Header Ads



கூடுவிட்டுப் பாயும் கூத்து..!

(ஏ.எல்.நிப்றாஸ்)

மரம் இனிமேல் கனி தராது அல்லது 'சீச்சி... இந்தப் பழம் புளிக்கும்' என்று என்று உணரத் தலைப்பட்ட பொழுதொன்றில், ரசம் சொட்டும் பழங்களை சுமந்துவந்த குதிரையின் முதுகில் தொற்றிக் கொண்டுள்ளார் கல்முனையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாகிப். 

முஸ்லிம் காங்கிரஸிற்கும் தேசிய காங்கிரஸிற்கும் இடையிலான அரசியல் சமன்பாட்டில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பக்கம் ஒன்று குறைந்துள்ளது, அமைச்சர் அதாவுல்லாவின் கணக்கில் ஒன்று கூடியுள்ளது. விளைவு – முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையில் தேசிய காங்கிரஸ் கொடியேற்றிக் கொண்டிருக்கின்றது. 

முஸ்லிம்களின் அரசியல் நெடும் பயணத்தில் தலைவர் அஷ்ரஃபின் மரணத்திற்கு பின்னரும் சாய்ந்தமருது முக்கியத்துவம் பெறுகின்றது. தலைவரின் மரணத்தை தொடர்ந்து வெற்றிடமான முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவ பதவிக்கு றவூப் ஹக்கீமும் பேரியல் அஷ்ரஃபும் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்த சமயம் அது. அவ்வேளையில், சாய்ந்தமருதில் நடைபெற்ற கூட்டமொன்றில் அதாவுல்லா போன்றோர் முன்னின்று மக்கள் முன்னிலையில் மு.கா.வின் தனித் தலைவராக ஹக்கீமை அறிவித்து, மேடையில் இருந்து இறக்கி ஊர்வலமாக அழைத்து வந்தனர். இணைத் தலைவராக இருந்த ரவூப் ஹக்கீம் இங்கு வைத்தே பகிரங்கமாக தனித் தலைவராக பிரகடனப்படுத்தப்பட்டார். 

அதன் பின்னர் மு.கா.வின் கோட்டையாக சாய்ந்தமருது மாறிற்று. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தேர்தலொன்றின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக அக்கரைப்பற்றிலிருந்து மருதமுனை வரைக்கும் வாகனத் தொடரணியாகச் சென்ற அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான கட்சிக்காரர்கள் அக்கரைப்பற்று நோக்கி திரும்பிக் கொண்டிருக்கையில் கல்முனை பிரதேசத்தில் வைத்து கடுமையான கல்வீச்சுக்கு உள்ளாகினர். இதனால் சாய்ந்தமருது வழியாக திரும்பிச் செல்ல முடியாமல் போனது. 

இப்பேர்ப்பட்ட ஒரு பிரதேசம் - மு.கா.வின் அசைக்கவியலாத கோட்டையாகவும் தேசிய காங்கிரஸின் சிம்ம சொப்பனமாகவும் இருந்த சாய்ந்தமருது இன்று அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸினால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹக்கீமை தலைவராக பிரகடனம் செய்த பெருமைக்குரிய ஊர், இன்று தேசிய காங்கிரஸ் தலைவருக்கு விழா எடுக்குமளவுக்கு நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டன. 

தனி ஆளுகைக்கான தாகம்

முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழுள்ள தீகவாபி பிரதேச சிங்கள மக்கள் தனியொரு உள்ள10ராட்சி அலகு கேட்டதை விடவும், கல்முனை மாநகர சபைக்குள் உள்ளடங்கும் சாய்ந்தமருது மக்கள் தனியான பிரதேச சபை ஒன்றுக்காக குரல்கொடுத்தது மிக அதிகம். கல்முனை உள்ள10ராட்சி மன்றத்தினாலும் அரசியல்வாதிகள் மற்றும் மக்களாலும் தாம் புறக்கணிக்கப்படுவதாக எப்போது சாய்ந்தமருது மக்கள் உணரத் தொடங்கினார்களோ அப்போதிலிருந்தே தனிப் பிரதேச சபைக் கோரிக்கை வலுப்பெறத் தொடங்கி விட்டது. அப்படிப் பார்த்தால் இந்தக் கோரிக்கை கிட்டத்தட்ட 20 - 30 வருடங்கள் பழமையானது. 

