில் உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
முஸ்லிம்கள் தொடர்பில் பொதுபலசேனா ஊடகங்களிலும் மேடைகளிலும் இவ்வாறான நச்சுக் கருத்துக்களை தெரிவித்து வருவதன் உள்நோக்கம்தான் என்ன?
இதற்கு ஏதேனும் பின்புலங்கள் உண்டா?
சமாதானம் ஏற்பட்டபின்னர் அதனை அநுபவிக்க வேண்டுமென இந்நாட்டில் வாழும் இருபது இலட்சம் முஸ்லிம்கள் ஆர்வமுடனும் விருப்புடனும் இருக்கும் இந்த காலகட்டத்தில் பொதுபலசேனா போன்ற இனவாத, காழ்ப்புணர்வு கொண்ட சக்திகளின் செயற்பாடு முஸ்லிம்களை மிகவும் மனஉளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாக்கி வருகின்றது.
வில்பத்து காட்டை துப்பரவு செய்து பிறமாவட்ட முஸ்லிம்களை அங்கு குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் மன்னாரில் அரபுக்கொலனியொன்றை நான் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொதுபலசேன அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக நான் சட்டநடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன்.
என்மீதான இத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்காக அவர் இரண்டுவார காலத்திற்குள் தனது கூற்று தவறென்று பகிரங்க மன்னிப்புக் கேட்காத பட்சத்தில் 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றனத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன். இது தொடர்பான கோரிக்கை கடிதமொன்றை( டுநவவநச ழக னுநஅயனெ) எனது சட்டத்தரணியூடாக அனுப்பி வைத்துள்ளேன்.
முஸ்லிம்களின் மதவிடயங்களிலும் கலாச்சார, உணவு முறைகளிலும் திட்டமிட்டு தலையீடு செய்யும் இந்த பொதுபலசேனா தமது நடவடிக்கைகளை கைவிடாத பட்சத்தில் சட்டரீதியாக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அத்தனையையும் நான் தலைமை வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் நானும் எடுப்போம் என மிகவும் உறுதியாக தெரிவிக்க விரும்புகின்றேன். எங்கள் சமூகத்தின்மீது காழ்ப்புணர்வு கொண்டு குரோத உணர்வுடன் அபாண்டமான பழிகளை சுமத்தும் பொதுபலசேனா தமது நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
Yes take actions to bring him to the end, he who created very bad shame to the whole Sri Lankan community, very soon all Arabic Countries also will come to know the real picture of him and his supporters. If anyone divide the human based on filthy diversions never find a peaceful path,
ReplyDeleteLog a file in Court rather than issuing statements..............
ReplyDeleteSuper thalaiwa weldone
ReplyDelete