Header Ads



மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க அமெரிக்கர்கள் வருகிறார்கள்


இந்திய கடலில் விழுந்து மூழ்கிய மலேசிய விமானத்தை கண்டு பிடித்து மீட்க முடியுமா? என்ற கருத்து நிலவுகிறது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு கடந்த 8–ந்தேதி 239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. அது புறப்பட்ட 2 மணி நேரத்தில் தெற்கு சீன கடலுக்கு மேலே பறந்த போது, நடுவானில் மாயமானது. விமான கட்டுப்பாட்டு அறையுடன் ஆன தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாயமான விமானத்தை இந்தியா, அமெரிக்கா உள்பட 26 நாடுகள் தீவிரமாக தேடி வந்தன. போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அதை தேடி வந்தன.

ஆனால் அது குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து செயற்கைகோள் நிறுவனம் மற்றும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் பேரில் 17 நாட்களுக்கு பிறகு அந்த விமானம் குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டது.

அதன்படி தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து சுமார் 2500 கி.மீட்டர் தூரத்தில் அந்த விமானம் கடலுக்குள் நொறுங்கி விழுந்ததாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதன்மூலம் மாயமான மலேசிய விமானம் குறித்த தகவல் 17 நாட்களுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக கடலில் மூழ்கி கிடக்கும் விமானத்தை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது உடைந்து விழுந்து நொறுங்கிய விமானம் கடலுக்குள் 20 ஆயிரம் அடி ஆழத்தில் கிடப்பது தெரியவந்தது. கடலுக்குள் விழுந்த விமானத்தில் இருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் (சிக்னல்) வந்து கொண்டிருப்பதாக இங்கிலாந்தின் இன்மர்சாட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அதன் தகவல் தொடர்பு கருவிகளில் ஒன்று செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

கடலில் மூழ்கி கிடக்கும் விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏனெனில் அதற்கான தொழில்நுட்பத்துடன் கூடிய கருவி அமெரிக்காவிடம் தான் உள்ளது.

அந்த கருவியின் உதவியால் விமானத்தின் உடைந்த பாகங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என ‘பென்டகன்’ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் தெரியும் பட்சத்தில் அதில் இருந்து வெளிவரும் சமிக்ஞைகள் (சிக்னல்) உதவியுடன் கருப்பு பெட்டியை மீட்க முடியும் என்று அமெரிக்காவின் 7–வது கப்பல்படை அதிகாரி கிறிஸ்புட்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இப்பணியில் நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள் பயன்படுத்த உள்ளனர். கருப்பு பெட்டியின் பேட்டாரி தற்போது செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.