Header Ads



குதிரை மீது ஏறித்தான் நான் உயிர் தப்பிக்க வேண்டியதாயிற்று - சிராஸ் மீராசாஹிப்

(எம்.ஏ.றமீஸ்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மூலம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயராகச் செயற்பட்ட  கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களும் சாய்ந்தமருது பிரதேசமக்களும் தேசியகாங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு இன்று(24) இரவு சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இங்கு மக்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிர் குறிப்பிடுகையில், எமது மக்களின் முப்பத்தைந்து வருடக் கனவை நனவாக்கித் தருவதோடு, எமது பரம்பரை நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் எம்மை நாமே ஆளுகின்ற உள்ளுராட்சி மன்றமொன்றை உருவாக்கித் தாருங்கள். காலம் உள்ளவரை நீங்கள் செய்து தரும் இவ்வரலாற்றுப் பணிக்காக நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்போம்.

எமது மக்களுக்காக எனது பதவி பட்டம் அந்தஸ்த்து அனைத்தையும் உதறித்தள்ளி விட்டு உங்களோடு கைகோர்த்து இணைந்து கொள்கின்றேன். எமது மக்களின் நலனுக்காக எமக்கான பிரதேச சபையொன்றை உருவாக்கித்தாருங்கள் அந்த நன்றிக்கடனுக்காக இம்மக்கள் எப்போதும் உங்களுடனேயே இருப்பார்கள்.

எமது பிரதேசத்திற்கென தனியான ஒரு பிரதேச சபை உருவாகுவதை தடுக்கும் இப்பிராந்தியத்தில் உள்ள ஒரு சில அரசியல் வாதிகளுக்கு நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன். இந்த மக்களுக்கு தனியான பிரதேச சபை தேவை இல்லை என்று நீங்கள் எந்தக் காரணத்தை வைத்துக் கொண்டு சொல்கிறீர்கள் என்று. இந்த எதிர்ப்பு அரசியல்வாதிகள் எந்தத் தடையை ஏற்படுத்தினாலும் எனது இறுதி மூச்சு உள்ள வரை எமது மக்களுக்காக செயற்பட்டு நாங்கள் எண்ணியதை இறைவன் அருளாள் சாதிப்பேன்.

எனது மேயர் பதவியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைமை இராஜினாமாச் செய்ய வேண்டியபோது நான் பதவி ஆசை பிடித்து பதவி துறக்க முடியாதென அடம்பிடிக்கவில்லை. சற்று அவகாசம் கேட்டோம். நாங்கள் ஆரம்பித்த எத்தனையோ வேலைகள் இடை நடுவில் இருக்கின்றன. அதனை நிறைவு செய்ய சிறிது அவகாசம் தாருங்கள் என்று கேட்டேன் அதற்கு அத்தலைமை செவி சாய்க்கவில்லை. பீச் பாக் வேலை ஒரு கோடி 65 இலட்சம் ரூபா பெறுமதியில் மேற்கொண்டு வரும் வேளை இவ்வேலைத்திட்டம் எனது கனவு அதனை நிறைவேற்ற சற்று அவகாசம் தாருங்கள் நான் கேட்டது மட்டுமல்ல. பள்ளிவாசல் நிருவாகத்தினர் சமூக மட்டப் பெரியார்கள் புத்தி ஜீவிகள் என எத்தனை தரப்பினர் சற்று அவகாசம் கேட்டும் சற்றேனும் செவி சாய்க்காமல் பதவியினை துறக்க வேண்டும் என்று ஒரு பிடியாய் நின்றது அந்த கட்சித் தலைமை. இறுதியில் பதவி துறப்பதற்காக வசியக்காரர்களையும் என்மீது சாட்டி அந்தத் தலைமை என் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. ஈற்றில் பதவியைத் துச்சமென நினைத்து இராஜினாமாச் செய்து விட்டு வந்தேன்.

கண்களைக் கட்டி பாலைவனமொன்றில் வீசி எறியப்பட்ட நான் விழித்துப் பார்த்த போது அந்த வழியாக வந்த குதிரை மீது ஏறித்தான் நான் உயிர் தப்பிக்க வேண்டியதாயிற்று. அந்த வழியாக குதிரை வராமல் விட்டிருந்தால் இன்று உங்கள் முன்னால் என்னால் பேச முடியாமல் போயிருக்கும். எனது தாகத்திற்கு தண்ணீர் புகட்ட வந்தவர்தான் அமைச்சர் அதாஉல்லா. அவர் சொல்வதைத்தான் செய்பவர் அவர் பக்கம் இணைவதால் எமது மக்கள் நிச்சயம் நன்மை பெறுவார்கள் பாரிய அபிவிருத்திகளை அடைந்து கொள்வார்கள் என்றாரர்.