1935ஆம் ஆண்டிலிருந்து தனியான கிராமோதய சபையாக இயங்கிவந்த சாய்ந்தமருது 1994 இல் கல்முனை பிரதேச சபையுடன் ஒன்றிணைக்கப்பட்டது. தற்போது 6 வட்டாரப் பிரிவுகளையும் 17 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியிருக்கும் இப்பிரதேசத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களும் அதில் 18ஆயிரம் வாக்காளர்களும் உள்ளனர். பிரத்தியேக பிரதேச செயலக நிர்வாகத்திற்குட்பட்டது. 

ஆக, தனியொரு உள்ள10ராட்சி அலகுக்கான அடிப்படைத் தகுதியை இப் பிரதேசம் கொண்டிருப்பதாகவே மதிப்பிட முடிகின்றது. ஆனாலும், அரசியல் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான மிகச் சிறிய கூறான ஒரு பிரதேச சபை அவ்வூருக்கு இது காலவரைக்கும் கிடைக்கவில்லை. இப்பிரதேசத்தில் இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர்கள் தனிப் பிரதேச சபை குறித்த அழுத்தத்தை பிரயோகிப்பதை காட்டிலும் ஏதாவது ஒரு கட்சியில் ஒட்டிக்கொண்டு தமது பிழைப்பு ஓடினால் போதுமென்ற நிலைப்பாட்டிலேயே இருந்தனர். சிராஸ் மீராசாகிபும் ஆரம்பத்தில் இதற்கு விதிவிலக்கானவராக தெரியவில்லை.

கடந்த முறை நடைபெற்ற உள்ள10ராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களித்து தன்னை மேயராக்குமாறு சிராஸ் கோரி நின்றார். அப்போது தனிப் பிரதேச சபை ஒன்றை ஸ்தாபிப்பதே தமது நோக்கம் என்று அவர் பிரச்சாரம் செய்ததாக ஞாபமில்லை. அப்படி கூறியிருந்தால் அவருக்கு வாக்களித்தவர்களுள் கல்முனை, மருதமுனை போன்ற பிரதேச மக்கள் தமது முடிவுகளை மாற்றியிருக்கக் கூடும். முஸ்லிம் காங்கிரஸ் தந்திரமாக வாக்குகளை பெற்றுவிட்டு ஏமாற்றுவதாக கற்;பிதம் சொல்கின்ற கலாநிதி சிராஸ்,அதற்கான முகவராக தானே இருந்தார் என்பதை வசதியாக மறந்து விட்டிருக்கின்றார். 

அரசியல் குறித்த முன்னனுபவம் கொஞ்சமும் இல்லாத சிராஸ் கல்முனை மேயரானது அசாதாரணமானது. கலாநிதி பட்டத்தாலும் பணத்தாலும் கிடைத்த சமூக அந்தஸ்தை வைத்துக் கொண்டு மட்டும் அவர் அதிக விருப்பு வாக்குகளைப் பெறவில்லை என்பது இங்கு கவனிப்பிற்குரியது. ஏனென்றால் சாய்ந்தமருது என்பது கடந்த வாரம் வரைக்கும் மு.கா.வின் வாக்கு வங்கி. வேறெந்த கட்சியில் சேர்ந்து எவ்வளவு பணத்தை வாரி இறைத்திருந்தாலும் 45 நாட்களுக்குள் மேயராக ஆகியிருக்க முடியாது என்பதை மறந்துவிடக் கூடாது. 

