Header Ads



நாட்டிற்கு முஸ்லிம்கள் துரோகம் செய்யமாட்டார்கள், ஆனால் தேசத் துரோகிகள் என முத்திரை குத்தப்படுகிறது


தாம் பிறந்த நாட்டிற்கு முஸ்லிம் மக்கள் துரோகம் செய்ய மாட்டார்கள் எனவும் இலங்கையில் அவர்களை ஒரு இனமாக ஏற்றுக்கொள்ளாதவர்களே தேசத்துரோகிகள் எனக் கூறுவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான அறிக்கை ஒன்றை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினர் சுமத்தும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் சர்வதேச விசாரணைகளை கோரி வருவதுடன், போரில் சிங்களவர்களும், தமிழர்களும் பாதிக்கப்பட்டதாக கூறுகின்றனர். எனினும் முஸ்லிம் மக்களும் போரில் பாதிக்கப்பட்டனர் என்பதை எவரும் நினைவூட்டுவதில்லை.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இருந்தாலும் எம்முன் பல பிரச்சினைகள் உள்ளன. போர் நடைபெற்ற போதும் அதற்கு பின்னரும் முஸ்லிம் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேர்ந்தது. பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. எமது பிரச்சினைகளை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. எமது பிரச்சினைகளை எழுத்து மூலமாக அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியிருக்கின்றோம்.

அதேபோல் அதிகாரங்களை பரவலாக்குதல், 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது.

சில அமைச்சர்கள் முஸ்லிம் மக்களை தேசத்துரோகிகள் என முத்திரை குத்தி வருகின்றனர். இப்படியான பிரச்சினைகள் இருக்கும் போது ஏன் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருக்கின்றீர்கள் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏன் நாங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்?. அரசாங்கத்தில் இருப்பதால் எமது பிரச்சினைகளை சர்வதேசத்திடம் முன்வைப்பதில் தவறில்லை. எமது பிரச்சினைகளை கண்டும் காணாதவர்கள் போல் எம்மால் இருக்க முடியாது என ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நீங்கள் சொல்லுவதுதான் சரிபோல் தெறிகிறது,ஆமாம்,நாம் ஏன் அரசாங்கத்தை விட்டும் வெளியேரவேண்டும்?அது என்ன அப்பன் வீட்டு சொத்தா?நமக்கான பொது சொத்து,அதனை யாரும் சொந்தம் கொண்டுவிட முடியாது,வைத்திருப்பதா விளக்கிவிடுவதா என்பதை அரசே தீர்மானிக்க வேண்டும்.

    உள்வீட்டுக்குள் இருந்துகொண்டே சண்டை பிடிப்பவந்தான் உண்மையான வீரன்,வீட்டைவிட்டு வெளியே வந்து வீதியில் நின்றுகொண்டு வீட்டைப்பற்றி வீரம் பேசுவது உண்மை வீராப்பில்லை.

    பொதுபல சேனாக்கள்,ராவயக்கள் எல்லாம் கொடுக்கப்பட்ட பணத்தின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இயங்குவது போல,சில முஸ்லிம் அரசியல் வாதிகளும் பேரம் போய்விட்டார்கள்,மக்களே அவர்களை உணர்ந்து கொள்ளவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.