Header Ads



"கொழும்பு வாழ் கிழக்கு மாகாண முஸ்லிம்களிடம், ஒரு மன்றாட்டமான வேண்டுகோள்"

கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்து- சமூக இயக்கத்தை பலப்படுத்துமாறு கொழும்பு வாழ் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களிடம் மன்றாட்டமாக கேட்டுக் கொள்கின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"கொழும்பு வாழ் கிழக்கு மாகாண முஸ்லிம்களிடம் ஒரு மன்றாட்டமான வேண்டுகோள்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே ஏ.எம்.ஜெமீல் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"முஸ்லிம்களின் விடுதலைக்காகவும் உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்காகவும் மறைந்த பெரும் தலைவர் அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்ட நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நமது நாட்டின் அரசியல் சதுரங்கத்தில் மிகவும் பலத்துடன் பேரம் பேசும் சக்தியாக திகழ்வதன் மூலமே அந்த இலக்கை அடைந்து கொள்ள முடியும். 

அன்று மிகவும் அர்ப்பணிப்புடன் கட்டியெழுப்பப்பட்ட இக்கட்சியை காலத்திற்கு காலம் தமது பதவி- சுகபோகங்களுக்காக பயன்படுத்தியோரும் எதிரணி சக்திகளும் அழிப்பதற்கு முற்பட்ட வரலாறுகள் ஏராளம். அதுபோல் இன்று மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது இக்கட்சியை மண்கவ்வச் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தின் ஆசிவாதத்துடன் பெரும் பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருக்கின்ற போதிலும் முஸ்லிம் சமூகத்திற்காக தனித்துவத்துடன்- துணிச்சலாக குரல் எழுப்பி வருகின்ற ஒரே சக்தி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமைத்துவமும் தான் என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றலும் தைரியமும் வேறு எந்த முஸ்லிம் தலைமையிடமும் கிடையவே கிடையாது.

கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களின் இருப்பு, பாதுகாப்பு என்பன இன்று கேள்விக்குறியாக மாறியுள்ளது. பேரினவாத சக்திகள் மார்க்க ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இப்பகுதி முஸ்லிம்களை பெரும் நெருக்கடிக்குள் தள்ளி விட்டுள்ளனர். அன்று வடக்கில் இருந்து 24 மணி நேர அவகாசத்தில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது போல் கொழும்பு மாவட்டத்தில் இருந்தும் முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை.

கொம்பனித்தெரு போன்ற பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் நகரமயமாக்கல் என்ற போர்வையில் சென்ற வருடம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படியொரு நிலை கிழக்கு மாகாணத்தில் இருந்து புதிதாக குடியேறிய முஸ்லிம் மக்களுக்கு வர மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அப்படியொரு நிலை ஏற்படும் போது கொம்பனித்தெரு முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பி போராடியது போன்று செயற்படக்கூடிய ஓர் இயக்கமாக நம்மிடையே இருப்பது முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற சக்தி மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கொழும்பில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று பொதுபல சேனா சவால் விடுத்துள்ளதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அவர்கள் அதற்கான கடிவாளத்தை எடுக்கும் போது நமது நிலை என்ன? நமக்காக குரல் எழுப்பி போராடுவது யார்?  உண்மையில் அப்படியொரு சூழ்நிலையில் அதனை எதிர்த்து   போராட்டம் நடத்தி- கொழும்பில் நமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கான சக்தியும் திராணியும் முஸ்லிம் காங்கிரசுக்கு மட்டுமே உள்ளது. ஆகையினால் அந்த சக்தி அரசியல் ரீதியாக இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதை எவரும் மறுக்க முடியாது.

நமது ஊரைச் சேர்ந்த- நமக்குத் தெரிந்த முகமொன்று முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடவில்லை என்பதற்காக கொழும்பில் வாழ்கின்ற கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இத்தேர்தலில் வாக்களிக்காமல் அலட்சியமாக இருந்து விட வேண்டாம். அதே போன்று வேறு சில கட்சிகளில் நமக்குத் தெரிந்த முகமொன்று தேர்தலில் போட்டியிடுகிறது என்பதற்காக அக்கட்சிகளுக்கு வாக்களித்து விடாதீர்கள்.

