மாயமான விமானம் குறித்து தவறான தகவல் அளிப்பதா? : மலேசிய அரசு மீது சீன உறவினர்கள் ஆத்திரம்
"மலேசியாவிலிருந்து, சீனா புறப்பட்டு சென்ற, மாயமான விமானம் குறித்து தவறான தகவல்களை அளிக்கும், மலேசிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்' என, இந்த விமானத்தில் பயணித்த, பயணிகளின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர். மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, இம்மாதம், 8ம் தேதி, சீன தலைநகர், பீஜிங் நோக்கி புறப்பட்ட விமானம், மாயமானது. வியட்நாம் எல்லை பகுதியில் சென்றபோது, தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்த இந்த விமானத்தில், 239 பேர் பயணித்துள்ளனர். இதில், ஐந்து இந்தியர்களும் அடக்கம். இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து, 2,500 கி.மீ., தொலைவில், உடைந்த விமானத்தின் பாகம் மிதப்பதாக, ஆஸ்திரேலிய கடற்படை விமானத்தில் பறந்த வீரர்கள் தெரிவித்தனர்.
செயற்கைகோள்கள் : இதே பகுதியில், உடைந்த பொருள் ஒன்று மிதப்பதை, சீனா, தாய்லாந்து, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளின் செயற்கைக்கோள்கள் படம் எடுத்து அனுப்பியிருந்தன. உடைந்த பொருட்கள் மிதக்கும் இடத்தில், ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா, நார்வே உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களும், எட்டு விமானங்களும் மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. சம்பவ இடத்தில் நிறைய பொருட்கள் மிதப்பதால், அந்த இடத்தில் விமானம் மூழ்கியிருக்கலாம், என, ஆஸ்திரேலிய அரசு நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இதற்கிடையே, மலேசிய பிரதமர், நஜிப் ரசாக், கடந்த வாரம் அளித்த பேட்டியில் குறிப்பிடுகையில், ""மாயமான பயணிகள் விமானம், இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி இருக்கலாம்; எனவே, அதில் பயணித்த பயணிகள், உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. பிரிட்டன் செயற்கைக்கோள் அளித்த தகவலின் பேரில் இந்த முடிவுக்கு வந்துள்ளோம்,'' என, தெரிவித்துள்ளார்.
விமானம் விபத்துக்குள்ளானதாக, மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளதால், இந்திய பெருங்கடலில், விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணியில், அமெரிக்கா கப்பல் ஈடுபட்டு உள்ளது.
விமானத்தின் பாகங்கள் : பல நாடுகளின் கப்பல்களும், விமானங்களும், இந்திய பெருங்கடலில் மிதக்கும் பொருட்களை ஆய்வு செய்ததில் அந்த பொருட்கள், மலேசிய விமானத்தின் பாகங்கள் என, இதுவரை உறுதி செய்யவில்லை. இதனால், கோபமடைந்த, சீனப் பயணிகளின் உறவினர்கள், கோலாலம்பூர் வந்துள்ளனர். அவர்கள் நேற்று, நிருபர்கள் கூட்டத்தில் கூறியதாவது: மலேசிய விமானம், 23 நாட்களாக காணவில்லை. அந்த விமானத்தை பற்றி, மலேசிய அரசு தவறான தகவல்களை தந்து கொண்டிருக்கிறது. இதற்காக, மலேசிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறும் மலேசிய பிரதமர், அதற்குரிய ஆதாரங்களை அளிக்க வேண்டும். எங்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காணாமல் போன எங்கள் உறவினர்களை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். விமானம் விபத்துக்குள்ளான இடம் சரியாக தெரியாததால், கருப்பு பெட்டியை தேடுவது சிரமமாக உள்ளதாக, அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment