பார்வை இழக்கவுள்ள சிறுவன் - உலகை சுற்றிக்காட்டும் பெற்றோர்
நியூசிலாந்தைச் சேர்ந்த கோர்பெட் தம்பதியினரின் மூன்று மகன்களுக்கும் பரம்பரையான அரிய வகை விழித்திரை நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அவர்களது இரண்டு மகன்கள் ஏற்கனவே கண்பார்வையை இழந்துவிட்டனர். தற்போது 12 வயது நிரம்பிய அவர்களது இளைய மகனான லூயி கோர்பெட்டும் விரைவில் தனது பார்வையை இழக்க நேரிடும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்ற வருடமே அவனுக்கு 50 சதவிகித பார்வைத்திறன் குறைந்துவிட்டது.
இதனால் அவன் விரும்பும் இடங்களுக்கு எல்லாம் அவனை அழைத்துச் சென்று காட்ட அவனது பெற்றோர்கள் முடிவு செய்தனர். அமெரிக்காவின் கிரான்ட் கன்யான் பள்ளத்தாக்கு, நயாகரா நீர்வீழ்ச்சி, எம்பயர் ஸ்டேட் பில்டிங், கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமையகம் போன்ற இடங்களைத் தேர்வு செய்த அந்த சிறுவன் அமெரிக்காவின் பிரபலமான கூடைப்பந்து போட்டி ஒன்றையும் பார்க்க விருப்பப்பட்டான்.
பாஸ்டனுக்குச் சென்று அவனது விருப்ப அணியான செல்டிக்ஸ் அணியினர் விளையாட உள்ள போட்டியைப் பார்க்கவேண்டும் என்பதே அவனது முதல் தேர்வாக இருந்தது.
பாஸ்டனில் தனது சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்திவந்த லூயியின் பக்கத்து வீட்டுக்காரரான வாரன் கேஸியும், அவரது தொழில்முறைப் பங்குதாரர்களும் தங்களது சொந்தப் பணத்திலிருந்தும், திரட்டப்பட்ட நன்கொடைகள் மூலமும் லூயியின் விருப்பங்களை நிறைவேற்ற முன்வந்தனர். நான்கு வாரங்களுக்குள்ளாகவே 25,000 டாலர் தொகை இந்தத் திட்டத்திற்காக சேர்ந்தது.
சமூக இணையதளத்தின்மூலம் இதனைப்பற்றி அறிந்துகொள்ள நேர்ந்த செல்டிக்ஸ் அணியின் உரிமையாளரும் பழம்பெருமை வாய்ந்த விழிஇழந்தோருக்கான பெர்க்கின்ஸ் பள்ளியின் நிர்வாகியுமான கோரின் குரூஸ்பெக் அந்த சிறுவனுக்கு வேண்டிய மற்ற அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புற செய்யத் திட்டமிட்டுள்ளார்.
தங்களது பள்ளிக்கான சிறப்பு நிகழ்ச்சியாக வரும் 5ஆம் தேதி நடைபெறும் போட்டியைப் பார்வையிடும் அந்த சிறுவன் மசாசுசெட்சில் உள்ள கண் மற்றும் காது மருத்துவமனையிலும் தனது ஒரு நாளைக் கழிக்க வேண்டிய ஏற்பாடுகளை அவர் செய்து தருகின்றார். இந்த வாய்ப்பு அவனது நினைவில் என்றுமே இருக்கும் என்பது அவரின் கருத்தாக இருக்கின்றது.
Post a Comment