மலேசிய விமான பாகங்களை தேட இந்திய பெருங்கடலை அடைந்தது நார்வே கப்பல்
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து கடந்த 8 ஆம் தேதியன்று 239 பயணிகளுடன் புறப்பட்ட எம்எச்-370 என்ற மலேசிய விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் மாயமாய் மறைந்துபோனது. பல நாடுகளும் இந்த விமானத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை எந்தத் தகவலுமே கிடைக்காத நிலையில் நான்கு நாட்களுக்கு முன்னால் ஆஸ்திரேலிய நாட்டின் செயற்கைக்கோள் ஒன்றில், தெற்கு இந்தியப் பெருங்கடலில் இரண்டு துண்டுகள் மிதப்பதான பதிவுகள் தோன்றியுள்ளன.
இவை கடலுக்குள் மூழ்கிய விமானத்தின் சிதறல்களாக இருக்கக்கூடும் என்ற ஐயத்தை இன்று எழுப்பிய ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட், உடனடியாக அந்தப் பகுதிக்கு நான்கு விமானங்களை அனுப்பி தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார்.
அதுமட்டுமின்றி மடகாஸ்கரிலிருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு வந்துகொண்டிருக்கும் ஹோயேகின் என்ற நார்வே நாட்டு நிறுவனத்தின் சரக்குக் கப்பலையும் இந்தத் தேடுதல் முயற்சியில் உதவுமாறு ஆஸ்திரேலிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த கப்பல் தற்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் கார் தயாரிப்பு நிறுவனத்திற்கான போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டுள்ளது.
விமானத்தின் பாகங்கள் மிதப்பதாகக் கருதப்படும் இடம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து 2500 கி.மீ தொலைவில் உள்ள உலகின் ஆளரவமற்ற இடங்களில் ஒன்றாகும் என்று கூறப்படுகின்றது. மேலும், செயற்கைக்கோளில் தென்பட்ட இந்த இரண்டு பாகங்களில் ஒன்று சுமார் 24 நீளத்தில் பல ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கிடப்பதாகவும், மற்றொரு துண்டு 5 மீ நீளத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள இடத்தைத் தங்கள் கப்பல் அடைந்துவிட்டதாக நார்வே கப்பல் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதியில் தேடவேண்டும் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் தேவைப்படும்வரை நாங்கள் உதவவேண்டும் என்று கார் தயாரிப்பு நிறுவனத்தின் தகவல் தொடர்பாளரான கிறிஸ்டியன் ஓல்சன் தெரிவித்துள்ளார்.
Post a Comment