புற்று நோயால் இறந்த கணவனின் உயிரணுவை பாதுகாக்க கோரிய மனைவி கோரிக்கை
இங்கிலாந்தில் இறந்து போன கணவனின் உயிரணுவை பாதுகாக்க கோரிய மனைவியின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அவரது கோரிக்கையை நிறைவேற்றும்படி உத்தரவிட்டுள்ளது.இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரை சேர்ந்தவர் வாரன் பிரீவர் (32). இவரது மனைவி பெத் வாரன் (28). பிசியோதெரபிஸ்டாக பணியாற்றுகிறார். வாரன் பிரீவர் ஸ்கை டைவர் பயிற்சியாளராக பணிபுரிந்தார். இந்நிலையில் அவருக்கு மூளையில் புற்று நோய் ஏற்பட்டது. அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக அவரது உயிரணுவை பாதுகாத்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தான் இறந்து விட்டால் எனது மனைவி பெத் வாரன் குழந்தைகளை பெற்றுக் கொள்ள அவற்றை வழங்கலாம் என்று எழுத்துப்பூர்வமாக வாரன் பிரீவர் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்தில் யாரேனும் உயிரணு அல்லது கருமுட்டைகளை பாதுகாத்து வைக்க விரும்பினால் 55 ஆண்டுகளுக்கு வைத்து கொள்ளலாம் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், கடந்த 2012ம் ஆண்டு மூளை புற்றுநோயால் வாரன் இறந்துவிட்டார்.
அவரது உயிரணுவை 3 ஆண்டுகளுக்கு மேல் பாதுகாக்க முடியாது. மருத்துவ நடைமுறையில் 3 ஆண்டுகள் கழித்து 2015ல் அழித்து விடுவோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே கால கெடு முடிவதற்குள் உயிரணுவை பயன்படுத்தி பெத் வாரன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.இதை எதிர்த்து பெத் வாரன் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில் பெத் வாரன் கூறுகையில், ‘என கணவர் இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு கார் விபத்தில் எனது சகோதரர் இறந்து விட்டார். இருவரையும் இழந்து பெரும் சோகத்தில் இருக்கிறேன். அதில் இருந்து மீண்டு வர எனக்கு கால அவகாசம் வேண்டும். தற்போதுள்ள நிலையில், எனது கணவரின் உயிரணு மூலம் குழந்தை பெற்று கொள்ள இயலாது. எனவே, 2015ம் ஆண்டுக்கு பிறகும் அவரது உயிரணுவை பாதுகாத்து வைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.மனுவை விசாரித்த நீதிமன்றம், பெத் வாரனின் கோரிக்கையை ஏற்று அவரது கணவனின் உயிரணுவை 2015க்கு பிறகும் பாதுகாத்து வைக்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.9 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கணவர் இறப்பதற்கு 6 வாரத்திற்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment