முஸ்லிம் காங்கிரஸுக்கு மீண்டும் வந்தார் நிஜாமுதீன் (படங்கள் இணைப்பு)
முன்னாள் பிரதியமைச்சர் எஸ். நிஜாமுதீன் செவ்வாய்க்கிழமை (4) காலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் அவரது இல்லத்தில் வைத்து அக் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டார்.
சாய்ந்தமருது மக்களை கண்ணியப்படுத்துவதற்காக இவருக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசியப் பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தை வழங்கியிருந்தது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் பின்னர் இணைந்திருந்த நிஜாமுதீன், அதன் தலைமைத்துவத்திலும், அக் கட்சியின் நடவடிக்கைகளிலும் முற்றாக நம்பிக்கை இழந்து, தமது தாய்க் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸையும், அதன் தலைமைத்துவத்தையும் மேலும் பலப்படுத்தும் நோக்கத்துடன் எந்தவிதமான நிபந்தனைகளோ, வேண்டுகோள்களோ இன்றி தாம் கட்சியில் மீண்டும் இணைந்துகொள்ள தீர்மானித்ததாகக் கூறினார்.
கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் காலத்திலிருந்தே தாம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் அதிக ஈடுபாடு காட்டி வந்ததாகவும் அவர் சொன்னார்.
எஸ். நிஜாமுதீன், அமைச்சர் ஹக்கீமை சந்தித்த சந்தர்ப்பத்தில்இ அங்கு திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், மேல் மாகாண சபை தேர்தலில் களுத்துறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் நிசார் ஹாஜியார், சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபி கல்லூரி விரிவுரையாளர் மௌலவி எம்.எம். அசனார், மாணவர் காங்கிரஸ் அமைப்பாளர் ஆஷிக் பதுர்தீன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
Post a Comment