தனி மனித அறிமுகம், நட்பு என்பவற்றை விட நமக்கான சமூக இயக்கத்தை பலப்படுத்துவதன் மூலமே கொழும்பில் நமது இருப்பையும் நமது பாதுகாப்பையும் த்தரவாதப்படுத்திக் கொள்ள முடியும் என்கின்ற விடயத்தை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு செயற்படுமாறு நான் இந்த சந்தர்ப்பத்தில் உங்களிடம் மன்றாட்டமாக கேட்டுக் கொள்கின்றேன்.

தேசிய கட்சிகளில் அல்லது வேறு குழுக்களில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்து உங்கள் பெறுமதியான ஆணையை தொலைத்து விடாதீர்கள். அவ்வாறு செய்வீர்களானால் அதற்காக பிறிதொரு சந்தர்ப்பத்தில் மிகவும் கை சேதப்பட்டு- வருந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நமக்கு ஏற்படும் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.

தேசிய கட்சிகள் மற்றும் குழுக்களில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு நாம் வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம் பிரதிநித்தித்துவங்க்களை பெற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் அவ்வாறு ஓரிரு பிரதிநிதித்துவங்கள் பெறப்பட்டாலும் அவை நமக்காக பேசக் கூடிய அருகதையையோ துனிச்சலையோ கொண்டவையாக இருக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

முஸ்லிம் சமூகம் இன்று எதிர்நோக்கியிருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு போன்ற பெரிய பெரிய பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள். உரிமையுடன் கூடிய அபிவிருத்தியினால் மட்டுமே நமக்கு விமோசனம் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.  

கொழும்பு மாவட்டத்தில் இன்று அபிவிருத்திப் புரட்சி ஏற்பட்டிருக்கின்ற போதிலும் அவற்றை நிம்மதியுடன் சுவாசிப்பதற்கான உரிமை முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டிருப்பதை இந்த சந்தர்ப்பத்தில் எண்ணிப்பாருங்கள். 

அபிவிருத்தி என்ற போர்வையிலேயே கொம்பனித்தெரு போன்ற பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் துரத்தப்பட்டுள்ளனர். அதன் பெயராலேயே இன்று சில பள்ளிவாசல்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நமது உரிமை, அபிலாஷை, இருப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றுக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாத சூழ்நிலையில் அபிவிருத்திக் கோஷம் போடுவதால் எவ்வித பயனும் கிடையாது என்பதையும் அது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கான மூலமாகவே அமையும் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

ஆகையினால் மாணவப் பருவத்திலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மறைந்த பெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் அரசியல் அரிச்சுவடியைக் கற்று- அவரது அரசியல் பேரம் பேசும் சக்தியினால் தென்கிழக்குப் பலகலைக்கழகத்தை ஸ்தாபிப்பதற்காக முன்னின்று உழைத்தவன் என்ற ரீதியிலும் இன்று கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை கொடுப்பவன் என்ற ரீதியிலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் கொழும்பு மாவட்டத்தில் வாழ்ந்து வரும் நிலையில் அவ்வாக்குகள் ஒருபோதும் வீணடிக்கப்பட்டு விடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் நான் மன்றாட்டமாக விடுக்கும் இந்த வேண்டுகோளை ஏற்று செயற்படுங்கள்.

தலை நகரில் நமது தலைவிதியை நாமே தீர்மானிப்போம். தேசிய கட்சிகளினாலோ அல்லது வேறு குழுக்களினாலோ நமக்கு விமோசனம் இல்லை. அவற்றுக்கு நாம் போடும் புள்ளடி நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கான ஒரு அங்கீகாரமே. தலை நகரில் நம்மையும் நமது சொத்துக்களையும் பாதுகாத்து- நிம்மதியுடன் வாழ்வதற்கான ஒரே தெரிவாக முஸ்லிம் காங்கிரசை ஏற்றுக் கொள்வோம். அதற்காக முன்னிற்போம்." என்று ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.