Header Ads



''ஏப்ரல் பூல்'' உலக முட்டாள்கள் தினம் பற்றிய ஆக்கம்...!

(Rasminmisc)

ஏப்ரல் மாதம் முதலாம் நாள் உலக முட்டாள்கள் தினமாக உலகம் முழுவதும் பேசப்படுகின்றது. பொய் பேசுவதற்கும், ஏமாற்றுவதற்கும் அனுசரனை அளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தினத்தில் பொய் சொல்வது வாடிக்கையாகவும், பெருமையாகவும் நினைக்கப்படும் அளவுக்கு இந்நாள் முக்கியமானதாக பேசப்படுகின்றது.

ஆம் உண்மை பேசி, ஏமாற்றாமல் கௌரவமாக வாழக் கூடிய மனிதர்களாக இருந்தால் கூட இந்நாளில் அவர்களையும் கேவலப்படுத்தும் விதமாக பொய் சொல்லி கலாய்க்கும் வழமை உருவாகியுள்ளது கவலைக்குறியதே!

முட்டாள்கள் தினத்தின் அடிப்படை.

ஏப்ரல் முதலாம் தேதி முட்டால்கள் தினமாக கொண்டாடப்படுவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றில் மிக நெருக்கமான காரணமாக இதுதான் பார்க்கப்படுகின்றது.

பிரேஞ்சு நாட்டின் ஒன்பதாம் சார்லஸ் மன்னன் கிரிகோரியன் கலண்டரை கி.பி. 1582 முதல் நடைமுறைப்படுத்தினார். அன்றிலிருந்து புத்தாண்டு ஜனவரி 01 என்று ஆனது. ஆனால் அதற்கு முன்புவரை மார்ச் 25 முதல் ஏப்ரல் 01 வரை எட்டு நாட்கள் புத்தாண்டு கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த அக்கால மக்களுக்கு, அந்தப் பழக்கத்தைத் திடீரென்று மாற்றிக்கொள்ள முடியவில்லை.

புத்தாண்டை ஜனவரி 01 ஆக ஏற்றுக் கொண்டு, புதிய முறைக்கு மாறிவிட்ட மக்கள், பழமை விரும்பிகளை “இன்னும் மாறாமல் அப்படியே இருக்கின்றீர்களே?” என்று கேலி செய்ய ஆரம்பித்த நாள்தான் முட்டாள்கள் தினத்துக்கு அடிப்படை என்கிறார்கள்.

எது எப்படியோ அடுத்தவரின் மனதை நோகடிப்பதற்கு, மற்றவர்களை அவமானப்படுத்தி சிரிப்பதற்கு ஏற்ற வகையில் ஒரு நாளை உலகமே கூடி ஏற்றுக் கொண்டிருப்பது என்பது மிகவும் வருத்தத்திற்குறியதே!

சிந்திப்பவர்களை உருவாக்கிய இனிய இஸ்லாம்.

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரையில் இஸ்லாம் உலக மக்களை சிந்திக்கக் கூடிய சிறப்பானவர்களாக உருவாக்குகின்றதே தவிர, சிந்தனையற்ற மடையர்களுக்கு இஸ்லாம் இடமளிக்கவில்லை.

இஸ்லாம் சொல்லக் கூடிய எந்தச் செய்தியானாலும் அதனை சிந்தித்து ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, சிந்தனையற்றவர்களாக கண்டதே காட்சி என்ற கோணத்தில் முகம் குப்புற விழுவதை இஸ்லாம் ஒரு போம் அனுமதிக்கவில்லை.

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். 

(அல்குர்ஆன் 25:73)

மேற்கண்ட வசனத்தின் மூலம் இறைவன் தனது வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளும் உண்மை முஃமின்கள் கருத்துக் குருடர்களாக அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், சிந்தித்து ஏற்றுக் கொள்வார்கள் என்று தெளிவாக உணர்த்துகின்றான்.

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? 

(அல்குர்ஆன் 47:24)

பொதுவாகவே இஸ்லாத்தின் அனைத்து அம்சங்களும் சிந்தனையுடன் தொடர்புடையது, மற்றவர்களை மடையர்களாக்கும் செயல்பாடுகள் அற்றது என்பதற்கு மேற்கண்ட வசனம் சாட்சியாக உள்ளது.

ஏமாற்றுபவர் நம்மைச் சார்ந்தவரல்ல.

பொதுவாகவே யாரையும் யாரும் ஏமாற்றுவதை இஸ்லாம் கண்டிக்கின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது.

உடனே அவர்கள் “உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!”என்றார். அப்போது அவர்கள், “ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, “மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம் 164)

அன்றாடம் நாம் செய்யும் வியாபாரத்தில் கூட மற்றவர்களை ஏமாற்றி மோசடி செய்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. விற்பனைப் பொருட்களில் குறை இருந்தால் அவற்றை குறிப்பிட்டு விற்க வேண்டும் என்றுதான் உத்தரவிடுகின்றது.

யார் குறையை குறிப்பிடாமல் ஏமாற்றி மோசடி செய்கின்றாரோ அவர் நம்மை சார்ந்தவர்கள் அல்ல என்று நபியவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்யுமளவு ஏமாற்றுதல் என்பது படு பயங்கரமான குற்றமாகவுள்ளது.

வியாபாரத்திலேயே ஒருவரை ஏமாற்றக் கூடாது என்றால் சர்வ சாதாரணமாக பொய் சொல்வதற்காக ஒரு நாளை ஒதுக்கி மற்றவர்களை ஏமாற்றி, கேளி, கிண்டல் செய்வதை மார்க்கம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

முட்டால்கள் தினத்தை முழுமையாக மறுக்கும் இஸ்லாம்.

அடுத்தவர்களை கேளி செய்து, பொய் சொல்லி, முட்டாள்களாக்கும் காரியத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்றது.

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 49:11)

நாம் தான் உலகின் மிகச் சிறந்தவர்கள், அறிவாளிகள், சிந்திப்பவர்கள் என்று நினைத்துக் கொண்டு மற்றவர்களை பல சந்தர்பங்களில் முட்டாள்களாக ஆக்குவதற்கு முயற்சிப்பதுண்டு. அப்படி செய்வதை மேற்கண்ட வசனம் முழுவதுமாக தடை செய்து எச்சரிக்கை செய்கின்றது.

மற்றவர்களை கேளி செய்து கிண்டல் செய்பவர்கள், கேளி செய்யும் தம்மை விட கேளி செய்யப்படும் மனிதர் சிறந்தவராக இருக்கக் கூடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே அன்பின் சகோதரர்களே மார்க்கம் தடுக்கும் பொய், ஏமாற்று போன்றவற்றை தவிர்ந்து உலக முட்டால்கள் தினம் என்று முட்டாள்களினால் உருவாக்கப்பட்டுள்ள ஏப்ரல் முதலாம் நாளிலும் சரி மற்ற நாட்களிலும் சரி பொய் சொல்வதை விட்டும் நம்மை நாமே தடுத்து, தவிர்ந்து மறுமையில் வெற்றி பெருவோமாக!

No comments

Powered by Blogger.