முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறிவிடும் என்ற அச்சம் - ஹக்கீம்
'இன்று 01-03-2014 காலையில் முக்கிய அமைச்சர்கள் சிலர் என்னுடன் கதைத்தார்கள். ஏனென்றால், முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறிவிடும் என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் அரசாங்கத்தை விட்டு வெளியேறி விட்டால் ஆபத்தென்ற அச்சம் அவர்களிடம் மேலோங்கியிருக்கின்றது'. இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.
மேல் மாகாணசபைத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாணந்துறை ஹேனமுல்லையில் சனிக்கிழமை (1) மாலை நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் உரைநிகழ்தும் போதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி. ஹசன் அலி (செயலாளர் நாயகம்), எம்.எஸ்.எம். அஸ்லம் மற்றும் வேட்பாளர்களும், பிரதேச மக்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் உரையாற்றும் பொழுது முஸ்லம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,
'களுத்துறை மாவட்டத்தைப் பொறுத்தவரை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேசியப் பட்டியலினூடாக பெற்றுக் கொடுத்துள்ளமைக்கு நன்றிக் கடனாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வாக்களிக்க வேண்டியது இம்மாவட்ட முஸ்லிம்களின் கடமையாகும்.
இந்த பாணந்துறையைப் பொறுத்தவரை பிரதேச சபையில் வழமையாக சிங்கள பௌத்தர்களே தவிசாளராக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையே தவிசாளராக நியமிக்க எத்தனிக்கப்பட்ட நிலையில், ஐக்கிய தேசிய கட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஆகக் கூடிய விருப்பு வாக்குகளால் வெற்றி பெற்ற உறுப்பினரை தவிசாளராக நியமிக்கச் செய்ததன் மூலமும் எமது கட்சி சாதனை ஒன்றை நிலை நாட்டியிருந்தது.
எமது கட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்ற காரணத்தினால் ஜனாதிபதியும், நானும் அடிக்கடி முரண்பட்டுக் கொள்கிறோம். இது புதிய விடயமல்ல. வடமாகாண சபை தேர்தலில் தனித்துப் போட்டியிட நாம் தீர்மானித்த பொழுதும் ஜனதிபதிக்கும் எனக்குமிடையில் காரசரமான வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு நாம் தனித்துப் போட்டியிட தீர்மானித்ததன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடுவோம் என இந்த அரசாங்கத்தின் பாங்காளியான இன்னொரு முஸ்லிம் கட்சி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததன் விளைவாகவே அந்த முரண்பாடு ஏற்பட்டது.
களுத்துறை மாவட்டத்திலும் இந்தத் தேர்தலில் நாம் எமது மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதன் பயனாக மாகாண சபையில் முஸ்லிம் உறுப்பினர்களை விகிதாசார தேர்தல் முறையின் காரணமாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியில் சங்கமம் அடைந்து போட்டியிட்டு பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத கடந்த கால அனுபவத்தை நினைவூட்ட விரும்புகின்றேன். பாராளுமன்ற ஆசனத்தைப் பெறுவதே கடினமானதாக இருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பேரினவாத அரசியல் கட்சிகளில் போட்டியிட்டு மாகாண சபை ஆசனம் ஒன்றைப் பெறுவது அடையமுடியத விஷயம்;;: எட்டமுடியாத இலக்கு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாவட்ட முஸ்லிம்களின் நன்மைக்காக, நாம் எடுத்துள்ள முடிவு அரசாங்கத்துடன் எங்களுக்குளள உறவில் எந்தப்பாதிப்பை ஏற்படுத்தினாலும் பரவாயில்லை என்ற அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது. களுத்துறை மாவட்டத்தில் எமது பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் அதேவேளையில் எமது சமூகத்தின் குரல் இந்த மாகாண சபையில் சுதந்திரமாக ஒலிக்க வேண்டும்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் மறைந்த தலைவர் அஷ்ரப் மட்டுமல்லர் நானும் கூட அவருடன் முரண்பட்டிருக்கின்றோம். எமது உறுப்பினராக இருந்து பதவிக்காலம் முடிவில் கட்சி மாறிய தொட்டவத்தையைச் சேர்ந்த ஒருவரை சந்திரிக்கா பின் கதவால் உள்வாங்கி மாகாண சபைத் தேர்தலில் நிறுத்த முன்வந்தபொழுது, நாம் அவசர அவசரமாக நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்யும் இறுதி நாளில் களுத்துறை பள்ளிவாசலில் தரையில் அமர்ந்து தனியான வேட்பு மனுவைத் தயாரித்து தாக்கல் செய்ததன் மூலம் எமது பலத்தை நிரூபித்து வெற்றி பெற்று அவருக்கு ஒரு பாடத்தை புகட்டியிருந்தோம்.
