Header Ads



சிரியா, விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி (வீடியோ இணைப்பு)


சிரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள கசாப் பிராந்தியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராளிகள் அரசுத்துருப்புகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசுத்துருப்புகளின் உதவிக்கு வந்த போர்விமானம் ஒன்றை தங்களின் வான்எல்லைக்குள் வந்ததாகக் கூறி துருக்கி அரசு இன்று சுட்டு வீழ்த்தியுள்ளது. 

துருக்கியில் தனது ஆதரவாளர்கள் நடத்திய தேர்தல் பேரணியில் இந்தத் தகவலைத் தெரிவித்த துருக்கி பிரதமர் தையிப் எர்டோகன் தங்களுடைய வான் எல்லைக்குள் சிரியா விமானம் நுழைந்ததால் அதன் விளைவு கடினமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். 

ஆனால், போராளிகளின் நடவடிக்கை துருக்கி அரசால் ஆதரிக்கப்பட்டது என்று கூறும் சிரியா அரசுத்தரப்பு போராளிகளைக் கட்டுப்படுத்தும் செயலில் ஈடுபட்டிருந்த தங்களின் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இது அப்பட்டமான ஆக்கிரமிப்பு என்றும் சிரியா தெரிவித்துள்ளது. 

சிரியாவின் எல்லைப்பகுதிக்குள் தான் அந்த விமானம் இருந்ததாக ஆரம்பத் தகவல்கள் குறிப்பிட்டன என்று சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்புக் கழகம் தெரிவித்துள்ளது.விமானம் சுடப்பட்ட போது விமானி தப்பித்ததாகவும் சிரியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 

சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் நட்பு பாராட்டும் ஹெஸ்பொல்லா இயக்கத்தின் தொலைக்காட்சிப் பிரிவான அல் மனார் சிரியாவின் ஜெட் விமானத்தின் மீது துருக்கி இரண்டு ஏவுகணைகளை வீசி அழித்ததாகத் தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.