Header Ads



பேஸ்புக் குற்றச் செயல்களின் மொத்த உருவமா..?

(எஸ்.எல். மன்சூர்)

பேஸ்புக் எனப்படும் முகநூல் தொடர்பான சர்ச்சை இன்று உலகம் முழுவதும் ஏற்பட்டுக் கொண்டிருக்க, இலங்கையிலும் அதன் தாக்கம் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளதாக இன்று அனைத்து சமூகத்தளங்களிலும் பதிவாகியிருப்பதைக் காணலாம். இதற்கு உந்து சக்தியாக அண்மையில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்யதன் விளைவு பேஸ்புக்கை தடைசெய்யும் அளவுக்கு நாட்டின் ஜனாதிபதி அவர்கள் தலையிடும் நிலைக்குஇந்த பேஸ்புக் பிரச்சினை குறிப்பாக பெரும் வேகம் கண்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் இதன் தாக்கம் கடுமையான எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இங்கிலாந்து நாட்டில் கடந்தாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம் பேஸ்புக் தொடர்பான குற்றச்செயல்கள் மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. 40 நிமிடங்களுக்கு ஒரு முறை பேஸ்புக் தொடர்பான குற்றம் ஒன்று பொலிசாரிடம் பதிவாகின்றது எனவும், சென்ற ஆண்டில் மட்டும் 12,300 குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும், கொலை, பாலியல் வன்முறை, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள், தாக்குதல், கடத்தல், கொலை மிரட்டல், சாட்சியங்களை மிரட்டல், மோசடி போன்ற குற்றங்கள் மீதான விசாரணைகளில் பேஸ்புக்  அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அண்மைக் காலத்தில் இலங்கையில் பள்ளி மாணவி ஒருவரினதும் இளம் யுவதி ஒருவரினதும் மரணங்களுக்கு பேஸ்புக் தளம் காரணம் என்கிற செய்திகள் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், பேஸ்புக் இளம் சமூதாயத்தினரை வழிகேட்டுக்குள்ளாக்குகின்றன என்கிற காரணத்தை முன்னிட்டு இலங்கையில் பேஸ்புக் சமூக இணையத்தளம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மைகள் ஏதுமில்லை என தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்திருந்தார். இது வெறும் வாந்திகளே எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இலங்கையில் பேஸ்புக் தடை செய்யப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. இதில் எவ்வித உண்மையுமில்லை என்றும், பேஸ்புக் சமூக இணையத்தளத்தை தடை செய்வது தொடர்பில் அரசாங்கத்தினால் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

சர்ச்சைக்குரிய பேஸ்புக் இணையத்தளத்தின் ஆரம்பம்

பேஸ்புக் (குயஉநடிழழம) எனப்படுகின்ற சமூக இணைய வலையமைப்பானது கடந்த 2004ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவரான மார்க் சக்கர்பர்க் தனது ஹார்வர்ட் மாணவர்களுக்காக ஆரம்பித்திருந்தார். பின்னர் ஐவி லீக் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந்த அனுமதி கிடைத்தது. இன்றைய பேஸ்புக்கில் 13 வயதான நபர்கள் சேரலாம். அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி இணைய முழுவதிலும் இந்த பேஸ்புக் இரண்டாவது மிகப் பிரபலமான இணையத்தளமாகும்.

ஜுலை 2011 கணக்கெடுப்பின்படி இதில் 800 மில்லியன் பேர் உபயோகிப்பாளர்களாக காணப்பட்டனர். 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகநூலில் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு முகநூலில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வது இந்த முகநூலின் உண்மையான தத்துவமாகும்.

இவ்வாறாகத் தொடங்கப்பட்ட பேஸ்புக் பின்னரான காலகட்டத்தில் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களும் இந்த முகநூலில் சேர்ந்;து கொண்டனர். முகநூலின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2010ல் முகநூலின் பெறுமதி 41 மில்லியன் டாலராக உயர்ந்து, கூகிள், அமேசானைத் தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது மிகப்பெரிய இணைய தள நிறுவனமாக இது உயர்ந்தது. 2011ல் முகநூலின் தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. 13 வயதிற்கு மேற்பட்ட எவரும், சரியான மின்னஞ்சல் முகவரியுடன் முகநூலில் அங்கத்தினர் ஆகலாம். இந்த நிறுவனம் சுமார் 2,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தை உபயோகிப்போர் இளைஞர்களாக இருப்பதால் அவர்களுக்கு நண்பர்களுடன் கலந்துரையாடவே விருப்புடன் காணப்படுகின்றனர்.

