Header Ads



விஜித தேரரின் அழைப்பு – ஒரு மீள் வாசிப்பு


(நவாஸ் சௌபி)

விஜித தேரரின் ஏற்பாட்டில் நேற்று (23.03.2014) காலிமுகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட மதத் தலைவர்களின் தீர்மானம் நிறைவேற்றும் பேரணியானது சாத்தியமற்று கைவிடப்பட்டிருக்கிறது. விஜித தேரர் போன்ற சகோதரத்துவ உணர்வு கொண்ட தேரர்கள் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான பௌத்தவாத எதிர்ப்புணர்வுகளை நிறுத்துவதற்கான முன்னெடுப்புகளை பௌத்த பிக்குகள் மட்டத்திலும் சிங்கள மக்கள் மத்தியிலும் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும், அத்தகைய உண்ணதமான உணர்வின் மதிப்பவர்களாகவும் அதனை கண்ணியப்படுத்துகின்றவர்களாகவும் நாங்கள் இருப்போம்.

மேலும் விஜித தேரரின் அழைப்பில் பிக்குகளும் சிங்கள மக்களும் நமக்கு ஆதரவான ஒரு அமைதி ஆர்ப்பாட்டத்தை நடத்துவதில் முஸ்லிம்கள் கலந்துகொள்வதிலுள்ள தயக்கத்தை அல்லது ஆபத்தைத்தான்  நான் எனது கருத்தில் வெளியிட்டிருந்தேன்.

அத்துடன் அவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டத்தை பிக்குகளும் சிங்கள மக்களும் தனித்து முன்னெடுப்பதில்  எத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன என்பதையும் நாம் அவதானிக்கலாம் என்ற நோக்கும் அதற்குள் இருந்தது.

அரசுக்கும் நாட்டுக்கும் ஆதரவான ஆர்ப்பாட்டங்களை முஸ்லிம்கள் தனித்துச் செய்யவில்லையா? அதுபோல் முஸ்லிம்களுக்கான ஒரு ஆதரவு ஆர்ப்பாட்டத்தை பிக்குகளும் சிங்கள மக்களும் தனித்து முன்னெடுப்பதில் பொதுபல சேனாவுக்கு சிங்கள சமூகத்தினுள்ளும் எதிர்ப்புகள் இருப்பதை  அது தெளிவாக வெளிப்படுத்தும்.  

எனவே முஸ்லிம்களுக்கு எதிரான பொதுபல சேனாவின் நடவடிக்கைகளுக்கு முதலில் சிங்கள மக்களும் பிக்குகளும் அமைதிப் பிரகடனங்கள் செய்வதே சிறந்தது. அதில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை என்பதற்காக அவர்கள் அதைக் கைவிடுவதும் இதன்பிறகு அவ்வாறான ஒரு செயலை செய்ய அவர்கள் முன்வரமாட்டார்கள் என்பதும் அர்த்தமற்றது. 

இந்த நோக்கங்களைக் கருத்தில் கொண்டே விஜித தேரரின் அழைப்பை ஏற்று முஸ்லிம்களை குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்ற அபிப்பிராயத்தை தெரிவித்தேன். அக்கருத்தானது ஒரு கோழைத்தனமாகவும் எமது சமூகத்தை பயந்தவர்களாக ஆக்கியிருப்பதாகவும் சிலருக்குத் தோன்றலாம். ஆனாலும் எந்த சந்தர்ப்பத்தில் எந்தக் கருத்து பயனுடையது என்பதை சிந்திக்கின்ற மன ஆளுமையை எமது சமூகத்துக்கு அளிப்பதே எனது பொறுப்பாக இருந்தது.

ஆவேசங்களும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் எமக்குள்ளும் எரிந்துகொண்டிருப்பதை நாங்கள் மூடியே வைத்திருக்கின்றோம். மாறாக அதை முற்றாகப் புதைத்து வைக்கவில்லை. 

யுத்தம் என்பது தந்திரம் இதனை எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பல இஸ்லாமிய யுத்தவரலாறுகளின் ஊடாக எமக்குக் கற்றுத்; தந்திருக்கிறார்கள். யுத்தத்தில் விட்டுக் கொடுப்பதும் மிகப் பெரும் பலம்தான்.  

விட்டுக் கொடுப்பது என்பது பயந்து ஓடுவது என்று அர்த்தம் அல்ல. 
விலகி நிற்பது என்பது கோழைத்தனமும் அல்ல. 
யுத்தத்தில் அம்பின் கூர்மையைவிட புத்தியின் கூர்மை வெற்றியைத் தருவதுண்டு. 

இலங்கையில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பௌத்த முகத்தின் தீவிரம் என்பது மிகச் சாதாரணமான ஒன்றல்ல. அதன் பின்னால் மிகப்பெரும் அரசியல் வழிமுறைகளும் மிகுந்த திட்டங்களும் இருக்கின்றன. எனவே இந்த தீவிரவாத முகம் எங்களைத் தேடி வந்தாலும் அதனை எதிர்த்து நாங்கள் சென்றாலும் இரண்டிலும் அதிக நஷ்ட்டம் நாங்களே அடைய வேண்டிய நிலை ஏற்படும்.

