எங்கு எமது சமூகத்திற்கு அநியாயம் இழைக்கப்படுகின்றதோ, அங்கு சமூகமளித்திருப்போம் - றிசாத் பதியுதீன்
(கொழும்பு புதுக்கடையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா,மற்றும் எ.எஸ்.எம்.இர்ஷாத்)
தலைநகரில் வாழும் மக்கள் தன்மானத்துடன் தமது தனித்துவ அடையாளங்களை அச்சமின்றி வெளிப்படுத்தி வாழும் உரிமைக்காக எமது கட்சி பொராடும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் எங்கு எமது சமூகத்திற்கு அநியாயம் இழைக்கப்படுகின்றதோ அங்கு அம்மக்களின் பாதுகாப்பு தொடர்பில் சமூகமளித்திருப்போம் என்றும் கூறினார்.
மேல் மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.எம்.சஹாரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் புதுக்கடை அப்துல் ஹமீத் வீதியில் இன்று (2014.03.01) இரவு இடம் பெற்றது. இங்கு மேலும் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் உரையாற்றுகையில் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள்,அன்று உயிருடன் இரந்த காலத்தில் எதை இந்ந சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்றால்,ஜனாதிபதியிடமும்,ஏனையவர்களிடமும் அதனை செய்ய வேண்டும் என்ற பணிப்புரையினைவிடுத்தால் அதனை அவர்கள் உடனே ஏற்றுக்கொள்வார்கள்.இதனால் அன்று இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சிகளை தீர்மாணிக்கும் கட்சியாக இருந்தது.ஆனால் அவரது வபாத்தின் பின்னர் இந்த கட்சியின் தலைமைத்துவம் இதனது கௌரவத்தை இல்லாமல் ஆக்கிவிட்டது.ஆட்சியாளர்களினால் வெறுக்கப்படும் ஒரு கட்சியாக தம்மை ஆக்கி கொண்டது.சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதித தொடர்பில் பேசக் கூடிய இடங்களில் பேசா மடந்தையாக இருந்துவிட்டு வெளியில் வந்து வெறும் வாய்ச்சவடல்களை போடும் ஒரு செல்லாக்காசான கட்சியின் நிலைக்குள்ளாகியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தெடுத்து அதனை சமூகத்தின் விமோசனத்திற்காக பயன்படுத்த நாம் ஆசைப்பட்டோம்,அதற்காக பல்வேறு தியாகங்களை செய்தோம்.ஆனால் துரதிஷ்டம் இந்த கப்பல் பயணிக்கும் திசை மாறியது,மாலுமிக்கு சொன்னோம் நாம் இவ்வாறு பயணித்தால் கடலில் மூழ்கிவிடுவோம் என்று அதனை கேட்காத தலைமை இன்று அதனை அனுபவிக்கின்றது.
கொழும்பில் வாழும் மக்களின் தேவைகள் ஏராளம்,கல்வி,சுகாதாரம்,உட்கட்டமைப்பு வசதிகள்,வீடமைப்பு என்பன தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.தலைநகரில் வாழும் எமது மக்களை பாதுகாக்க வேண்டியுள்ளது.அதற்கான சந்தரப்பத்தை எற்படுத்த நாம் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம்.எமது கட்சி கொழும்பில் தனித்து போட்டியிடுவதை தாங்கிக் கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள் எமக்கு எதிராக பிரசாரங்களை செய்கின்றன.இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதை கூறி பதவி விலகி தேர்தலில் போட்டியிடுமாறு கூக்குரலிடுகின்றனர்.இவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.இந்த தேர்தலின் மூலம் இந்த நாட்டின் ஜனாதிபதியினையோ,அரசாங்கத்தினையோ மாற்றிவிட முடியாது.ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் என்று ஜக்கிய தேசிய கட்சி கூறிவருகின்றது.ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஒரு புறம்,சஜித் பிரேமதாஸ ஒருபுறம்,எனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறு ஒரு புறத்தில் நிற்கின்றார்கள்.இவர்களை நம்பி மக்கள் வாக்களித்தால் இம்மக்கள் என்ன நன்மையினை பெறப் போகின்றார்கள் என கேட்க விரும்புகின்றேன்.
இந்த தேர்தல் நல்லதொரு சந்தரப்பம்.வடக்கிலும் ,கிழக்கிலும் நாங்கள் எமது கட்சியை பலப்படுத்தியுள்ளோம்.எமது அணியில் சகல சமூகத்தவர்களும் இருக்கின்றார்.இது ஒரு ஜனநாயக கட்சி,இந்த கட்சியினை வெற்றி பெறச் செய்வதன் மூலம்,வடக்கில் ,கிழக்கில் எவ்வாறு அபிவிருத்திகள் மக்களைச் சென்றடைகின்றதோ,அதே போன்று கொழும்பிலும் இடம் பெறும்.நாங்கள சமூகத்தின் உணர்வகளை மதிப்பவர்கள்.எங்களிடம் பொய்யான அரசியல் வாக்குறுதிகள் கிடையாது.அரசியல் என்பது புனிதமானது அதனை சமூகத்திற்காக பயன்படுத்துகின்ற போது மன நிறைவு இருக்கின்றது.குறிப்பாக எமது கட்சியினை பொருத்த வரையில் இந்த நாட்டில் எங்கு சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றதோ,அந்த அநீதிக்கு எதிராக நியாயத்தின் பால் துணிந்து பேசி நியாயத்தை பெற்றுக் கொடுக்க பாடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றேன்.
அரசாங்கத்தின் அமைச்சர் பதவி என்பது சமூத்திற்காக பேசும் ஒரு முக்கிய பதவியாகும்.அதனை சமூகத்தின் விமோசனத்திற்காக பயன்படுத்த தவறுவோமெனில் இவ்வுலகில் தப்பித்துக் கொண்டாலும்,மறுமையில் அதற்காக பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும். எமது அணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் நம்பிக்கையினை பெற்றவர்கள்.அவர்கள் வெற்றி பெறுவதானது மக்களாகிய நீங்கள் பெற்றதற்கு ஒப்பானது.இதன் மூலம் நாழ இழந்த எத்தனையோ வற்றினை இந்த மாகாண சபை மூலம் பெற்றுக் கொள்ளமுடியும் என்றும் தலைவர் றிசாத் பதியுதீன் கூறினார்.
Post a Comment