முகநூல் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம். தான் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை யாரெல்லாம் அறிந்து கொண்டார்கள், யாரெல்லாம் தன்னைப் பற்றிய தகவல்களைத் தேடினார்கள் என்று அறிந்து கட்டுப்படுத்தலாம். இது மை ஸ்பேஸ் (என்னுடைய இடம்) என்ற இணையதளத்தை ஒத்து இருந்தாலும், முகநூலில் உண்மையான அடையாளங்கள் கேட்கப் படுகிறது. முகநூலில் நண்பர்களுடன் தகவல் பரிமாறும் சுவர், புகைப்படங்கள் பதிவு செய்யும் வசதி, நண்பர்களின் தற்போதைய நடவடிக்கை ஆகியவற்றை குறிப்பிடும் தனித்தனி வசதியும் உண்டு. 200 புகைப்படங்கள் வரை ஒரு ஆல்பத்தில் சேகரிக்கும் வசதியும் உண்டு.

முகநூல் மூலம் நண்பர்களுக்கு 1 டாலர் செலவில் பரிசுகளை முக்கியத் தகவல்களுடன் அனுப்பலாம். சுமார் 60 நாடுகளில் உள்ள 150 மில்லியன் மக்கள் 200 கைபேசி ஆபரேட்டர்கள் மூலம் நவீனக் கைபேசியில் முகநூல் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஏப்ரல் 2011ல் முகநூலில் அரட்டை அடிப்பதை நேரடிக் குரல் அழைப்பு மூலம் உலகெங்கும் உள்ள நண்பர்களுடன் பேசும் முறை கொண்டு வரப்பட்டது. ஜூலை 2011ல், ஸ்கைப் என்ற நிறுவனத்தின் உதவியுடன் நேரடி ஒளிப்பதிவாக ஒருவருக்கொருவர் பேசுவதைப் பார்க்கும் முறையையும் கொண்டு வந்தனர்.

இந்த இணையதளம் 'உலகின் சிறந்த 100 இணையதளங்களுள்' ஒன்று என்ற விருதை பி.சி. நாளிதழ் மூலம் கடந்த 2007ல் பெற்றுக் கொண்டது. 2008ல் 'மக்கள் குரல் விருது'இ 2010ல் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களில் சிறந்த படைப்புக்கான விருதினையும் பெற்றுக் கொண்டது, ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றமானது தன்னுடைய நீதிமன்ற சம்மன்களை அனுப்பக்கூடிய சிறந்த வழியாகவும் இந்த முகநூலைத் தேர்ந்தெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை சில நாடுகளில் இந்த முகநூல் தளத்தை அந்த நாடுகளின் அரசுகள் தடைசெய்யும் அளவக்கு இதன் தாக்கம் மேலோங்கியும் இருந்தன. உதாரணமாக சீனா, வியட்நாம், ஈரான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இந்த இணையதளம் இஸ்லாமியத்துக்கு எதிரானது, மத வேற்றுமையை ஏற்படுத்தக்கூடியது என்று தடைகளும் ஏற்படுத்தப்பட்டன. 50வீதமான பிரித்தானியக் கம்பெனிகளில் வேலை நேரத்தில் இந்த பேஸ்புக் எனப்படுகின்ற முகநூல் இணையதளத்தைப் பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. சில சம்பவங்கள் காரணமாக ஜெர்மனியில் முகநூலைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளும் அண்மைக்காலமாக வலுவடைந்து வருகிறது. இதேவேளை பேஸ்புக்கில் 18 வயதுக்குட்பட்ட இளையோர் தங்கள் பதிவுகளை பொதுவெளியில் பகிர்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் கடந்த 2013 அக்டோபர் மாதத்துடன் தளர்த்தப்பட்டுவிட்டது.

சமூகத்தில் முகநூலின் தாக்கம

வியாபாரிகளும், நிறுவனங்களும் தங்களுடைய பொருள்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வழியாக முகநூலைக் கருதுகின்றனர். ஒரே எண்ணம், விருப்பம் உடையவர்களை ஒன்றிணைக்கும் தளமாக உள்ளது. பிரிந்து போன குடும்பங்கள் இந்த முகநூல் மூலம் ஒன்று சேர்ந்த நிகழ்வுகளும் உண்டு. சிலர் நண்பர்கள், உறவினர்களிடம் தொடர்பு கொள்ளும் தளமாகக் கருதினாலும், வேறு சிலர் நேரடித் தொடர்பு இல்லாததால் முகநூல் மூலம் சமூகக் குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதுகின்றனர். விவாகரத்து, குழந்தைப் பேறு இல்லாமை போன்றவற்றிற்கும் இந்த இணையதளம் காரணமாக இருக்கிறது என்று கருதுவோர் சிலரும், இதை மறுப்பவர் சிலரும் உண்டு.

ஜனவரி 2008 அமெரிக்காவின் அரசியலில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சியின் 'நேருக்கு நேர்' அரசியல் கருத்தரங்கை நடத்தியதால் அப்போது அமெரிக்கத் தேர்தலில் பெரிய மாற்றம் உண்டாக இந்த முகநூல் காரணமாக அமைந்தது. பிப்ரவரி 2008ல் ஆயிரக்கணக்கான கொலம்பிய மக்களை கொலம்பிய ஆயுதப்புரட்சிப் படைக்கு எதிராக ஒன்று திரட்டியதிலும், 2011 இல் எகிப்திய புரட்சியிலும் இந்த முகநூல் இணையதளம் முக்கியப் பங்கினையும் வகித்திருந்தமை குறிப்பிடத்தக நிகழ்வுகள் எனவும் கூறப்படுகின்றது.  