ஆனால், மேயராக பதவி வகித்த இரண்டு வருட காலத்திலும் தனிப் பிரதேச சபை கோரிக்கையை அவர் பொது இடத்தில் எங்கேனும் முன்வைக்கவில்லை. கல்முனை மாநகர மேயராக இருந்து கொண்டு சாய்ந்தமருதுக்கு தனிப் பிரதேச சபை வேண்டுமென்று அவர் கேட்டால்.... கல்முனை மக்கள் சண்டைக்கு வருவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். ஒருவேளை அவர் அப்படி தனியொரு பிரதேச சபையை தனது முயற்சியால் உருவாக்கி இருந்தாலும் அவரது சொந்த ஊரில் தவிசாளராக ஆவதற்காக மேயர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய இக்கட்டுக்குள் தள்ளப்பட்டிருப்பார். இந்தப் பின்னணில் நிசாம் காரியப்பர் மேயராகும் வரைக்கும் தனிப் பிரதேச சபை குறித்த கோரிக்கையை சிராஸ் அடக்கி வாசித்தார் என்றே சொல்ல வேண்டும். 

மேயர் பதவியை ராஜினாமாச் செய்ய முடியாது என்று சிராஸ் மீராசாகிப் அடம்பிடித்ததும் ஏதோவொரு முட்டாசைக் கொடுத்து அவரை தலைவர் ஹக்கீம் சம்மதிக்கச் செய்ததும் நமக்கு தெரிந்;த சங்கதிதான். தனது கனவான் தன்மையைக் காப்பாற்றுவதற்காக முன்னமே சிராஸ் ஒப்புக்கொண்ட திகதியில் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால், கடைசிக் கட்டத்திலேயே அதனை செய்தார். சிராஸ் பதவி விலகி அவ்விடத்தை நிசாமுக்கு வழங்க வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் சிராஸின் அருமை. 

அம்பலத்திற்கு வந்த உறவு

சிராஸ் மேயர் பதவியிலிருந்து விலக மறுத்தபோது அல்லது காலஅவகாசம் கேட்ட போதே தலைவர் ஹக்கீமுக்கும் அவருக்குமிடையிலான லடாய் ஆரம்பித்துவிட்டது என்பதே உண்மை. இந்த சந்தர்ப்பத்தில்தான், அமைச்சர் அதாவுல்லா – சிராஸ் இருவருக்கும் இடையிலான தொடர்புகள் உள்ள10ராட்சி அமைச்சர் - உள்ள10ராட்சி சபை பிரதி மேயர் என்ற எல்லைகளையும் தாண்டி வளர்ச்சியடைந்திருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. அமைச்சர் அதாவுல்லாவிடமிருந்து சிரித்த முகத்துடன் சிராஸ் ஏதோவொன்றை பெற்றுக்கொள்ளும் புகைப்படத்தை பார்த்தபோதே உள்மனதில் ஏதோ ஒரு சந்தேகம் தோன்றிமறைந்தது. அதுவே இன்று நிதர்சனமாகியுள்ளது. 

புதிய மேயராக நிசாம் காரியப்பரை நியமித்ததுடன் தனது வேலை முடிந்து விட்டது அப்பாடா... என்ற நினைப்பில் அமைச்சர் ஹக்கீம், சிராஸின் நகர்வுகளை கவனிக்காமல் இருந்தமை இன்று இங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது. பரஸ்பரம் அரசியல் நலன்களின் அடிப்படையில் திரைமறைவில் வளர்ந்த அதாவுல்லா – சிராஸ் உறவு, மாகாண சபைத் தேர்தலில் ஹக்கீம் லயித்திருந்த சந்தர்ப்பமாய் பார்த்து பறை கொட்டி அறிவிக்கப்பட்டாயிற்று.

கடந்த 24ஆம் திகதி சாய்ந்தமருதில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியில் கலாநிதி சிராஸ் மீராசாகிப் இணைந்து கொண்டார். தமது ஊருக்கு தனியானதொரு உள்ள10ராட்சி மன்றம் ஒன்றைக் கோரிக்கையாக முன்வைத்தே சிராஸ் கட்சி மாறியிருக்கின்றார். இத் தீர்மானத்தை கிட்டத்தட்ட 75வீதமான ஊர்மக்கள் வரவேற்கின்றனர். ஆனால், இந்த கட்சித் தாவல் மற்றும் அதன் தொடராக இடம்பெறப் போகின்ற சம்பவங்கள் எல்லாம் பல்வேறு சாதக பாதகங்களை கொண்டுவரும். குறிப்பாக – முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், சிராஸ் அல்லது சாய்ந்தமருது மக்கள், கல்முனை பிரதேசம் போன்றவற்றில் அடுத்தடுத்து பல அதிர்வுகளை அடுத்தகட்ட நகர்வுகள் உண்டுபண்ணலாம்.