ஜனாதிபதி வெள்ளிக்கிழமை (28) முற்பகல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் என்னுடன் முரண்பட்டு காரசாரமான வார்த்தைகளை கூறினார். இன்றைய பத்திரிகைகளில் அது கொட்டை எழுத்துகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரிடத்திலே இந்த நாட்டில் சமய ரீதியான சகிப்புத் தன்மையற்ற விதத்தில் உருவாகி வரும் வன்முறைப் போக்கை ஒட்டிய புதிய கலாசாரம் பற்றி ஒட்டியெழுந்துள்ள பிரச்சினையை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்து கட்சி என்ற அடிப்படையில் தெரியப்படுத்திய கருத்துக்களை மையப்படுத்தியதாக அது இருந்தது.
ஒரு கட்சிக்குள் பல விதமான கருத்துக்களையும் மிகத் தீவிரமான நிலைப்பாடுகளையும் கொண்டவர்கள் இருப்பது இயல்பு. ஓர் இயக்கம் என்ற அடிப்படையில் கட்சியில் மெத்தனப் போக்கோடு நிலைமைகளை கையாள வேண்டுமென்ற கருத்துள்ளவர்கள் இருப்பார்கள். அவ்வாறே தீவரமாக விடயங்களை கையாள வேண்டுமென அழுத்திப் பேசுபவர்களும் இருப்பார்கள். ஜனநாயக் கட்சி என்ற அடிப்படையில் எல்லா விதமான கருத்துக்களையும் உள்வாங்கி அவற்றை மசூரா எனப்படும் கலந்தாலோசித்தலின் அடிப்படையில் உரிய முடிவெடுக்கும் அதிகாரம் கட்சித் தலைமைக்கு இருக்கிறது. சமூகத்தின் அரசியல் அபிலாஷையை பிரதிபலிக்கும் விஷயத்தை தமது அமைச்சுப் பதவி பறிபோகும் என்ற சுயநலத்தை வைத்து தலைமை புறந்தள்ளி விட முடியாது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. உண்மைகளை மூடி மறைக்க முடியாது.
போதாக் குறைக்கு முஸ்லிம்களின் வாக்குகளை சூரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கததுடன் இருப்பதாக கதையளக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்கின்றது என்கிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்காமல், எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு சமூகத்திற்கு அநியாயம் நடக்கின்றது என்று பதாதைகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு, கோஷமிட்டுக் கொண்டு வீதியில் இறங்கி வெறுமனே ஆர்ப்பாட்டம் செய்கின்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்க முடியாது.
