பலசேனாக்களின் நச்சுக் கனவுகள் ஒரு போதும் நனவாகமாட்டாது - ஹனீபா மதனி
இந்த நாட்டில் பெரும்பான்மையாக வாழுகின்ற சிங்கள மக்கள் இதர இனங்களுடன் மிகவும் அன்பாகவும், இரக்க சுபாவத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக சிங்கள முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவானது மிகவும் அலாதியானதாகும்.
ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் சார்பாக மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து 'சேர்ச்' வீதியில் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்ற பிரசார கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்திய அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பணிப்பாளருமாகிய எஸ்.எல்.எம். ஹனீபா மதனி இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அங்கு உரையாற்றுகையில்,
இந்த புகழ் பூத்த உறவு முறைகள் வரலாறு நெடுகிலும் மிகக் காத்திரமாக இருந்து வந்திருப்பதை நாம் காணக் கூடியதாகவிருக்கின்றது. வட கிழக்குக்கு வெளியில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருவதும் சில வேளை ஒரே கூரையின் கீழ் அமையப் பெற்றுள்ள பல அறைகளில் ஒன்றாக ஐக்கியமாக வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் மத்தியில் நடைபெறும் திருமண பைவங்களிலும், மரண வீடுகளிலும் வாஞ்சையோடு இரு சாராரும் இரண்டறக் கலந்து கொண்டு துக்கத்தையும், சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்கின்ற அற்புதமான உறவு முறைகளையும் நாம் கண்டு வந்திருக்கிறோம்.
துரதிஷ்டவசமாக 2012 ஆம் ஆண்டு முதல் இன ஐக்கியத்தை இல்லாதொழிக்கும் வகையில் பலசேனாக்கள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றார்கள். ஆனால் இந்த உறவைப் பிரித்து வைக்க நினைக்கும் பலசேனாக்களின் நச்சுக் கனவுகள் ஒரு போதும் நனவாகமாட்டாது. அன்பு, கருணை, நேசம் என்பவற்றிற்குப் பெயர் போன சிங்கள பௌத்தர்கள் இவர்களின் குரோதமும், வைராக்கியமும் நிறைந்த இந்த இழி குணத்திற்குத் துணைபோக மாட்டார்கள். மாறாக இவர்களை அந்த மக்களே துரத்தி அடிக்கும் நாள் மிக விரைவில் வரும்.
பௌத்த, இந்து, கிறிஸ்தவ இஸ்லாமிய சமையங்களைப் பின்பற்றுகின்ற பெருவாரியான மக்கள் மிகவும் ஐக்கியமாக வாழுகின்ற கொம்பனித்தெரு நகரம் பல்லின மக்கள் பலசமயங்களைப் பின்பற்றி வாழுகின்ற அழகையும் சிறப்பையும் பறைசாற்றுகின்ற ஓர் முன்மாதிரியான நகரமாகும். இங்கு அவரவர் தங்களது நம்பிக்கைக்கு ஏற்ப தத்தமது சமயங்களை சுதந்திரமாகவும், பற்றுறுதியுடனும் பின்பற்றி வாழுகின்றனர். நமது நாட்டின் பல பகுதிகளில் இது போன்ற மத நல்லிணக்கத்துடன் பல்லின மக்கள் சீவிக்கின்ற நகரங்களும், கிராமங்களும் அமையப் பெற்றுள்ளது இந் நாட்டின் சிறப்பம்சமாகும். அங்கெல்லாம் சமயம் வேறுபட்டாலும் அம் மக்கள் ஒரே குடும்பத்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நாட்டில் இருக்கும் இவ்வாறான நல்ல மங்களகரமான சூழல்களை பார்த்து சகிக்க முடியாத பலசேனாக்கள் குரோதமாகவும் வக்கிரமான உணர்வுகளுடனும் இதனை சின்னா பின்னப்படுத்தி அழித்துவிட முயற்சிக்கின்றனர்.
வட கிழக்கு யுத்தத்தின் போது சட்டத்தை கையில் எடுத்த பிரபாகரனின் ஆயுததாரிகள் எவ்வாறு இன மோதல்களையும் பள்ளிகள் மீதான தாக்குதல்களையும் மேற்கொண்டனரோ அதை விட மோசமான வகையில் மிகவும் பகிரங்கமான முறையில் சட்டத்திற்கு கட்டுப்படாது பலசேனாக்கள் அண்மைக் காலமாக நடந்து வருகின்றனர்.
இவர்களின் அட்டகாசங்களை நமது நாட்டின் சட்டம் கண்டுகொள்ளாத போது முஸ்லிம் காங்கிரஸிற்கு இதுபற்றி பேச வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஏற்பட்டது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரை தேசத் துரோகிகள் என முத்திரை குத்த வருகின்றனர்.
தலைநகர் கொழும்பில் செறிந்து வாழும் முஸ்லிம்கள் தமது வாக்குகளை சிதற விடாது மரச்சின்னத்திற்கு அளித்து நமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். கடந்த ஆண்டில் நடைபெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலும், ஐக்கிய மக்கள் முன்னணியிலும் களம் இறங்கிய முஸ்லிம் வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் வாக்குகளினால் ஒரு முஸ்லிம் பிரதிநிதியைக் கூட இத் தேசியக் கட்சிகளில் இருந்து தெரிவு செய்து கொள்ளமுடியாது போய்விட்டது. இந்த துரதிஷ்;டவசமான நிலை கொழும்பில் ஏற்படாது நாம் பார்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயக் கடமையாகும்.
இதற்காக நாம் ஐக்கியப்பட்டு முஸ்லிம்களின் உரிமைக் குரலான மு.காவின் மரச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டியது நமது மிக முக்கியமான பணியாகும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் களத்தில் முஸ்லிம் மக்களின் வாக்குகளை மயில் சின்னத்தில் வேண்டி நிற்கின்றன. இக் கட்சியின் பிறந்த மாகாணமான வன்னியில் நடைபெற்ற வட மாகாண சபை தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் களம் இறங்கிய இக் கட்சி ஏன் கொழும்பில் மயில் சின்னத்திற்கு மாற வேண்டி ஏற்பட்டது என்பதையும் இக் கட்சி ஆரம்பிக்கப்படும் பொழுது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெயர் தாங்கி இருந்தது. இப்பொழுது இக் கட்சியின் பெயரில் இருந்த முஸ்லிம் என்ற பதம் அகற்றப்பட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. எந்த எஜமானர்களை திருப்திபடுத்துவதற்காக தமது கட்சியின் பெயரில் இருந்து முஸ்லிம் எனும் பதம் அகற்றப்பட்டது என்பதை கொழும்பு வாழ் வாக்காளப் பெருமக்கள் இக் கட்சி சார்பாக வாக்குகள் கேட்டு வருகின்றவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
Post a Comment