மேயர் என்ற வகையில் செயல் வீரனாக வர்ணிக்கப்பட்ட சிராஸின் சொந்த ஊரிலேயே கடந்த 2 வருடங்களாக மு.கா.வின் மத்திய குழு கூடவில்லை என்பது இப்போது தெரிய வந்திருக்கின்றது. அவ்வூரிலேயே நிலைமை இப்படி இருந்தால் ஏனைய ஊர்களில் நிலைமை எவ்வாறிருக்கும்? முஸ்லிம்களினது தாய்க்கட்சியின் இன்றைய நிலைமை உய்த்தறிந்து கொள்ள இதுவே போதுமானது. 

ஓவ்வொரு ஊரிலும் அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பப்பட்ட கட்சிதான் முஸ்லிம் காங்கிரஸ். ஆனால் இன்று அதனது அடிவேர்களான மத்திய குழுக்கள் தூர்ந்துபோய் கிடக்கின்றன. ஏதோ எம்.ரி. ஹசன் அலி போன்ற ஒருசில கொள்கைப் பிடிப்பாளர்கள் இன்னும் கட்சியில் இருப்பதால் மரம் உயிர்ப்போடு இருக்கின்றது. தேர்தல் வந்துவிட்டால் மட்டும் மத்திய குழு உறுப்பினர்களையும் கட்சிக்காக உழைப்பவர்களையும் தேடிப் பிடித்து அரசியல் செய்துவிட்டு, ஏனைய காலங்களில் அவர்களையும் வாக்களித்த மக்களையும் மறந்து கொழும்பில் முடங்கிக் கொண்டால் இதுதான் நடக்கும். கட்சியினால் ஒன்றரை மாதத்தில் மேயராகி, அதன் வரப்பிரசாதங்களையும் இன்னபிற சௌகரியங்களையும் அனுபவித்த சிராஸ் போன்ற ஒருவரையே கட்சிக்குள் வைத்துக் கொள்ள முடியாவிட்டால்.... கடைநிலை வாக்காளர்களை கட்டுக்குலையாமல் அப்படியே வைத்திருப்பது எங்கனம் சாத்தியம் என்பது பெரிய கேள்வியாக எழுகின்றது.

சிராஸ் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே மு.கா.வின் பாரம்பரிய வாக்காளர்களாக இருந்த ஆயிரக் கணக்கான மக்களின் வாக்குகளை இன்று ஒரு தனிமனிதனின் வெளியேற்றத்தால் மு.கா. இழக்கும் நிலை ஏற்பட்;டுள்ளது. மேல், தென் மாகாணங்களில் இரை தேடிக் கொண்டிருந்த சமயம், தனது சொந்தக் கூட்டில் சேகரித்து வைத்திருந்து இரைகள் பறிபோயிருக்கின்றன. இதனை ஒரு சமிக்கையாக எடுத்து மு.கா. விழித்துக் கொள்ள வேண்டும். அதன் முதற்கட்டமாக மு.கா.வின் பிறந்த இடத்திற்கு 'வாம்மா மின்னலு போல' தலைவர் வந்துவிட்டுப் போவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

வாய்ப்பை பயன்படுத்திய கட்சி

உண்மையில் தேசிய காங்கிரஸ் நல்ல சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தியிருக்கின்றது. தமக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளதாக கருதுகின்ற ஒருவரை அல்லது ஒரு மக்கள் கூட்டத்தை எதிர்ப்பக்கத்திற்கு இழுத்தெடுக்கும் யுக்தியையே அமைச்சர் அதாவுல்லா கையாண்டிருக்கின்றார். சிராஸிற்கு இப்போது மேயர் பதவியில்லை இன்னுமொரு தடைவை மு.கா. தலைமையினால் உயர் பதவியொன்று வழங்கப்படுவதற்கான சந்தர்ப்பத்தையும் கெடுத்துக் கொண்டார். எனவே வேறொரு கட்சியூடாகவே அரசியலில் முன்னேற வேண்டிய நிலையில் சிராஸ் இருந்தார். அதேவேளை, சாய்ந்தமருது மக்கள் தமக்கு தனியான பிரதேச சபை வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தனர். யார் குற்றினாலும் அரிசாக வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கும் வந்திருந்தனர். 