அரசாங்கம் மூன்றில் இரண்டளவில் ஆசனங்களைப் பெற்ற நிலையில் ஆதரவு அளிக்குமாறு உலமாக்களும், புத்திஜீவிகள் பலரும் எங்களிடம் கூறினார்கள். ஆனால், அரசாங்கத்தில் இணைந்த பிறகு சில விடயங்களை நாங்கள் சங்கடப்பட நேர்ந்தது. அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென்று கூறிய உலமாக்களும், புத்திஜீவிகளும் முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சினைகள் கூடக்கூட அரசாங்கத்தை விட்டு விலக வேண்டுமெனக் கூற ஆரம்பித்தனர். ஒரு பலமான அரசாங்கம் இருக்கின்ற பொழுது, முஸ்லிம் காங்கிரஸ் பலவீனமடைந்து விடக் கூடாது என்ற ஆதங்கம் கட்சி ஆதவாளர்களிடையே இருக்கின்றது. ஆனால், அதற்காக துணிகரமான முடிவுகளை எடுப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயங்கியது கிடையாது.
நேற்று அமைச்சரவையில் நடந்த வாக்குவாத்தைப் பற்றி வெளியில் பேசுவது என்னைப் பொறுத்தளவில் அநாகரிகமான விஷயம். அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஒரு கூட்டுப் பொறுப்பிருக்கின்றது. சட்டி முட்டிகளை உடைக்கின்ற வேலையை எங்களுக்குச் செய்ய முடியாது. இன்று காலையில் முக்கிய அமைச்சர்கள் சிலர் என்னுடன் கதைத்தார்கள். ஏனென்றால், முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறிவிடும் என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் அரசாங்கத்தை விட்டு வெளியேறி விட்டால் ஆபத்தென்ற அச்சம் அவர்களிடம் மேலோங்கியிருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் முன்னர் கூறியவாறு ஜனாதிபதியோடு முரண்பாடு ஏற்படுகின்றது. இந்தக் கட்சி இதன் அரசியலை சிறப்பாக செய்கிறது என்பதுதான் அதன் அர்த்தம். ஆனால், நான் கற்பாறையில் போய் தலையை உடைக்கும் வேலையை செய்வதில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜெனிவாவுக்கு போகாதவர் அல்லர். அவர் எதிர்க் கட்சியில் இருககும் பொழுது 1990ஆம் ஆண்டு ஜே.வி.பி. கலவரம் தொடர்பான ஆவணங்களுடன் ஜெனிவாவிற்கு போகப் போய் விமான நிலையத்தில் அவை பறிக்கப்பட்டு, வழக்கு தொடரப்பட்ட விஷயம் எவருக்கும் தெரியாதது அல்ல. அது 'ராஜத்துரோகம்' அல்ல. இப்பொழுது நாம் ஆளும் கட்சியில் இருந்து செய்வதுதான் ராஜத்துரோகமாகப் பார்க்கப்படுகின்றது. நாங்கள் ஆளும் கட்சிக்குள் இருக்கும் எதிர்க் கட்சி என்பதை அரசாங்கம் ஜீரணித்துக் கொள்ள வேண்டும்.
நாங்கள் அரசாங்கத்தோடு போய் தானாகக் குந்தவில்லை. கட்சி உறுப்பினர்கள் பின்கதவால் உள்நுழையும் ஆபத்துக் காரணமாக அன்றிருந்த சூழ்நிலையில் இணைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வாழைச்சேனையில் நாட்டாமை ஒருவர் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. 'தேர்தல் காலத்தில் நாங்கள் கஷ்டப்பட்டு வாக்களித்து தெரிவு செய்யும் உறுப்பனர்களை சந்தையில் போட்டு லாபய், லாபய் (மலிவு, மலிவு) என விற்கப்படுகிறது' என்று அவர் கூறினார். தேர்தல் முடிந்த கையோடு விலை போகிறார்கள்.
இந்தக்கட்சி அமைச்சர் பதவியை தூக்கி எறிந்து விட்டு வந்த கட்சி. அமைச்சர் பதவிகளுக்காக நாங்கள் ஆலாய் பறப்பவர்கள் அல்லர். ஆனால், களநிலவரத்தை அறிந்து காரியமாற்ற வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்' என்றார். சனிக்கிழமை (1) இரவு பண்டாரகம, அட்டுலுகமையில் நடந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றினார்.
Post a Comment