இதன்போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவிற்கு தனியான ஒரு உள்ளுராட்சி மன்றத்திற்கான கோரிக்கைகள் அடங்கியமகஜர் அமைச்சர் அதாஉல்லாவிடம் வழங்கிவைக்கப்பட்டது.

இம் மகஜரில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,  

ஓன்பது சதுர கிலோமீற்றர் நிரப்பரப்பை 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளாக வகுத்து தனியான ஒருபிரதேச செயலகம் நிருவகித்து வரும் புவியியல் கட்டமைப்பைக் கொண்டது சாய்ந்தமருது. கல்முனை மாநகரசபைக்குட்பட்ட எந்தவொரு ஊரும் கொண்டிராத, 30 ஆயிரம் குடிமக்களையும், 18 ஆயிரம் தகுதி பெற்ற வாக்காளர்களையும் 06 வட்டாரங்களையும் தன்னகத்தே கொண்ட தனிப்பெரும் நிருவாக அலகாக இவ்வூர் இருந்துவருகின்றது.

1935இல் தனியான ஒருகிராமோதயச் சபையாக இருந்து வந்தசாய்ந்தமருது 1994 இல் அன்றைய கல்முனைப் பிரதேசசபைக்குட்பட்ட ஒரு ஊராக இணைக்கப்பட்டு இன்றைய கல்முனை மாநகரசபையால் ஆட்சி செய்யப்பட்டுவருகின்றது. சாய்ந்தமருதின் பொருளாதாரவலையமைப்பில், வர்த்தகம், மீன்பிடி, வேளான்மை, விவசாயம் என்பன மிகப் பெரும் பிரதான தொழிற்றுறையாகச் சுழன்று வருவதால் ஆண்டொன்றுக்கு வரியாகமாத்திரம் சுமார் இரண்டு கோடி ரூபாவை கல்முனை மாநகரசபைக்கு இவ்வூர் வரியாகச் செலுத்தி வருகின்றது.

எமது சாய்தமருதின் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பிற்குள் அமையப் பெற்ற அடர்த்தியான சனத்தொகையும் அவற்றின் பரம்பல் மற்றும் தொழிற்பாடுகளுக்கு ஏற்ப அரச வரிகளை முறையாகச் சேகரிக்கவும், உட்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகளை சீராக வழங்கவும், சட்ட- ஒழுங்குகளை நடைமுறைப்படுத்தவும், கண்காணிக்கவும், பிரத்தியேமான ஒரு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்கான தேவை இவ்வூருக்கு எழுந்துள்ளது.

அதன் அடிப்படையில் அவ்வாறான வரவு-செலவுத்திட்டத்தை திட்டமிட்டு முன்மொழிந்து  அதற்கான அங்கீகாரத்தினையும் பெற இப்பிரதேசத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட தனியான ஒரு ஆட்சி அதிகாரமே வழிவகுக்கும் என்று உறுதியாக நம்புகின்றோம்.

ஒருபிரதேசம்; அல்லது ஊர் தனியான ஓர் உள்ளுராட்சி மன்றத்தை நிறுவிக்கொள்ள மிக அவசியம் எனக்கருதப்படும் நோக்கங்களும், ஏனைய தராதரங்களும் மிகையாகப் பெற்றிருந்தும் அவ்வாறான ஒன்று இதுவரை நிறுவப் படாமை எமக்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவு என்றே கருதுகின்றோம். எங்கள் ஊரின் மூத்த பிரஜைகள் காலத்திற்குக் காலம் இதற்கான வேண்டுகோளையும் அக்காலத்தில் சம்பந்தப்பட்ட அரசியல் அதிகாரம் கொண்டவர்களிடம் முன்வைத்த வரலாறுகள் ஏராளமாக உள்ளன.
இருப்பினும் அண்மையில் முற்றுப் பெற்றதும் 3 தசாப்தங்களாக எமது நாட்டை பல நெருக்கடிகளுக்குள்ளாக்கியதுமான உள்நாட்டு யுத்தம் மற்றும் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரங்கள் இனச் சுத்திகரிப்புகள் எமது இந்த வேண்டுகோளையும் சற்றுப் பிற்படுத்தியதே என்றே கூற வேண்டும்.

அதற்கான காரணம் அக்காலகட்டத்தில் ஒரே இனத்திற்கிடையில் ஒற்றுமையும் புரிந்துணர்வும்,குறித்த இனத்தின் பாதுகாப்பை  இருப்பைநிலை நாட்டும் பிரதான காரணியாகளாய் இருந்ததேதவிர வேறில்லை.

