Header Ads



'சமகால முஸ்லிம் அரசியலில், அறிவுபூர்வமான பிரச்சாரங்கள் வேண்டும்'

(நவாஸ் சௌபி)

முஸ்லிம் சமூகத்தின் மீது எமது நாட்டில் தீவிரமடைந்து வருகின்ற மதப்பயங்கரவாத சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான ஒரு கட்டமைக்கப்பட்ட செயற்பாடு எம்மிடம் இல்லாதிருக்கின்றமை மேலும் எம்மைப் பலவீனப்படுத்திக் கொண்டே செல்கின்றது.

பொதுவான சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எடுப்பதில் ஒருமித்த கருத்துக்களையோ ஒன்றுபட்ட முடிவுகளையோ எடுத்துச் செயற்படுவதில் எங்களுக்குள் பல்வேறுபட்ட முரண்பட்ட அமைப்புக்களை நாங்கள் கொண்டிருக்கின்றோம்.

இஸ்லாமிய மத அமைப்புக்கள் கொள்கை ரீதியான பிரிவினைகளை முதன்மைப்படுத்தி ஒன்றுபடாமல் முரண்படுகின்றன. 

அரசியல்வாதிகள் சுயநல அரசியலையும் கட்சி அரசியலையும் வளர்த்துக்கொண்டு அரசியல் வியாபாரம் செய்கின்றனர். 

கல்விமான்கள், புத்திஜீவிகள் என்ற தரப்பினர் தானும் தன்பாடும் என்று எதிலும் பற்றற்று, எதற்காகவும் தன் கௌரவத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கின்றனர். 

இப்படி எங்களுடைய பிரச்சினைகள் தொடர்பான சமூக அக்கறைகளை எத்தரப்பினர்கள் முன்னெடுக்க வேண்டுமோ அத்தரப்பினர்களை முதலில்; சீர்படுத்த வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில்; நாம் இருக்கிறோம். 

இத்தகைய பலவீனமான ஒரு சமூகக்கட்டமைப்பைக் கொண்டிருக்கும் நாங்கள் எமது நாட்டில் இன்று எமக்கு எதிராக எழுகின்ற பிரச்சினைகளுக்கு என்ன வழிகளில் தீர்வுகளை பெற முடியும் என்பது தொடர்பான சிந்தனைகளையும் அது தொடர்பான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டிய காலத் தேவையுடனும் இருக்கின்றோம்.  

இன்றுள்ள அரசாங்கத்தில் எமது பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகாண்பது என்பது முழுமையாக முடியாத ஒன்று. அதிகாரமற்ற அமைச்சர்களும் பலவினமான எதிர்கட்சியுமுள்ள இன்றைய அரசாங்கத்தில் எமது அரசியல்வாதிகள் எதைச் சாதிக்க முடியும் என்ற கேள்வி எம்முன் நிமிர்ந்து நிற்கிறது. 

இதனடிப்படையில் எமது சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை அரசியல்ரீதியாகப் பெற்றுக்கொள்வதில் நாம் தொடர்ந்தும் நசுக்குதல்களை எதிர்கொண்டுவரும் நிலையில் நடைபெறவிருக்கும் தென் மற்றும் மேல் மாகாணத் தேர்தல் முடிவுகளும் இனவாதத்திற்கான ஒரு வெற்றியாகவே அமையப்போகிறது என்பதனை இதுவரையான எல்லாத் தேர்தல் பிரச்சாரங்களும் எமக்குப் புலப்படுத்தியுள்ளன. 

யுத்தத்தை முதலீடாக வைத்து அரசியல் செய்தவர்கள் இன்று இனவாதத்தினை முதலீடாக வைத்திருக்கிறார்கள். ஆளும் கட்சி, எதிர்கட்சி, சிறுபான்மைக் கட்சி என்று இன்று எல்லாக் கட்சி அரசியல்களும் இனவாத முகங்களை பெற்றிருக்கின்றன. 

