Header Ads



உலக அளவிலான அதிக செலவு மிக்க நகரங்களில் முதலிடத்தை பெற்றது சிங்கப்பூர்


உலக அளவில் எடுக்கப்பட்ட சர்வேயில், அதிக செலவாகும் நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதில், மும்பை, டெல்லி போன்றவை ரொம்பவே மலிவான நகரங்கள் என கூறப்பட்டிருக்கிறது.பொருளாதார நிபுணர் புலனாய்வு பிரிவு என்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் அதிக செலவு மிக்க நகரங்கள் குறித்த சர்வேயை எடுத்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம், உலக நாடுகளில் முக்கியமான 140 நகரங்களில் சர்வே மேற்கொண்டது. இதில், அந்தந்த நகரங்களில் விற்பனையாகும் முக்கியமான 160 பொருட்களின் விலை, சேவை மற்றும் வெளிநாடு செல்லும் ஊழியர்களுக்கு தரப்படும் பயணப்படி உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு சர்வே நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, உலகிலேயே அதிகமான செலவு மிக்க நகரமாக சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அங்கு கார்களின் விலை தாறுமாறாக ஏறி வருகிறது. இதுதவிர, வீட்டு வாடகை, நிலத்தின் மதிப்பு, பொருட்களின் விலை, ஷோரூம்களில் விற்கப்படும் ஐரோப்பிய ஆடைகளின் விலைகளும் உச்சகட்டத்தை எட்டி வருகிறதாம். மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை கூட பிற நாடுகளை நம்பியே சிங்கப்பூர் இருப்பதால், அவற்றின் விலையும் அதிகளவில் உள்ளது. ஒட்டுமொத்த போக்குவரத்து செலவு என்பது நியூயார்க் நகரத்தை காட்டிலும் சிங்கப்பூரில் 3 மடங்கு அதிகம் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

இதற்கு ஏற்றார் போல் தனிநபர் வருமானமும் உயர்ந்து வருகிறது. அங்கு தனிநபரின் சராசரி மாத வருமானமே இந்திய மதிப்பில் ரூ.30 லட்சத்தை தாண்டுகிறது. இதனால், கடந்த சர்வேயின் போது 6வது இடத்தில் இருந்த சிங்கப்பூர் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது. ஜப்பானின் யென் மதிப்பு குறைந்து வருவதால், அந்நாட்டின் தலைநகரான டோக்கியோ முதலிடத்திலிருந்து 6வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. இதில் 2வது இடத்தில் பாரிஸ், 3வது இடத்தில் ஓஸ்லோ, 4வது இடத்தில் ஜூரிச், 5வது இடத்தில் சிட்னி ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை, தலைநகர் டெல்லி போன்றவை எல்லாம் சர்வேதச நாடுகளை பார்க்கும் போது, ரொம்பவே செலவு குறைவான நகரங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.