Header Ads



மகளிர் தினம்..!

(மனாருல் ஹுதா)

தற்போது உலகின் மானிட வர்க்கம் ஆண், பெண் என இரண்டு வர்க்கங்களாக பிரிந்து காணப்படுகின்ற போதிலும் அவ்விரு வர்க்ங்களும் சமமானது என்பதே யதார்த்தம்.

அன்றும் இன்றும் உலகம் முழுவதிலும் மார்ச் 08ம் திகதியே சர்வதேச மகளிர் தினமாக நம்மத்தியில் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம். 1989ம் ஆண்டு ஜுன் மாதம் 14ம் திகதி பாரிசில் பெண்கள், ஆண்களைப் போன்று சம உரிமைகளைப் பெற, கல்வித்துறையில் மேம்பட, வாக்குரிமை பெற, வேலைக்கேற்ற ஊதியம் பெற, பெண் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை போன்று அனைத்து துறைகளிலும் தங்களது உரிமைகளுக்காக போர்க் கொடிகளை உயர்த்தியவாறு பிரென்சுப் புரட்சியின்போது கிளர்ச்சிகளில் ஈடுபட்டார்கள். 

18ம் நூற்றாண்டுப் போராட்டத்தின் போது பெண்கள் போர்க்கொடி உயர்த்தியமைக்கான காரணம், ஆண்களுக்கு  கல்வித் துறை, அரசியல் உரிமை, விளையாட்டு, வாக்குரிமை மற்றும் தொழில் ரீதியாக உயர்ந்த தலைமை இடங்கள் வழங்கப்பட்டு அவ் அனைத்திலும் பெண்கள் புறக்கணிக்கப்பட்டதாலேயாகும். அப்போராட்டத்தில் அரசன் லூயிஸ் பிலிஃப் தங்களுக்கு உரிமை கேட்டு மாளிகைக்கு முன்னால் சில கோரிக்கைகளை முன்வைத்த, பெண்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான ஆண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் செய்து, ஆதரவு நல்கிய அனைவரையும் கைது செய்வோமென அச்சுறுத்திய அரசனின் மெய்ப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரையும் போராட்டக்காரர்கள் தாக்கி;க் கொன்றனர். இதை எதிர்பாராத லூயிஸ் பிலிஃப் அரசன் அதிர்ந்து போய் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இக்கோரிக்கைகளை தாம் பரிசீலித்து சாதகமான பதிலை அறிவிப்போம் என சமாதானப்படுத்திய அரசன் அக்கோரிக்கைகளை செயற்படுத்தத் தவறியமையால் பதவி துறந்தார். 

இச்செய்தியானது வேகமாக டென்மார்க், கிரீஸ், ஜேர்மன், ஆஸ்திரியா போன்ற ஐரோப்பிய நாடுகளில் பரவ அங்கும் பல போராட்டங்கள் நடந்தேறியது. அரசன் லூயிஸ் பிலிஃபிற்குப் பின்பு பதவியேற்றிய லூயிஸ் பிளார்க் அரசன் 1948ம் ஆண்டு மார்ச் மாதம் 08ம் திகதி பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க, உயர் கல்வியைத் தொடர, தொழில் வாய்ப்புகளைப் பெற, ஒப்புதல் அளித்த இத்தினமே சர்வதேச மகளிர் தினமாக உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்நாள் தங்களது குடும்பம், சமுதாயம், சமூகம், நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்களிப்புச் செய்த சாதாரண பெண்களை கௌரவிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பால் 1921ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இன்று ஆண்களைப் போன்றே அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற்றமடைந்து வருகின்றனர். 1948க்கு முன்னர் பெண்ணாணவள் தன் கணவனுக்கு மனச்சோகம், சமையல், உடலின்பம், குழந்தை வளர்ப்பு, குடும்பத் தலைவி போன்றவை தலையாய கடமையாக கருதப்பட்ட காலம் மறைந்து சுபீட்சம் உதயமாகியது. வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, ஆராய்ச்சியாளர்களாக, விஞ்ஞானிகளாக, சட்ட வல்லுனர்களாக, விண்வெளி வீரங்களைகளாக அனைத்திலும் ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் வலிமை உண்டு என்பதை உலகுக்கு சரித்திரம் படைத்து காண்பிக்கின்றனர். 

தெற்காசியாவில் எமது நாடே பெண்களுக்கு சம அந்தஸ்த்தை வழங்குகின்றது. அதற்கு ஆதாரமாக கீழே குறிப்பிடப்படும் பெண்களை உதாரணமாகக் கொள்ளலாம். 
திருமதி. அட்லின் மொலமுறே (அரசியல்: 1வது அரச பேரவை)
திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்க (இலங்கையினதும் உலகினதும் முதலாவது பெண் பிரதமர்)
திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்க (இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதி)
திருமதி. மேனகா. பெர்னான்டோ (இலங்கையின் முதலாவது பெண் விமானி)
திருமதி. சரோஜினி குசலா வீரவர்தன (இலங்கையின் முதலாவது பெண் நீதிபதி)
திருமதி. சிரானி பண்டாரநாயக்க (இலங்கையின் முதலாவது பெண் பிரதம நீதியரசர்)
சுசந்திகா ஜயசிங்க (விளையாட்டு வீராங்கனை)

இவர்கள் எமது நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் பெருமை சேர்த்துத் தந்தார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், இவர்களைப் போன்று பெண்கள் உருவாவதற்கான சந்தர்ப்பம் தற்போது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றமை வேதனையளிக்கக்கூடியதாக உள்ளது. எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிராக பலவிதமான வன்முறைகள் இடம்பெற்று வருகின்றமை எம்மால் காணமுடிகின்றது. அதாவது குடும்ப வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகம், உடல் உள ரீதியான சம்பவங்கள் என பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு இலகுவாக ஆளாகக்கூடிய பெண்களாக,

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்கள்
விஷேட தேவைப்பாடுடைய பெண்கள்
தாயின் பராமரிப்பு அற்ற சிறுமியர்
இளம் பராயத்தினர்
வயோதிபப் பெண்கள்
விதவைப் பெண்கள்
அநாதரவான பெண்கள்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் போன்றோரைக் குறிப்பிடலாம். 

இன்று எமது நாட்டில் 30 ஆண்டுப் போர்ச் சூழலில் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வடகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண்கள் குறிப்பிடத்தக்கோராவர். 1981ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக எல்லாவித பாரபட்சங்களையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை ஒன்று இலங்கை அரசால் ஐ.நா சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு பாராளுமன்றத்தினால் மகளிர் விவகார அமைச்சு என்ற பெயரில் பெண்களுக்கென்று ஒரு தனியான அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 

இவ் அமைச்சானது 1929 என்ற விஷேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்து பெண்களுக்கெதிராக இடம்பெறக்கூடிய மேற்குறித்த வன்முறைகள் குறித்து முறையிடுமாறு பொதுமக்களிடையே வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் இவை தொடர்பாக கிடைக்கப்பெறுகின்ற முறைப்பாடுகளுக்கு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சனி பெர்னாண்டோ தலைமையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பிரச்சினைகளை விசாரனை செய்து அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் உப குழு ஒன்று பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, பாலின சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கை தேசத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டியுள்ளமை காலத்தின் தேவை.

மேலும், பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்துக்கு வழிகோலும் திட்டங்களை அமுல்படுத்தி இந்நாட்டுப் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களுக்கு எதிராக ஒன்றிணைந்து பாடுபடுவோம்.

No comments

Powered by Blogger.