கட்சிகள் எப்பொழுதும் இனவாதத்துடன்தான் இருக்க வேண்டும் ஆனால் அது தன் இனத்தைப் பாதுகாப்பதற்கான வாதமாக இருக்க வேண்டுமே தவிர மற்ற இனத்தை அழிப்பதற்கான ஒரு வாதமாக இருக்க கூடாது. இன்று நாட்டிலிருக்கின்ற பெரும்பான்மை இனத்தின் அரசியல் வாதங்கள் சிறுபான்மை இனங்களை அழிப்பதற்கான ஒன்றா? என்ற ஐயங்களைத்தான்; தோற்றுவிக்கின்றன.  

இந்நிலையில் பெரும்பான்மைச் சமூகம் கொண்டுள்ள இனவாதச் செயற்பாடுகளை எதிர்கொள்வதில், தேர்தல் பிரச்சார மேடைகளில் மட்டும் அதனை விமர்சித்துவிட்டு பின்னர் அதை அவ்வாறே கைவிடுவதில்தான் சிறுபான்மை அரசியல்கள் தவறுவிடகின்றனவா? அரசியல் என்பது  தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசுவது மட்டும்தான் என்ற நிலைக்கு மக்கள் சிந்திப்பதாக நினைத்து அரசியல்வாதிகள் பிரச்சாரங்களில் மட்டும் பேசிவிட்டுப் போகின்றார்களா? என்ற கேள்விகளும் இதில் தோன்றுகின்றன. 

இவ்வாறு இனவாத பிரச்சார அரசியல் மேலெழுந்து நிற்கும் நிலையில் முஸ்லிம் அரசியலில் அறிவுபூர்வமான பிரச்சாரங்களை நோக்கிச் சிந்திக்க வேண்டிய அவசியத்தை முஸ்லிம் சமூகக் கட்சிகள் உருவாக்க வேண்டும்.

எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போன்ற பிரச்சாரங்களை மேற்கொள்வதில் மேலும் மேலும் நாங்கள் எங்களுக்கான ஆபத்துக்களைத்தான் உருவாக்குகின்றோம் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம். வாக்குகளைப் பெறுவதோடு தேர்தல் முடிந்துவிடும். ஆனால் பிரச்சாரங்களில் பேசுகின்ற இனவாதங்கள் முடியாமல் அது ஆட்சியோடு தொடாந்து வரும். 


இந்த ஆட்சியில் சிறுபான்மை அரசியலின் பலம் துண்டாடப்பட்டிருக்கிறது. தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகப் பேசப்படும் இனவாதப் பிரச்சாரங்கள் யாவும் நாளை எம்மீது ஏவப்படும் பீரங்கிகளாகத் திரும்பும் என்பதிலும் ஆச்சரியமில்லை. உதாரணமாக வடக்கு கிழக்கு தேர்தல் காலங்களில் பள்ளிகளை உடைப்பதாகப் பிரச்சாரங்கள் செய்தோம். அதனால் 5 ஆக இருந்த தாக்கப்பட்ட பள்ளிகள் தேர்தலுக்குப் பிறகு 50 ஆக அதகரித்துச் செல்லும் ஒரு நிலைதான் உருவானதே தவிர அது குறைந்ததாகத் தெரியவில்லை. அப்போது அந்த மேடைகளுக்கு வந்தவர்கள் இப்போது இந்த மேடைகளில் பேசி முடித்திருக்கிறார்கள். மேடைகள்தான் மாறுகின்றனவே தவிர பிரச்சினைகள் மாறவில்லை.  

