Header Ads



முஸ்லிம்கள் மீது இனவாத சக்திகளின் வன்முறை - அரசாங்கத்திற்கு வாக்குகள் குறைய காரணம்

மிகவும் பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக விருந்த ஐக்கிய தேசியக் கட்சி இன்று பலமிழந்து காணப்படுவதாலேயே ஜனநாயகக் கட்சி மற்றும் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் சற்றுத் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண தேர்தல் முடிவுகள் இதனை காட்டுகின்றன. என அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 51 தொகுதிகளில் தனது பெரும்பான்மையை நிரூபித்து அமோக வெற்றியை ஈட்டியிருக்கிறது. 

இது ஜனாதிபதிக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் என்றும் தெரிவித்தார். இந்தத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக நேற்று தினகரன், அமைச்சர் ராஜிதவுடன் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேல் மாகாணத்தில் சிறுபான்மையினர் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இது குறிப்பாக தமிழ் மக்கள் தாம் எதிர்பார்க்கும் அபிலாஷைகளை அரசாங்கம் இன்னமும் சரியாக இனங்கண்டு அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கவில்லையென்பதை உணர்த்துவதாக நான் நினைக்கிறேன்.

இதேபோன்று முஸ்லிம் மக்கள் மீது கடந்த காலங்களில் சில இனவாத சக்திகள் கட்டவிழ்த்துவிட்ட எதிர்ப்பலைகள் தொடர்பாக அவர்கள் மத்தியில் ஒரு அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளதையும் காட்டுவதாக நினைக்கிறேன். பேருவளை தொகுதியைப் பொறுத்த வரையில் அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அமோக ஆதரவை வழங்கியிருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

இப்பகுதியில் முஸ்லிம் மக்களும் பெரும்பான்மை இன மக்களும் இனவாதப் போக்குகள் எதுவுமின்றி மிகவும் அன்னியோன்யமாக வாழ்கின்றனர். இதன் பிரதிபலிப்பே இப்பகுதியில் அரசுக்கு அவர்கள் அமோக ஆதரவு வழங்குவற்கான காரணமாக இருக்கிறது என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்தத் தேர்தலில் தலைமைத்துவச் சபையொன்றையும் அமைத்து, தேர்தல் களத்தில் இறங்கிய போதும் பலமிழந்த காரணத்தினாலேயே மூன்றாவது சக்தியாக ஜனநாயகக் கட்சியும் ஜே.வி.பியும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி இதை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.