Header Ads



"தங்கத்தலைவனின் கெ(சு)ட்டித்தனம்"

(சுலைமான் றாபி)

ஜெனிவா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது இலங்கை மனித உரிமைகள் தான். அதிலும் இறுதி கட்ட யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக அரசிற்கு எதிரான கட்சிகளும், அதேபோன்று ஈழம் சார்பான கோரிக்கைகளை முன்வைக்கும் கட்சிகளும் இன்னும் அது சார்பானோர்களும் கருத்துக்களை பதிவிட்ட போதும், அவைகளை உதாசீனம் செய்து இறுதி கட்ட யுத்தத்தில் அரசாங்கம் மனிதாபிமான செயற்பாடுகளையே செய்தது என்பதற்கான கருத்துக்களும் அதற்கான ஆதாரங்களும்  நியாயப்படுத்தப்படும் வேளை, தற்போது சர்வதேசத்தின் கவனங்கள் இலங்கை அரசாங்கத்தின் பக்கமும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பக்கமும் திரும்பியிருக்கிறது. அரசாங்கத்தில் இருந்து கொண்டு அந்த அரசினை ஆட்டம் காண வைப்பதென்றால் அதற்கொரு தனி தைரியம் வேண்டும். அதனை முஸ்லிம் காங்கிரஸ் நன்கு திட்டமிட்டு செய்து முடித்திருக்கிறது. அதுதான் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை வந்த போது முஸ்லிம் காங்கிரஸ்  50 பக்கங்கள் கொண்ட விஷேட அறிக்கையினை சமர்ப்பித்தது. இது உண்மையில் அரசை சர்வதேசத்தின் பிடியில் சிக்க வைக்க வேண்டும் இதன் மூலம் அண்மைக்கலங்களில் முஸ்லிம்கள்  சந்தித்த இன்னல்களுக்கு  அவற்றிக்கான தீர்வுகளை சர்வதேச சமூகம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அது சமர்பிக்கப்பட்டிருந்தது. 

உண்மையில் அண்மைக்காலங்களில் முஸ்லிம்கள் மீது இன வாதப்போக்கு கொண்டவர்களினால் செய்யப்பட்ட பள்ளி உடைப்புக்கள், அவர்களின் காணி விடயங்கள் இன்னும் அது சார்பான விடயங்களில் ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் கண்டுகொள்ளாமலும், அவர்களுக்கு எதிராக எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் கண்மூடித்தனமாக செயற்பட்டமைக்ககாகவே இதனை சமர்ப்பித்துள்ளதாக அறிய முடிகின்றது. உண்மையில் இந்த விடயங்களை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு நாசுக்காக கையாண்டாலும் அது இறுதியில் கதையாகிப்போகாமல் பாதுகாக்க வேண்டியது அதன் மீதுண்டான தார்மீகக் கடமையாகும். இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டு அந்த அரசாங்கதிற்கே எதிராக சவால்களை தேர்தல் காலங்களில் மட்டும் முஸ்லிம் காங்கிரஸ் கையாளுவது அதன் தலைமையில் அரசியல் வங்குரோத்துத்தந்திரமாகும். மேலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  தேர்தல் காலங்களில் உரிமைகள் பற்றி வீராப்பு பேசி இன்னும் அந்த கட்சியின் பலத்தினை மக்கள் மத்தியில் மேலும் அதிகரிக்கச் செய்வது தனது தலமைத்துவ பண்பின் பிரதி பளிப்பாக அடையாளப் படுத்திக் கொள்கிறார். ஆனால் கடைசியில் வாக்களித்த மக்கள்களை மறந்து விட்டு மாகாண சபைகளிலும், பாராளுமன்றத்திலும் அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கிறார். இவையெல்லாம் உண்ட வீட்டுக்கு குந்தகம் விழைவிக்கின்ற செயற்பாடாகவே அமைந்திருக்கிறது. எது எவ்வாறாக இருந்தாலும் முஸ்லிம்களின் உரிமைகள் விடயத்தில் அரசாங்கத்தோடு ஒட்டியிருக்கும் ஏனைய அமைச்சர்கள் அங்கத்துவம் வகிக்கும் அவர்களின் கட்சிகளை விட முஸ்லிம் காங்கிரஸ் துணிச்சலாக செயற்படுவது பாராட்டப்படவேண்டியது. 

