Header Ads



அம்பாந்தோட்டையில் ஆளும் கட்சிக்கு, ஆதரவு குறைகிறது

தென்மாகாணசபைக்கு நேற்று நடந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின்  சொந்த மாவட்டமான, அம்பாந்தோட்டையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ள போதிலும், அதன் வாக்கு வங்கி கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

2009ம் ஆண்டு நடத்தப்பட்ட மாகாணசபைத் தேர்தலில், அம்பாந்தாட்டை மாவட்டத்தில் இருந்து 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இம்முறை 14 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த தேர்தலில் 192,961 (66.95%) வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு, இந்த முறையும் 8 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

ஆனால், 174,687 (57.42%) வாக்குகளையே ஆளும்கட்சியால் இம்முறை பெற முடிந்துள்ளது.

இதன்படி, சுமார் 18 ஆயிரம் வாக்குகளை ஆளும்கட்சி இம்முறை இழந்துள்ளது.

அதேவேளை, ஐதேக, ஜேவிபி, ஆகிய கட்சிகளுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.

கடந்த தேர்தலில், 62,391 (21.65%) வாக்குகளுடன் 3 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐதேகவுக்கு, இம்முறை, 4 ஆசனங்கள் கிடைத்துள்ளதுடன், 79,829 (26.24%) வாக்குகைளையும் அந்தக் கட்சி பெற்றுள்ளது.

இதன்படி, ஐதேகவுக்கு சுமார் 17,500 வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் 31,734 (11.01%) வாக்குகளுடன் 1 ஆசனத்தைப் பெற்ற ஜேவிபிக்கு இம்முறை 2 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

அத்துடன், ஜேவிபிக்கு கிடைத்த வாக்குகளும் 39,345 (12.93%) ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ஸவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில், சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சியால் பிரகாசிக்க முடியவில்லை.

முதல்முறையாக தென்மாகாணசபைத் தேர்தலைச் சந்தித்த அவரது கட்சிக்கு 9,547 (3.14%) வாக்குகள் தான் கிடைத்துள்ளன, எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.