மத வன்முறைகள் அதிகரித்து, அரசு அவற்றை முன்னெடுத்து அதில் மூழ்கிப் போயுள்ளது - சம்பந்தன், விக்னேஸ்வரன் கூட்டறிக்கை
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கூட்டாக ஒப்பமிட்ட அறிக்கை அறிக்கை ஒன்று நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு-
அமெரிக்கா, பிரிட்டன் முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசு நாடான மொண்டினிகாரோ, மெஸிடேனியா, மொறீஸியஸ் ஆகிய நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது அமர்வை ஒட்டி இலங்கை தொடர்பாக முன்வைத்துள்ள பிரேரணையின் நகலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனமாக பரிசீலனை செய்தது.
இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் கௌரவம், சமத்துவம், நீதியுடன் வாழக்கூடிய வகையில் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் எட்டுவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திடசித்தம் கொண்டுள்ளது.
அமைதியான, ஐக்கிய இலங்கையை அடைவதற்கு பொறுப்புக் கூறும் விடயத்தில் தெளிவான முன்னேற்றமும், உண்மையான நல்லிணக்கமும் அவசியமான அடிப்படைகள் என நாம் நம்புகிறோம்.
உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு எட்டப்பட்டு, அதனடிப்படையில் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது, இப்போது நாட்டை இந்த அரசு கொண்டு போய் நிறுத்தியுள்ள தீங்கான போக்கு நிலையிலிருந்து விடுவித்து வழமை நிலைக்கு மீளத் திருப்பிக் கொண்டு வருவதற்கு மிக அத்தியாவசியமானதாகும்.
இராணுவம் பெருமளவு நிலத்தை ஆக்கிரமித்திருப்பது, சிவிலியன் வாழ்வில் இராணுவத்தின் அதீத தலையீடு, வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பெண்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக அதிகரித்து வரும் முறையீடுகள் என்பனவே தமிழ் மக்களைக் குறிப்பாக கவலை கொள்ள வைத்துள்ளன.
வடக்கு, கிழக்கு மாகாணத்தின் குடிப்பரம்பல் கட்டமைப்பை மாற்றுவதிலும் இந்தப் பிரதேசத்தின் கலாசார, மொழியியல் அடையாளங்களை சீரழிப்பதிலும், இலங்கை அரசு தீவிரத்தோடு ஈடுபட்டிருக்கின்றது.
இத்தகைய செயற்பாடுகள் நல்லிணக்கத்துக்கு உகந்த சூழலை உருவாக்கமாட்டா என்பதோடு, நாட்டின் மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்த மாட்டா.
மத வன்முறைகள், சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் என்பன அதிகரித்திருப்பதோடு அரசு அவற்றை முன்னெடுத்து அதில் மூழ்கிப் போயுமுள்ளது.
சட்டத்தின் ஆட்சியும், நீதிச் சுதந்திரமும் செயலிழந்து போனமை மேற்படி சம்பவங்களில் பாதிக்கப்படுவோருக்கு சட்டப் பாதுகாப்பு கிட்ட முடியாத நிலைமையை ஏற்படுத்தி, அப்பிரச்சினையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.
ஆகவே, யுத்த காலத்தில் இரு தரப்பினராலும் புரியப்பட்ட துஷ்பிரயோகங்கள் மற்றும் யுத்தம் முடிந்த காலம் முதல் நாடு முழுவதும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் ஆகிய இரண்டும் குறித்தும் விசாரிப்பதற்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் வழிநடத்தலில் சர்வதேச விசாரணையை நிறுவுவதற்கு உதவும் விதத்தில் நகல் பிரேரணை அமைந்துள்ளமையை நாம் வரவேற்கிறோம்.
இந்தப் பிரேரணையை முன்மொழிந்த இணைத் தரப்புக்கள் வரும் வாரங்களில் இந்த நகலில் மேலும் திருத்தங்களைச் செய்து வரவிருக்கும் விசாரணைப் பொறிமுறையைத் தெளிபடுத்தி வலுப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.
நாம் எமது பக்கத்தில் தொடர்ந்தும் இவ்விடயம் சம்பந்தமாக சர்வதேச சமூகத்துடன் ஈடுபாடு கொண்டிருப்பதோடு, எல்லா இலஙகையருக்கும் - விசேடமாக யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்னரும் மோசமான துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கும் - முழு அளவில் சாதகம் கிட்டும் வகையில் இப்பிரேரணையின் பெறுபேறு அமைவதையும் உறுதிப்படுத்துவோம்.
தற்போது முன்வைக்கப்பட்டு, பரிசீலனையில் இருக்கும் பிரேரணையின் நகல் வடிவத்தின் அடிப்படை, இலங்கையில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தச் செய்யும் திசை நோக்கிய பாதையில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் குறிப்பிடத்தக்க அடுத்த அடியாக அமையும்.
முன்னர் இரு தரப்பினர்களினாலும் இழைக்கப்பட்ட மீறல்கள் மற்றும் தற்போது நாடு முழுவதும் இடம்பெறும் மீறல்கள் ஆகியன தொடர்பில் சர்வதேச விசாரணை ஆணைக்குழு ஒன்றுக்கு ஆணையிடும் திசையை நோக்கி விரைவாக முன்னேறுமாறு சர்வதேச சமூகத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது. - என்று கூறப்பட்டுள்ளது.
உங்கள் நேர்மைக்கும் துணிச்சலுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் குரல்கள் எப்போது ஓய்கின்றதோ அன்றுதான் தமிழர்களுக்கு நல்ல நாள் தோன்றும்
ReplyDelete