மன எழுச்சிகளை புரிந்து கொள்ளுவதன் மூலம், மன அழுத்தங்களை குறைத்துக் கொள்ள முடியும்
(ஏ.எல்.ஜுனைதீன்)
கண்கள் இருந்தும் தீயவற்றைப் பார்ப்பதிலிருந்தும், காதுகள் இருந்ததும் கூடாதவற்றைக் கேட்பதிலிருந்தும், வாய்களினால் மற்றவர்களை குறைகூறுவதிலிருந்தும், பொய் பேசுவதிலிருந்தும் விசேட தேவையுடைய பிள்ளைகள் இறைவனினால் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.
ஹியுமன் லின்க் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்பூட்டல் நிகழ்வும் கலை நிகழ்ச்சியும் 3 ஆம் திகதி திங்கள்கிழமை கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியின் எம்.எஸ்.காரியப்பர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விசேட தேவையுடைய குழந்தைகளும் கலந்து கொண்டனர் ஹியுமன் லின்க் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.காமர்டீனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சுகாதார வைத்திய அதிகாரி கே.எல்.எம்.ரயீஸ் தலைமை வகித்தார்.
இவ்வைபவத்தில் கலந்துகொண்டு உரைநிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது,
மன எழுச்சிகளை புரிந்து கொள்ளுவதன் மூலம் மன அழுத்தங்களை குறைத்துக் கொள்ள முடியும், இன்றைய போராட்ட வாழ்க்கையை கொண்டு செல்வதில் மனிதன் பல கஸ்டங்களை எதிர் கொள்கின்றான். இவ்வாறான கஸ்டங்களிகளில் மன அழுத்தங்கள் கொண்ட மனிதர்களாக மாறும் நிலை தோன்றியுள்ளது. இவ்வாறான மன அழுத்தங்களை விசேட தேவையுடைய பிள்ளைகளின்மேல் பெற்றோர்கள் திணிக்காமல் அவர்களை பாதுகாத்துக் கொள்ளுவது பாரிய பொறுப்பாக இருக்கிறது .
அவர்களுக்குள் அவர்கள் ஒரு உலகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள், அவர்களுக்கென்று ஒரு தனித்துவமான மொழி, நடைமுறைகள் என பல்வேறு விடயங்களில் அவர்கள் வேறுபட்டும் காணப்படுகின்றார்கள். அவர்களது புலனுறுப்புகள் அவர்களை சாதாரண மனிதர்களிலிருந்து பிரித்துக் காட்டினாலும் அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவந்து அவர்களை அவர்களாக பராமரித்துக் கொள்வதற்கு நாம் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க முற்பட வேண்டும். என அவர் கூறினார். இந்நிகழ்வில். விசேட தேவையுடைய குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Post a Comment