ஆனால் நடைபெறுகின்ற தேர்தல் வடக்கு கிழக்குத் தேர்தல் அல்ல சிங்களப் பெரும்பான்மை கொண்ட மாகாணங்களுக்கான தேர்தல். அவர்களுக்குள் இருந்துகொண்டு மேடைகளில் நாங்கள் பேசுகின்ற இனவாதப் பிரச்சாரங்கள் அவர்களுடைய காதுகளுக்குள் சென்று நேரடியாக ஊதுவதாகவே பார்க்கப்படும்.  

எடுத்த எடுப்பில் மிகவும் வெளிப்படையாக 'மஹிந்தவுக்கு வாக்களிப்பது முஸ்லிம் சமூகத்தை அளிப்பதற்குச் சமம்' என்றும் 'மஹிந்தவுக்கு அளிக்கும் வாக்குகள் பள்ளிகள் மீது எறியப்படும் கற்கள் போன்றதாகும்' என்றும் நாங்கள் மஹிந்தவுக்கும் அவரது அரசுக்கும் எதிராகப் பேசுகின்ற இதுபோன்ற பிரச்சாரங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீதான கோபத்தை அரசுக்கு மேலும் அதிகப்படுத்தியிருக்கும் என்ற மறுபக்கத்தையும் நாம் சிந்திக்காமல் இருக்க முடியாது. அத்தோடு முஸ்லிம்கள் அரசுக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தையும் அது ஏற்படுத்தியிருக்கும்.

கம்பை எடுத்தவரெல்லாம் வேட்டைக்காரன் என்ற அடிப்படையில் தேர்தல் பிரச்சாரங்களில் மட்டும் அரசை விமர்சிப்பதில் அர்த்தமில்லை அதில் உயிரோட்டம் இருக்காது. அந்தப் பேச்சில் உண்மை இருந்தாலும் அது ஒரு சாரமில்லாத வெறும் பிரச்சாரமாகவே யோய்விடும். மறுபுறம் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு ஆயுதமாக சமூகப் பிரச்சினைகளை தேர்தல் மேடைகளில் விற்கின்றார்கள் என்ற கருத்தும் மக்களுக்குப் புலப்படும். எனவே எமது பிரச்சாரங்கள் எங்களைப் பாதுகாப்பதாக அமைய வேண்டும். ஏனென்றால் இந்தப் பீரங்கிப் பேச்சாளர்கள் தேர்தல் முடிந்ததும் எங்கு நிற்பார்கள் என்று தெரியாது. இறுதியில் அவதிப்படுவது வாக்களித்த மக்கள்தான். 

பிரச்சினையான காலங்களில் வாய் மூடிகளாக இருப்பவர்கள் தேர்தல் வருகின்ற போது மட்டும் சமூகத்தின் காவலர்களாக வாய் கிழியக் கத்துவது வெறும் அரசியல் வேஷமே தவிர அதில் சமூக அக்கறை எதுவுமில்லை. அதுமாத்திரமன்றி முஸ்லிம்களின் பிரச்சினைகளை தேர்தல் மேடைகளில் பிரச்சாரங்களாகப் பேசுவதில் எந்தப் பயனுமில்லை. தீர்வுகாணவேண்டிய இடங்களில் அவற்றைப் பேசி அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்துவிட்டு அதுபற்றி மார்தட்டி பிரச்சார மேடைகளில் பேசுங்கள் அது வரவேற்க கூடிய ஒன்று. ஆனால் வாக்குகளுக்காக மட்டும் முஸ்லிம் பிரச்சினைகளை மேடைகளில் பேசி வறுமைப்பட்ட அரசியல் நடத்துவதில் அர்த்தமில்லை. 