இதேவேளை இவ்வாறான விடயங்களில் அரசாங்கமும், அதனோடு ஒட்டியிருக்கும் ஓட்டுன்னிகளும் ஒரு விடயத்தினை நன்றாக அவதானிக்க வேண்டும் என்பதனை மட்டும் அடிக்கடி ஞாபகப்படுத்திக்  கொண்டிருக்கிறது. அதுதான் முஸ்லிம் காங்கிரஸ் "ஆளும் கட்சிக்குள் இருக்கும் எதிர்க் கட்சி" என்கின்ற விடயம். உண்மையில் நாங்கள் அரசாங்கத்தோடு போய் தானாகக் குந்தவில்லை. கட்சி உறுப்பினர்கள் பின்கதவால் உள்நுழையும் ஆபத்துக் காரணமாக அன்றிருந்த சூழ்நிலையில் இணைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என மேல் மாகாணசபைத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாணந்துறை ஹேனமுல்லையில் சனிக்கிழமை (1) மாலை நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் உரைநிகழ்தும் போது மு. கா தலைவர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை அரசிற்கு முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக விழும் ஒவ்வொரு ஆப்புகளுக்கும் கட்சியின் செயலாளர் ஹசன் அலிதான் காரணம். இதில் எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கூறுவது, தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் தனது விசுவாசத்தினை காட்டுவதாகவே அமைகிறது. என்ன செய்ய ஜனாதிபதியின் சொல்லை கேட்காத அவரின் கட்சி உறுப்பினர்களும், மு.கா தலைவரின் சொல்லை கேட்காத உறுப்பினர்களும் அந்தந்த  கட்சிகளில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த விடயம் எதிர்காலத்தில் தொடர்ந்தும் நீடிக்குமானால் களைகளை  பிடுங்கும் நடவடிக்கைகளில் அந்தந்த தலைமைகள் ஈடுபடுவது காலத்தின் கட்டாயமாகும். 

இதேவேளை மு.கா ம் அதன் தலைமையும் முஸ்லிம்கள் விடயத்தில் எடுத்துக் கொண்ட இந்த அக்கறை மூலம் தற்போது சர்வதேசத்தின் பார்வை இலங்கை முஸ்லிம்கள் மீதும் அவர்களின் வணக்கஸ்தலங்கள் மற்றும் உரிமைகள் மீதும்  திரும்பியிருக்கிறது எனலாம். இதேவேளை இந்த பிரேரணை சமர்ப்பிக்கப் பட்டதனை  தொடர்ந்து  அரசிற்குள் பல்வேறு வகையான சிக்கல்கள் உருவெடுத்துள்ளது. இதில் ஒரு முக்கியம் மு.கா விற்கு எதிரான சில முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மு.கா எப்படியாவது வெளியேற வேண்டும் ஆண்டவனே என்று பிரார்த்திக்கும் அதேவேளை, அங்கு இருக்கின்ற சில அமைச்சர்கள் மு.கா அரசாங்கத்தை விட்டு வெளியேறாது, வெளியேற  விடவும் மாட்டோம் என்கின்ற கொள்கையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதனைத்தான் மு.கா தலைவர் சுட்டிக்காட்டுகிறார் : முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறிவிடும் என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் அரசாங்கத்தை விட்டு வெளியேறி விட்டால் ஆபத்தென்ற அச்சம் அவர்களிடம் மேலோங்கியிருக்கின்றது'. எனவே இந்த விடயத்தினை நன்கு பயன்படுத்தும் மு.கா தலைமை பல்வேறு சந்தர்பங்களில் சகுனம் பார்த்து தனது பலத்தினை நிரூபித்திருக்கிறது. இதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கெட்டித்தனம் என்னவென்றால் செய்வதெல்லாம் நன்கு திட்டமிட்டு செய்து விட்டு கடைசியில் "இது நான் செய்ய வில்லை ஹசன் அலிதான் செய்தார்" என்று சொல்லுவது நகைச்சுவை விசயமாக அவதானிக்கப்படுகிறது.  எது எவ்வாறாக இருந்தாலும் யார் குத்தினாலும் அரிசியாக வேண்டும் என்பதே அனைவர்களினதும் எதிர்பார்ப்பாகும். 

1 comment:

  1. எமது மக்கள் 'இது ஒரு அரசியல் தந்திரம்' என்று விளங்கிக்கொள்ள வெகுகாலம் செல்லாது....!!!

    ReplyDelete

Powered by Blogger.