முஸ்லிம் பெண்களால் எப்படி இன்றைய தினத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்..?
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி விடுத்துள்ள அறிக்கை.
சர்வதேச மகளிர் தினம் இம்மாதம் எட்டாம் திகதி சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. இலங்கையிலும் இது தொடர்பான பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையில் உள்ள பெண்கள் இன்று தமக்கான சர்வதேச மகளிர் தினத்தை நினைவு கூறும் அளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளனரா? என்பதே இன்று எம்மத்தியில் எழுந்துள்ள பிரதான கேள்வியாகும்.
இந்த நாட்டில் பசியால் வாடும் தமது பிள்ளைகளுக்கு தேவையான பால் மா கிடைக்காத நிலையில், அப்படியே அதை அலைந்து திரிந்து கண்டு பிடித்தாலும் வாங்கிக் கொடுக்க வக்கில்லாத நிலையில் எப்படி ஒரு தாயால் மகளிர் தினத்தை நினைவு கூற முடியும்?
பசி பட்டினி காரணமாக பெண்கள் தமது பிள்ளைகளோடு தற்கொலை செய்து கொள்வது அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் எப்படி பெண்கள் மகளிர் தினத்தை நினைவு கூறலாம்?
பசி காரணமாக குடும்பத்தோடு தினசரி பாகற்காயை உண்டு பரிதாபகரமாக நோய்வாய்ப்பட்ட குடும்பம் பற்றிய தகவலும் அண்மையில் வெளியானது. இந்தக் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்யாமல் ஏன் இதை வெளியே சொன்னீர்கள்? என்று பிரதேச அரசியல் வாதிகள் அந்த குடும்பத்தை அச்சுறுத்தி உள்ளார்கள். தமது கஷ்டத்தைக் கூட வெளியே சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தாய்மாரால் எப்படி மகளிர் தினத்தைப் பற்றி யோசிக்கலாம்?
வடக்கு கிழக்கில் தமது உறவுகளைத் துலைத்து விட்டு இன்னமும் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அன்றாடம் அவஸ்தை படும் தாய்மார்களாலும், பிள்ளைகளை தொலைத்த தாய்மார்களாலும், கணவன்களைப் பறி கொடுத்த விதவைகளாலும் எப்படி மகளிர் தினத்தை நினைவு கூற முடியும்?
காணாமல் போனோர் பற்றி விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கண்ணீரும் கம்பலையுமாகத் தோன்றிய தாய்மாரினதும், இளம் பெண்களினதும் கண்ணீர் இன்னமும் துடைக்கப்படாத நிலையில், அதற்கான எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர்களால் எப்படி மகளிர் தினத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்?
தமது கலாசாரத்துக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் முன்னொருபோதும் இல்லாத அளவு அச்சுறுத்தல் ஏற்பட்டு கவலையில் தோய்ந்து போய் கிடக்கும் முஸ்லிம் பெண்களாலும் தாய்மார்களாலும் எப்படி இன்றைய தினத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்?
எல்லாவிடயங்களிலும் பித்தலாட்டம் புரிவது போல்தான் இம்முறை சர்வதேச மகளிர் தினத்திலும் அரசு மகளிருக்கான விஷேட தொழில்முயற்சிக் கடன் திட்டம் என்று புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பார்க்கின்றது. தமக்கு தேவையான தமது கட்சிக்கு ஆதரவான சில பெண்களுக்கு இந்தத் தேர்தலை முன்னிட்டும் அடுத்தடுத்து வரவுள்ள தோதல்களை முன்னிட்டும் சில உதவிகளை வழஙகுவதற்காக அரசு இப்படி ஒரு பித்தலாட்டத்தை அரங்கேற்றுகின்றது.
இந்த நாட்டில் குடும்பத் தலைவிகள் வடிக்கும் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தமது சொந்தங்களையும் உறவுகளையும் இழந்து அதன் மூலம் தமது வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தக் காரியங்களை அரசு செய்யாத வரை மகளிர் தினம் தொடர்பான எல்லா செயற்பாடுகளும் அர்த்தமற்றதாகவும் போலியாகவுமே இருக்கும்.
Post a Comment