பின்லேடன் மருமகன் மீதான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் தொடங்கியது
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்பட்ட ஒசாமா பின்லேடன் மருமகன் மீதான வழக்கு இன்று மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தொடங்கியது. அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி பயணிகள் விமானத்தை கடத்தி சென்று உலக வர்த்தக மையத்தின் கட்டிடத்தை தகர்த்தனர்.
இதில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அல் கய்தா நடத்தியதாக அமெரிக்க புலனாய்வு படையினர் தெரிவித்திருந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் சதி திட்டம் தீட்டியது, அமெரிக்க புலனாய்வு படையினரை கொல்ல முயன்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் அல் கய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் மருமகனும், செய்தி தொடர்பாளருமான சுலைமான் அபுகைத்தை அமெரிக்க படையினர் தேடி வந்தனர். கடந்த ஆண்டு துருக்கில் இருந்து குவைத்துக்கு நாடு கடத்தும் வழியில் ஜோர்டானில் வைத்து சுலைமான் அபுகைத்தை அமெரிக்க படையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து அமெரிக்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், இரட்டை கோபுர தாக்குதல்களுக்கு பிறகு சுலைமான் அபுகைத், ஒசாமாவுடன் சேர்ந்து அமர்ந்து தாக்குதல் சம்பவங்களை பார்க்கும் வீடியோ காட்சிகளை நீதிபதிகளிடம் காண்பிக்க உள்ளனர். பின்னர் கைதுக்கு முந்தைய நடவடிக்கைகள் குறித்து சுலைமான் அபுகைத் நீதிபதிகளிடம் விளக்கி கூறுவார் என்றும் தெரிவித்தனர்.
இதற்காக மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வழக்கில் ஆஜராக வரும் வக்கீல்கள் உள்பட அனை வரும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட வெடிகுண்டு சோதனைகளுக்கு பிறகே நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் நீதிமன்றத்தை சுற்றியும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இரட்டை கோபுர தாக்குதல் உள்ளிட்ட வழக்குகளில் சுலைமான் அபு கைத் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு ஆயுள்தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment