Header Ads



முஸ்லிம் காங்கிரஸினை ஆதரிக்குமாறு வேண்டுகோள்..!

மேல் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் தொழிலதிபருமான யு.ரி.எம். அன்வர் மலாய் சமூகத்தினருக்கு விடுத்துள்ள பகிரங்க வேண்டுகோள்.

பண்டைக்காலம் தொட்டு இலங்கைக்கு வருகை தந்த எமது மூதாதையினரான மலாயர்களின் பரம்பரையில் வந்த நாங்கள் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியதோடு,  மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களுக்கும் விசுவாசமாக நடந்து கொண்டு, நாட்டின் பாதுகாப்புக்கும், அபிவிருத்திக்கும் பாடுபட்டிருக்கிறோம். 

பொலிஸ், இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றிலும் கடமையாற்றி, பிரிவினைக்கு எதிராக நின்று நாடு பிளவுபடாமல் இருப்பதற்காக போராடி, உயிர்களைக் கூட தியாகம் செய்திருக்கிறோம். 

நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கக் கூடிய வேலை நிறுத்தம், ஹர்த்தால், தீவிரவாத நடவடிக்கைகள் என்பவற்றில் ஈடுபாடு காட்டாத சமூகத்தினராக வாழ்ந்து வருகிறோம். 

நாட்டின் பாதுகாப்புக்கும், பொருளாதராத்துக்கும், சுபீட்சத்துக்கும் உச்சகட்ட பங்களிப்பைச் செய்த எமது மலாய் சமூகத்திற்கு அரசாங்கங்கள் என்ன கைமாறு செய்தது என்பது கேள்விக்குறியாகும். 

புகழ்பூத்த எமது அரசியல் தலைவர் கலாநிதி ரி.பி. ஜாயா அவர்களின் மறைவுக்குப் பின்னர் எமது சமூகம் அரசியல் அநாதையாக்கப்பட்டிருக்கிறது. 
மாலுமி இல்லாத கப்பலைப் போன்று, வழிகாட்டல் இல்லாத சமூகத்தினராக கல்வி,  வேலைவாய்ப்பு, வர்த்தகம் போன்றவற்றில் வாய்ப்புகளை இழந்தவர்களாக வாழ்ந்து வருகிறோம். 

சமூக உணர்வோடு மலாயர்களான நாம் மீண்டும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமானால் நாம் அனைவரும் ஐக்கியப்பட வேண்டும். 

இந்தப் பின்னணியில், எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் பத்து பேருக்கு குறையாத மலாயர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இது மிகவும் ஆரோக்கியமானது. மலாய சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கும் விருப்பு வாக்குகளை அளிப்பதன் ஊடாக எமது சமூகத்திலிருந்தும் ஒருவரை மாகாண சபைக்கு தெரிவு செய்வதன் மூலம் உரிமைகளை வென்றெடுக்க முடியும். 

பேரம் பேசி, காரியங்களை சாதிக்கும் சாணக்கியம் எங்களுக்கு அவசியமாகும்.  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் முன்னோடியாக இருந்து பெற்றுத் தந்த தீர்மானிக்கும் அந்தஸ்த்து என்பதை மலாய் சமூகமும் ஏனைய முஸ்லிம்களோடு ஒன்றிணைந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

'முடியும்'  (போலெ) என்ற கோஷத்தால் மலேசியாவை உன்னத நிலைக்கு டாக்டர் மஹத்திர் முஹம்மதினால் இட்டுச்செல்லக் கூடியதாக இருந்திருக்கிறது என்றால், எல்லா நாடுகளிலும் வசிக்கும் மலாயர்களும் ஓவ்வொரு மஹத்திர்களாக மாற வேண்டும். 

மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் ரீ.கே. அசூர்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டு எமது சமூகம் கண்ணியப்படுத்தப்பட்டது.   

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தில் ரீ.எம். அன்வர் உலுமுத்தீன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டு இந் நாட்டு மலாய் சமூகம் கௌரவப்படுத்தப்பட்டிருக்கிறது. 
மேல் மாகாண சபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ரசாக் என்ற மலாய் வேட்பாளர் முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடுகின்றார். 

கொழும்பு மாவட்டத்தில் 10 மலாயர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அத்துடன், முதன்மை வேட்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அப்துல் ஹை யின் தாயாரும், முன்னாள்  மாகாண சபை உறுப்பினரும், வேட்பாளருமான அர்ஷத் நிஸாம்தீன் தாயாரும் மலாய் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தேர்தல் முடிவடைந்த பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கீழ் மலே காங்கிரஸ், மலே உலமா காங்கிரஸ் ஆகிய அமைப்புக்களை ஏற்படுத்துவதற்கு கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தீர்மானித்திருக்கிறார். 

ஆகையால், மேல் மாகாணத்தில் வசிக்கும் மலாய் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அனைவரையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்திற்கு மட்டுமே வாக்களிக்குமாறும், விருப்பு வாக்குகளை அளிக்கும் போது மலாய் சமூக வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், தொழிலதிபருமான யு.ரி.எம். அன்வர் கொம்பனித்தெருவில் சனிக்கிழமை (22) நடைபெற்ற சந்திப்பொன்றில் மலாய் சமூக வாக்காளர்களை மிகவும் வினயமாக வேண்டிக்கொண்டார். 
   

No comments

Powered by Blogger.