முன்னமே மு.கா.தலைமைத்துவத்துடன் அதிருப்தி அடைந்துள்ள அவ்வூர் மக்களை உள்ள10ராட்சி சபைகள் அமைச்சரான அதாவுல்லாவின் கட்சியை நோக்கி அணிதிரட்டுவது பெரிய காரியமாக இருக்காது என்பதை சிராஸின் கலாநிதி அறிவு சொல்லிக் கொடுத்திருக்கும். 

மறுபுறத்தில், முஸ்லிம் கட்சிகளின் மீது மக்கள் பொதுவாக நம்பிக்கையிழந்து போகின்ற ஒரு சூழலில் தேசிய காங்கிரஸின் போக்குகள் தொடர்பிலும் மக்களிடையே விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால், அமைச்சர் அதாவுல்லாவின் வாக்குவங்கி சற்று பலமானது. ஏனென்றால் அவருக்கு நன்றிக் கடனுக்காக வாக்களிப்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கடமைப்பட்டிருக்கின்றார்கள். அது உண்மைதான், ஆனால் தளம்பல் நிலை வாக்காளர்கள் இதற்கு எப்போதுமே விதிவிலக்கு. அந்த வகையில் தமது கட்சிக்கான தளம்பல் நிலை வாக்காளர்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி அல்லது அவ்வாறான  போலியான தோற்றப்பாடு ஒன்றை சமப்படுத்துவதற்கான களமாக சாய்ந்தமருதை பயன்படுத்த அதாவுல்லா மனக்கணக்கு போட்டிருப்பார். கொத்தாக பல்லாயிரம் வாக்குகள் மேலதிகமாக கிடைத்தால் தே.கா.வின் பயணத்தில் பல திருப்பங்கள் உருவாகும் என்பது அவர் அறியாததுமல்ல. 

மேயரின் கோமாளித்தனம்

சிராஸ் தமது கட்சியில் இணைந்து கொண்ட கூட்டத்தில் அமைச்சர் அதாவுல்லா உரையாற்றுகையில், 'எனது நிலைப்பாடு என்றும் ஒன்றுதான். யாருக்கும் அநீதி, பாதிப்பு ஏற்படாத வகையில் சாய்ந்தமருதுக்கு தனிப் பிரதேச சபை வேண்டும். அதற்கான பணியை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டேன்..' என்று குறிப்பிட்டுள்ளார். தனியான பிரதேச சபை ஒன்றுக்கான அவசியம் குறித்த முழு விபரங்களையும் உள்ளடக்கிய ஊர் மக்களால் அமைச்சருக்கு வழங்கப்பட்ட மகஜருக்கு இது நம்பிக்கை தரும் பதிலாக இருந்தது. 

ஆனால், சிராஸ் மீராசாகிபின் பேச்சோ கோமாளித்தனமாக இருந்ததாக கூட்டத்திற்கு போயிருந்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து நேர்முக வர்ணனை செய்தார். மேயர் பதவியை ராஜினாமாச் செய்ய முடிவு எடுத்தது தொடர்பில் அவர் அங்கு பிரஸ்தாபித்திருக்கின்றார். 'ஒரு மௌலவி என்னிடம் வந்து கையைப் பிடித்து ஏதோ பூசினார் அதற்குப் பின்னர் எனக்கு என்னவானதோ தெரியவில்லை. மு.கா. தலைவரை சந்திக்கச் சென்றேன்.  அவர் கட்டித்தழுவி, இது மானப்பிரச்சினையாகிவிட்டது ராஜினாமா செய்யுங்கள் என்று கூறினார். நானும் அப்படியே செய்துவிட்டேன்' என்று பேசியிருக்கின்றார். இதுபோலவே இன்னும் சில காலத்திற்குப் பிறகு ஒருநாள் அதாவுல்லாவும் எதையோ கொண்டுவந்து பூசினார். நான் கட்சி மாறிவிட்டேன் என்று சொன்னாலும் சொல்வார் இந்த கலாநிதி' என்று சொல்லிச் சிரித்தார் நண்பர். 