'துஷ்ட்டனைக் கண்டால் தூர விலகு' என்பார்கள் அதுபோன்று 'ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு' என்றும் கூறுவார்கள் ஒவ்வொன்றையும் செய்வதற்கு பொருத்தமான சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. ஆழம் அறியாமல் காலை விடக் கூடாது. எங்களுக்கு எதிராக போர் கொடி தூக்கி இருக்கும் பொதுபல சேனாவுக்கு எதிராக நாங்களும் போர்க்கொடி தூக்க அவர்களைப் போல் நாங்கள் ஒன்றும் அர்த்தம் அற்றவர்கள் அல்ல. இது ஒன்றும் சிறு பிள்ளைச் சண்டையும் அல்ல. 

இதுவிடயத்தில் முஸ்லிம்கள் நிதானமாக இருப்பதே சாலச் சிறந்ததாகும். ஏனெனில் இலங்கையில் மட்டுமல்ல இன்றைய உலகப் பயங்கரவாதம் என்பதும் முஸ்லிம்களுக்கு எதிரானதாகத்தான் இருக்கிறது. முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த உலக எதிர்ப்புகளும் இன்று முஸ்லிம் சமூகத்தையே குறிவைத்திருக்கிறது. இதனடிப்படையிலும் இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற முஸ்லிம் விரோதச் செயல்களில் சர்வதேச வலைத் தொடர்புகளும் இருக்கின்றது. அதற்கு வெளிப்படையான ஒரு உண்மைதான் ஞானசாரத் தேரரின் மியன்மார் பயணம். எனவே இதனை எதிர்ப்பதற்கு வெறும் வாய்ப் பேச்சும் அவசரமான ஆத்திரமும் ஒருநாளும் உதவப் போவதில்லை. இதற்கு தூர நோக்காகச் சிந்திக்கின்ற நல்ல சிந்தனைச் சமூகம் ஒன்று உருவாக்கப்பட்டு எந்த இழப்புகளும் அழிவுகளும் இல்லாத முடிவுகளை நோக்கிப் பயணிக்க வேண்டிய நகர்வுகளை நாங்கள் ஏற்படுத்த வேண்டும். 

இதற்குப் புறம்பாக, பொதுபலசேனா போன்ற பேரினவாத இயக்கங்களுக்கு எதிரான கோஷங்களை அல்லது ஆர்ப்பாட்டங்களை நாங்கள் முன்னெடுப்பதானால் அதனை நன்கு சிந்தித்து, வேறுவிதமாகத் தீர்மானித்து நாம் தனித்துவமாக முன்னெடுக்க வேண்டும். 

ஏனெனில் எதைச் செய்வதிலும் ஒரு திட்டமிடலும் முன் ஆயத்தமும் இருக்க வேண்டும். அவசரப்பட்டு ஒரு கருத்தைச் சொல்வதுபோன்று ஒரு போராட்டத்தை தொடங்கிவிட முடியாது. எங்களுடைய பிரச்சினைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் தீர்வு பெறுவது என்றால் அதனை நாங்கள்தான் முன்னெடுத்து ஒழுங்கமைக்க வேண்டும். அப்போதுதான் அதன் முழுமையான விளைவுகளையும் எங்களால் தீர்மானிக்க முடியும் இன்னும் ஒருவரின் ஏற்பாட்டில் நாங்கள் கலந்துகொள்வதில் எமக்குள்ள விளைவுகளை எம்மால் தீர்மானிக்க முடியாது போகும்.

முஸ்லிம்கள் யுத்தம் செய்ய வருவார்கள்,  என்றுதான் பொதுபல சேனா போன்ற அமைப்புகள் எங்களை சீண்டிக் கொண்டிருக்கின்றது அதற்கு இரை போடுவது போன்று நாங்களாக போய் நின்று எங்கள் தலைகளில் நாங்களே மண்ணைவாரிப் போடக் கூடாது.  நாங்களும் ஆண்பிள்ளைகள்தான் என்று நெஞ்சை நிமித்தி அதை நிரூபிக்கச் சென்று இறுதியில் ஆண்மையை இழந்துவிட்டுவரும் முட்டாள்தனமான ஒரு செயற்பாடாக இது ஆகிவிடக்கூடாது என்பதைத்தான் இது விடயத்தில் எனது கருத்து வலியுறுத்துகிறது.

1 comment:

  1. ரொம்ப நீளமா வந்தீட்டீங்க.
    வாசிக்கவே நேரமில்லை.

    இளகிய இரும்பை கண்டால்,கொள்ளன் தூக்கிதூக்கி அடிப்பானாம். நாங்கள் எல்லாம் அதே இரும்பாகி விட்டோம். இனவாத சிங்களவரின் சண்டித்தணங்கள் எல்லாம் சினிமா ஸ்டைல் சண்டித்தணமே.எப்ப நாம முன்னேறுகிறோமோ,அப்போ நம்மை விட்டும் அவன் பின்னோக்குவான்.

    ReplyDelete

Powered by Blogger.