"அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் மோசமான அதிபர் ஒபாமாதான்'
"அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் மோசமான அதிபர் ஒபாமாதான்' என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லூசியானா ஆளுநரும், குடியரசுக் கட்சியின் வருங்கால அதிபர் வேட்பாளர் எனக் கருதப்படுபவருமான பாபி ஜிண்டால் விமர்சித்துள்ளார்.
தலைநகர் வாஷிங்டனில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர்தான் இதுவரை பதவி வகித்த அமெரிக்க அதிபர்களிலேயே மிக மோசமானவர் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அந்த இடத்தை தற்போதைய அதிபர் ஒபாமா பிடித்து விட்டார்.
கடந்த சில நாள்களாக உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் இதை உறுதிப் படுத்துகின்றன. ரஷிய அதிபர் அண்டை நாடு (உக்ரைன்) மீது படையெடுப்பு நடத்துகிறார். நமது அதிபரோ படைக்குறைப்பைப் பற்றி பேசுகிறார்.
வலிமையான அமெரிக்காதான், அமைதியான உலகத்துக்கான தேவை என்பதைக் கூட உணராத அதிபராக ஒபாமா இருக்கிறார்.
அமெரிக்காவின் மிகச் சிறந்த பள்ளிகளில் அவர் படித்திருந்தும் பலனில்லை. நான் மட்டும் ஒபாமாவாக இருந்திருந்தால், மூன்று ஆண்டுகளாக படித்தும் எதையும் கற்றுக் கொள்ளாததால், கட்டணத்தைத் திருப்பித் தரச் சொல்லி ஹார்வர்டு சட்டக் கல்லூரி மீது வழக்கு தொடுத்திருப்பேன் என்று கூறினார்.
Post a Comment