இந்த கட்சித் தாவலினால் அமைச்சர் அதாவுல்லாவுக்கு நலன் கிடைக்குமா? சிராஸிற்கு அரசியல் எதிர்காலம் ஒளியமயமாகுமா? என்பதில் சந்தேகங்கள் இருந்தாலும், சாய்ந்தமருது மக்களுக்கு பிரதேச சபை கிடைக்கும். அமைச்சர் அதாவுல்லா அரசியல் காய் நகர்த்தலில் வல்லவர். அபிவிருத்தி அரசியலில் எடுத்த காரியத்தை செய்து முடிப்பார். அதுமட்டுமன்றி, உள்ள10ராட்சி மாகாண சபைகள் அமைச்சும் அவரிடம் இருக்கின்றது. ஆதலால் சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை கொடுக்க வேண்டுமென்று அவர் நினைத்தால் எப்பாடுபட்டாலும் அதனைச் செய்தே தீருவார் என்று கூறலாம். 

ஆனால், மறுபுறத்தில் மு.கா. தலைவர் சிராஸிற்கு பதிலடி கொடுக்க ஒரு திட்டத்தை வகுக்கலாம். அதாவது – கிழக்கு மாகாண சபையில் சுழற்சிக்கால அடிப்படையில் மு.கா.வுக்கு கிடைக்கும் (?) முதலமைச்சர் பதவியை சாய்ந்தருதைச் சேர்ந்த யாருக்கும் வழங்க முற்சிக்கலாம். அப்படிச் செய்தால் கொஞ்சம் வாக்காளர்கள் மீண்டும் மு.கா.வின் பக்கம் சாய்வர். அதுமாத்திரமன்றி, சிராஸிற்கும் உள்ள10ருக்குள் புதிய புதிய நெருக்கடிகள் தோன்றும். அதுவே மு.கா. தலைமையின் எதிர்பார்ப்பாகவும் இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி எம்.எச்.சேகு இஸ்ஸதீனுக்கு தேசியப்பட்டியல் எம்.பி. வழங்கிய போது, அதனை ஈடுகட்டுவதற்கு ஏ.எல்.எம். அதாவுல்லாவுக்கும் எம்.பி. பதவியை மு.கா. பெற்றுக் கொடுத்தது உங்களுக்கு ஞாபகமிருக்கும். 
மறைந்துள்ள அபாயங்கள் 

முஸ்லிம் கட்சிகளிடையே  இந்த கூடுவிட்டு கூடுபாயும் கூத்தும், ஆட்சேர்ப்பும் இடம்பெறுவது வாடிக்கையானதே. ஆண்மைக் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து இரண்டுபேர் போய் தேசிய காங்கிரஸில் சேர, அங்கிருந்து இருவர் மு.கா.வுக்கு தாவியிருக்கின்றனர். முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனின் சிஷ்யனாக இருந்து பின்னர் அமைச்சர் அதாவுல்லாவின் கட்சியில் இணைந்து செயற்பட்ட ஏ.எல். தவம், தேசிய காங்கிரஸ் உறுப்பினர் பாயிஸ் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டனர். அதற்குப் பகரமாக - மு.கா.வின் ஆரம்பகால போராளியாக இருந்து விரக்தியடைந்த யூ.எல். உவைஸ் அதாவுல்லாவுடன் இணைந்து கொண்டார். இப்போது சிராஸ் மீராசாகிபும் வந்திருக்கின்றார். 