தேர்தல் வந்துவிட்டால் முஸ்லிம் பிரச்சினைகளை ஒரு விபச்சாரியாக்கி மேடைகளில் பேசுவதை மக்கள் தொடர்ந்தும் அனுமதிக்க கூடாது தங்களது அரசியல் கொள்கைகளையும் தங்களது கட்சியின் அரசியல் நடவடிக்ககைகளையும் பேசுகின்ற பிரச்சார மேடைகளை இனிவரும் காலங்களில் மக்கள் உருவாக்க வேண்டும். ஏனென்றால் அரசியல் பிழப்பு நடத்துகின்றவர்கள் மக்களின் பிரச்சினைகளை பிரச்சார மேடைகளில் இனவாதமாகப் பேசிப் பேசி  நடந்ததெல்லாம் அரசுக்கு ஆதரவாக சிங்கள மக்களை ஒருமித்து வாக்களிக்கச் செய்த முட்டாள்தனம்தான். 

நடக்க முடியாத கிழவிகளையும் கைகளில் சுமந்து சென்று வாக்களிக்கச் செய்த சிங்கள மக்களின் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தையும் சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாமல் சிங்கள மக்களால் முழுமையான ஒரு சிங்கள ஆட்சியை உருவாக்க முடியும் என்ற  தத்துவத்தையும்; இந்த நாட்டிற்கு எமது இனவாதப் பிரச்சாரங்கள் காட்டிக் கொடுத்திருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதனை ஒரு முதலீடாகப் பயன்படுத்தி இது ஒரு பௌத்த நாடு என்ற இனவாத அடிப்படையை சிங்கள மக்களின் மனங்களில் விதைத்து, அரசுடன் கூட்டாகி பலம் பெற்றிருக்கும்; சிங்கள இனவாதக் கட்சிகள் இன்றுள்ள அரசின்  ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. 

தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றார்கள். முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்கின்றார்கள். சிங்களவர்கள் வாக்களிப்பதற்கு ஒரு இனவாதக் கட்சி வேண்டும் என்பதே இன்றைய தேசிய அரசியலின் வேலைத் திட்டம்.

விலை ஏற்றம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்சினைகளையும் இந்த அரசின் ஊடாக மக்கள் எதிர்கொண்டாலும் அவற்றைப் பொருட்படுத்தாது 70 சதவீதமான வாக்குகளை சிங்கள மக்கள் இந்த அரசுக்கே அளிக்கிறது என்றால் அது பொளத்த வாத வாக்குகள்தான்.

தமிழ், முஸ்லிம் மக்கள் இந்த நாட்டைக் காட்டிக்கொடுக்கின்றார்கள், எமது நாட்டைத் துண்டாடப் பார்க்கின்றார்கள் என்ற பிரச்சாரங்களை சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொள்ளுகின்ற இக்காலங்களில், நாங்களும் அதனை ஆதாரப்படுத்துவது போன்ற பிரச்சாரங்களை எமது தேர்தல் மேடைகளில் பேசுவது சிங்கள மக்களை மேலும் அரசின் பக்கம் வாக்களிக்கச் செய்கின்ற கைமாறைத்தான் செய்யும். 

மக்களுக்கு நாட்டின் நிலைமை நன்கு தெரியும். அவர்கள் அதற்கு ஏற்றவாறு வாக்களிப்பார்கள். எமது பிரச்சாரங்களால்தான் மக்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கின்றார்கள் என்ற கருத்து வெளிப்படையாக விளங்காதவாறு எமது பிரச்சாரங்களை  நாங்கள் அவதானமாகவும் அறிவுபூர்வமாகவும் மாற்ற வேண்டும்.

இன்றுள்ள அரசாங்கத்தை நியாயப்படுத்தவும் முடியாது அதனை எதிர்க்கவும் முடியாது என்பதுதான் தெளிவாக நாம் கற்றுக்கொண்ட பாடம். துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவதிப்படுகின்ற ஒரு நிலைதான் அரசுடன் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை.   எனவே இதற்கு ஏற்றவாறு எங்களுடைய சமூக ஒழுங்குகளை நாம் எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்பதில் எமது சமூகம் அக்கறை கொள்ள வேண்டும் என்பது அவசரமும் அவசியமுமான ஒரு தேவையாக இருக்கிறது.

No comments

Powered by Blogger.