சாய்ந்தமருது பிரஜைகளாகிய எங்களுக்கும் தனியான ஓர் உள்ளுராட்சி அதிகாரம் தேவையென்பது வெறுமனே எங்கள் ஆசை என்பதிலும் பார்க்க அதுவேஎ ங்களின் இன்றைய அரசியல் அபிலாஷைகளாகவும் மாறியுள்ளது.

நீங்கள் நன்குஅறிந்தபடி இறுதியாக நடைபெற்ற கல்முனை மாநகர சபைக்கான உள்ளுராட்சித் தேர்தலில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளை அபிமானத்திற்குரிய எங்கள் ஊரைச் சேர்ந்த ஆற்றலுள்ள ஒருவருக்கு அளித்தன் பலனாக வரலாற்றில் எக்காலும் இல்லாது அச்சபைக்கான முதல்வர் பதவியை பல போராட்டங்களுக்கு மத்தியிலேயே பெற்றெடுத்தோம்.துரதிஸ்டம் என்பதிலும் பார்க்க துர்பாக்கியமான முறையில் அப்பதவி எங்களிடமிருந்து இடைநடுவில் தட்டிபறிக்கப்பட்டது. இந்நிகழ்வால் சமூகங்களுக்கு அரசியல் அநீதியும்,புறக்கனிப்பும் ஏற்படுத்தும் அதிகாரம ;பெற்ற ஒரு பிரிவினர்  இன்னமும் எமது நாட்டில்  இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதைத் தவிர வேறு எந்த தீர்மானத்திற்க்கும்  முடிவிற்க்கும் எங்களால் வரமுடியவில்லை. இவ்வாறான சந்நதர்பங்கள் வரும் போது தகுதியும் ஆற்றலும் கொண்டஎங்கள் பிரதேசத்திற்க்கும் பொருத்தமான ஒர் அரசியல் அந்தஸ்தும் விலாசமும் இல்லாமலே இதுகாலும் வாழ்ந்து வருகின்றோமா? என்கின்ற ஆழ்ந்த கவலையும் எங்கள் நெஞ்சைவிட்டும் அகலாமல் உள்ளத்தடன் அதற்காக எங்களது ஊரின் மூத்த பிரஜைகள் கடந்த பாதையில் தொடர்ந்தும் பயனிக்க உறுதிபூண்டுள்ளோம்.

இது மட்டுமன்றி எங்கள் சாய்ந்தமருதில் இடம்பெற்றுவரும் வர்த்தகச் செயற்பாடுகள் மற்றும் அனைத்து வகையான பொருளாதார புறள்வுகளாலும் ஆண்டொன்றிற்கு சுமார் 02 கோடி (20 மில்லியன்) ருபா வரியாக அறவிடப்படுகிறது. இத்தெகையானது ஆண்டு ஒன்றிற்கு 04 பாராளுமன்ற உறுப்பினர்கள் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுதிட்டத்தின் கீழ் முன்மொழியும் அபிவிருத்தி வேலைகளுக்கான ஒதுகீட்டிற்க்குசமம் என்பதை தாங்கள் நன்குஅறிவீர்கள்.

இவ்வாறு பெறப்படுகின்ற வருமானங்களை எங்கள் பிரதேசத்தில் பெருகிவரும் மக்கள்  தொகைக்கேற்ப எங்கள் பிரதேசத்தில் புனரமைப்புச் செய்ய வேண்டியுள்ள வீதி,மின்சாரம்,நீர்,சுகாதாரம் போன்ற உட்கட்டமைப்பு மற்றும் பொதுவசதிகளுக்கு முறையாகவும் சுதந்திரமாகவும் திட்டமிட்டு செலவு செய்ய வேண்டிய தேவைபாட்டிலும் நாம் உள்ளோம்.

எமது பிரதேச செயலாளர் பிரிவு தவிர்ந்த எமது நாட்டின் எந்தவொரு பிரசே செயலாளர் பிரிவும் ஆகக் குறைந்தது ஒரு உள்ளுராட்சி மன்றத்தையேனும் கொண்டிராமலில்லை. இதனடிப்படையில் கூட நாங்கள் எங்களின் அரசியல் அந்தஸ்த்தையும், விலாசத்தையும் தொலைத்து நிற்பது போன்று உணர்கின்றோம்.

மேலே விபரிக்கப்பட்டுள்ள காரணங்களின் நிமித்தம் சாய்ந்தமருதுக்கு தனியான ஒரு உள்ளுராட்சி மன்றத்தை நிறுவி எமது பிரதேச மக்களின் கடந்த 35 ஆண்டுகால அடிப்படை அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றித்தர ஆவண செய்யுமாறு கௌரவ அமைச்சரை வேண்டுகின்றோம்.

No comments

Powered by Blogger.