ஆனால், ஏனையோரைப் போலல்லாமல் சில ஆயிரக்கணக்கான மக்களின் வாக்குகளோடும் ஒரு ஊரின் ஆதரவோடும் சிராஸ் வந்திருப்பதால் அவர் முக்கியத்துவம் பெறுகின்றார். இந்த இணைவின் பலனாக பிரதேச சபை ஒன்று கிடைக்குமாக இருந்தால் சாய்ந்தமருது மக்களால் சிராஸ் போற்றப்படுவார். அதேபோல் தேசிய காங்கிரஸ் ஊடாக மாகாண அமைச்சர் என்ற எல்லை வரைக்கும்  அரசியலில் முன்னேறுவதற்கான சந்தர்ப்பமும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், இவற்றையெல்லாம் பெற்றுக் கொள்ள சில நடத்தைகளை சிராஸ் பின்பற்ற வேண்டும். அமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுவதைப்போல் செயற்படலாம் என நினைப்பது உசிதமானதல்ல. அமைச்சர் அதாவுல்லாவின் கீழ் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை இரவோடிரவாக 'அனுபவசாலிகளிடம்' சென்று கேட்டறிந்து செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் குதிரை (தே. கா. சின்னம்) இடைநடுவில் கீழே விழுத்திவிடும். 

சாய்ந்தமருதுக்கு தனியொரு பிரதேச சபை தேவை என்பது நியாயமற்றது என்று யாரும் வாதிட முடியாது. ஆனால், அவ்வாறு ஒரு பிரதேச சபை உருவானால்; சில முக்கிய சிக்கல்கள், சவால்களை சந்திக்க நேரிடலாம். 
குறிப்பாக – கல்முனையில் ஏற்கனவே தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே ஆளுகை மற்றும் நிர்வாக ரீதியான எல்லைக்கோடுகளை தீர்மானிப்பதில் கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. இந்நிலையில், கல்முனை மாநகர சபைக்குள் உள்ளடங்கியுள்ள பெரும்பகுதி நிலப்பரப்பும் மக்களும் சாய்ந்தமருது பிரதேச சபைக்குள் கொண்டு வரப்படுமாயின், கல்முனை மாநகராட்சியின் ஆட்சிப் பரப்பும் குறுகுவதுடன் இன விகிதாசாரமும் மாற்றமடையும். கிழக்கின் முகவெற்றிலை மற்றும் கரையோர கச்சேரி கனவுகள் பகுதியளவில் சிதைவடையும்.

அதேபோல், நீண்டகாலமாக தீகவாபி பிரதேச மக்கள் பிரதேச சபை ஒன்றின் அவாவுடன் இருக்கின்றனர். அதனை சாதிப்பதற்கான எல்லா வேலைத்திட்டங்களையும் இனவாதிகள் திரைமறைவில் செய்து கொண்டுமிருக்கின்றனர். தனியொரு பிரதேச சபையாக ஆகுவதற்கான அடிப்படைத் தகுதியை தீகவாபி பிரதேசம் பூர்த்தி செய்யாமல் இருப்பதாலேயே இம்முயற்சி இன்றுவரை கைகூடவில்லை. இப்போது, அமைச்சர் அதாவுல்லா சாய்ந்தமருது பிரதேச சபையை வேண்டிநிற்கின்ற போது அதற்கு கைமாறாக தீகவாபி பிரதேச சபைக்கான ஒப்புதலை வழங்குமாறு சிங்கள ஆட்சியாளர்கள் கோரினால் நிலைமை மேலும் சிக்கலடையும். 

ஏனெனில், தீகவாபிக்கு தனிப்பிரதேச சபை கொடுப்பதில் பிரச்சினையில்லை. ஆயினும் அதற்காக அதன்பொருட்டு தமிழ், முஸ்லிம் பிரதேசங்களும் அதன் கீழ் கொண்டு வரப்பட்டால்தான் தலையிடி. எனவே இவ்வாறான விடயங்களில் அமைச்சரும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். 

என்னசெய்வது 'கூத்து' சிறப்பாக இருக்க வேண்டுமென்றாலும், அதனை கண்டுகளிக்க வேண்டுமென்றாலும்... ஆடுபவர்களும் பார்ப்பவர்களும் கால்களில் வலியை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது. 

No comments

Powered by Blogger.