விபச்சாரத்தில் ஈடுபட மறுத்த பெண்ணின் மார்பகத்தை துண்டித்து சித்ரவதை
(India) மகாராஷ்டிர மாநிலத்தின் பிவாண்டி நகரம் ஜவுளித் தொழிலுக்கு பெயர் போன இடமாக உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இங்கு வந்து, தங்கி வேலை செய்கின்றனர்.
தனிமையில் தங்கியிருக்கும் ஆண்களை திருப்திப்படுத்த இப்பகுதியில் விபச்சார விடுதிகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளிக்க உள்ளூர் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால், வெளி மாநிலங்களில் இருந்து புரோக்கர்களின் மூலம் பெண்களை வரவழைத்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்தி, இப்பகுதியில் விபச்சார விடுதி நடத்துபவர்கள் லாபம் சம்பாதித்து வருகின்றனர்.
அவ்வகையில், சமீபத்தில் குஜராத்தில் இருந்து புதிதாக அழைத்து வரப்பட்ட 29 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை விடுதியின் முதலாளி ரூபி என்பவர் கடந்த சனிக்கிழமை ஒரு வாடிக்கையாளரை திருப்திப்படுத்த அனுப்பி வைத்தார். இதற்கு இணங்காமல் அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் ஆவேசமடைந்த ரூபி தன்னுடன் இருந்த ஆண் அடியாட்களின் துணையுடன் அவரது மார்பகங்களை துண்டித்து சித்ரவதை படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்ட சிலர் அந்த விபச்சார விடுதிக்குள் நுழைந்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, தானே மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் விபச்சார விடுதியின் உரிமையாளரான ரூபியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக இருக்கும் அவரது அடியாட்கள் இருவரை தேடிவரும் போலீசார், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் பாதிக்கப்பட்ட பெண், இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் உள்ளதாகவும், அதனால் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.
Post a Comment