இன்று இலங்கையில் மாத்திரமின்றி இந்தியா போன்ற பல நாடுகளில் அதிகளவான இளைஞர்களை வழிகெடுக்கின்ற ஒரு தளமாக இந்த முகநூல் காணப்படுவதாக கூறப்படுகின்றது. இலங்கையிலும் அண்மையச் சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  கூக்குரல் எழுப்பத் தொடங்கினர். இது தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கவனித்துவருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அண்மையில் கருத்துரை வழங்கியிருந்தார். நாட்டின் ஜனாதிபதி அவர்களும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் காரணமாக பல்வேறு சமூகப் பிரச்சனைகள் ஏற்படுவதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தார். பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்கிற கருத்தினையும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை பேஸ்புக் அரசாங்கத்திற்கு பெரும் பிரச்சனையாக மாறிகொண்டு வருகின்றது அதில் வருகின்ற பெரும்பாலான செய்திகள் அரசாங்கத்தை விமர்சிக்கின்றன. அதனால், பேஸ்புக் மீது வேறு சமூகப் பிரச்சனைகளைக் காரணம் காட்டி அதனைத் தடைசெய்துவிடலாம் என்று அரசு முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவும் கருத்துத் தெரிவித்திருந்தார். இவர்கள் என்னதான் கூறினாலும் பேஸ்புக் சமூக வலைத்தளத்தினால் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் ஏற்படுவதாக இலங்கை பொலிஸ் துறையினர் கூறுகின்றனர். குறிப்பாக, பெண் பிள்ளைகள் பேஸ்புக் பயன்படுத்தும்போது அவதானமாக நடந்துகொள்ள வேண்டுமென அண்மையில் பொலிஸ் பேச்சாளரான எஸ்எஸ்பி அஜித் ரோஹண கேட்டுக்கொண்டார்.

'உலகில் மற்ற பல நாடுகளைப் போல இலங்கையிலும் குடும்பத் தகராறுகளுக்கும் தற்கொலைகளுக்கும் முக்கிய காரணமாகின்ற ஒரு விடயமாக பேஸ்புக் மாறிவிடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாவும், பள்ளி செல்லும் மாணவர்கள் பேஸ்புக் விடயத்தில் சுயகட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கடந்தாண்டில் பேஸ்புக் சம்பந்தப்பட்ட 30 முறைப்பாடுகள் காவல்துறைக்குக் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதுபற்றிய கருத்துத் தெரிவித்த கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டிகே, ''லங்கையில் இளைஞர் யுவதிகளிடத்தில் தற்கொலைகள் 1990-களிலிருந்தே பெரும் பிரச்சனையாக இருந்துவருகிறது' என்றும், 'சமூகத் தொடர்புகளை வளர்த்துக்கொள்வது என்பது சமூகத்துக்கு முக்கியமானது. அந்த சமூகத் தொடர்புகளை பயனுள்ளவையாக மாற்றுவதற்கான வழிமுறைகளைத் தான் நமது கல்வி முறை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். சமூகப் பிரச்சனைகளுக்கு பேஸ்புக் போன்ற நவீன ஊடகங்கள் காரணம் என்று கூறி அவற்றை கட்டுப்படுத்துவதோ அல்லது தடைசெய்வதோ ஒரு போதும் தீர்வாக அமையாது' என்றும் பேராசிரியர் சிறி ஹெட்டிகே கூறினார்.  தற்போது '200 நாடுகளில் பேஸ்புக் பாவனை உள்ளது. ஓரிரண்டு நாடுகளில் தான் தடை ஏற்பட்டுள்ளதாகவும ; அவர் தெரிவித்தார்.

உண்மையில் இத்தகைய சமுகமாற்றத்திற்கான வழிவகைகளையும், இளைஞர்களுக்கான ஆலோசனை வழிகாட்டலையும், கட்டிளமைப்பருவத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு முகங்கொடுக்கக்கூடியவாறு பாடசாலைக் கல்வி மாற்றங்களை கொண்டுவருவதற்கு பாடசாலைகள் சரியான பாதையை அமைத்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை இன்று சமூகம் எதிர்பார்க்கின்றது. வெறுமனே கற்றல் கற்பித்தலையும் கல்வியாக நினைக்கின்ற பலர் மாணவர்களின் நிலைமைகளை புரிந்து அறிந்து செயற்படாததன் விளைவு பேஸ்புக்கை குற்றம் சொல்வதிலிருந்து தப்பிக்க முனைகின்றனர். தற்கால மற்றும் எதிர்கால நவீன சிந்தனைகளை கல்வியின் ஊடாக மாணவர்களைச் சென்றடையவைப்பதில் குறிப்பாக அறிவுடையோர் சமூகத்தின் கடமையாகும் என்பதை நினைவிற்கொள்வது கட்டாயமாகும்.

No comments

Powered by Blogger.