பேஸ்புக் மூலமாக அரசாங்கத்திற்கு எதிரான அலையை ஏற்படுத்த முடியாது - ஜாதிக ஹெல உறுமய
பேஸ்புக் சமூக வலைத்தளத்தை தடை செய்யும் முயற்சியின் பின்னணியில் பௌத்த விரோத சக்திகள் இருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
கடந்த தினங்களில் நடந்த தற்கொலை சம்பவங்கள் உட்பட சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு எதிராக சமூகத்தில் கருத்தொருமிப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்துள்ளமை தெளிவானது.
பேஸ்புக் என்பது உலகில் உள்ள சமூக வலைத்தளங்களில் முன்னணி வலைத்தளமாகும். கடந்த காலங்களில் பேஸ்புக் வலைத்தளம் சர்ச்சைக்குரிய தலைப்பாக உலகில் மாறியிருந்தது. அரபு நாடுகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட புரட்சியினால், அந்நாடுகளின் அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டதே அதற்கு காரணம்.
அரபு நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளை அடுத்து இலங்கையிலும் அரச விரோத அலை ஒன்றை ஏற்படுத்த திடீரென முளைத்த கட்சி ஒன்றின் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இலங்கையில் பேஸ்புக் வலைத்தளம் மூலமாக அரசாங்கத்திற்கு எதிரான அலையை ஏற்படுத்த முடியாது. நாட்டை கவிழ்க்க வந்த புரட்சியாளர்களுக்கு செல்ல இடமில்லாது போனது.
இந்த நிலையில், ஹலால் பிரச்சினை, குருகல ஆக்கிரமிப்பு உட்பட அண்மையில் நடந்த சில தற்கொலை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு பேஸ்புக் வலைத்தளத்திற்கு எதிராக சமூகத்தில் கருத்தொருமிப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பௌத்த விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக பேஸ்புக் வலைத்தளத்தின் ஊடாக பாரிய சமூக கருத்தொருமிப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பது பௌத்த விரோத சக்திகளுக்கு மரண அடியாக மாறியுள்ளது.
எவ்வாறாயினும் அண்மையில் டுவிட்டரில் கருத்து பகிர்ந்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கம் இல்லை என தெரிவித்திருந்தார். அவரது தீர்மானம் காலத்திற்கு ஏற்ற புத்திசாலித்தனமான தீர்மாமாகும். எனினும் பௌத்த விரோத சக்திகளுக்கு பேஸ்புக் மூலம் செயற்படுத்தப்படும் சிங்கள பௌத்த நிலைப்பாடுகளை முடக்கும் பாரிய தேவையுள்ளது.
அத்துடன் பேஸ்புக் தடை செய்யப்பட்டால், இலங்கையில் கருத்து கூறும் சுதந்திரமில்லை எனவும் கருத்து சுதந்திரம் அடக்கப்படுகிறது என்றும் இந்த சிங்கள பௌத்த விரோத சக்திகள் பிரசாரங்களை முன்னெடுக்கும். இதனால் சகலரும் இந்த விடயம் குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment