கிழக்கு மாகாண ஆசிரியர்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் - ஜோஸப் ஸ்டாலின்
(எம்.எம்.ஏ.ஸமட்)
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் பணிபுரியும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ள விபரத் திரட்டு நடவடிக்கையினை உடன் நிறுத்துமாறு கோரி அவரசக் கடிதமொன்றினை மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாள் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விபரத் திரட்டுப் படிவம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆசிரியர் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது.
வருடந்தோரும் கல்வி அமைச்சினால் பாடசாலைகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் புள்ளி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அது தவிர, தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தினாலும் புள்ளி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
கிழக்கு மாகாண திணைக்களத்தினாலும் பல தடவைகள் புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் புள்ளி விபரங்கள் மாகாணத் திணைக்களத்தினால் தற்போது கோரப்பட்டிருப்பது ஒரு கேலிக் கூத்தான நடவடிக்கை மாத்திரமின்றி ஆசிரியர் சமூகத்தைத் துன்புறுத்தும் நடவடிக்கையாகும்.
அது தவிர, மூன்று தினங்களுக்குள் தரவுகள் யாவும் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென பணிப்புரை வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவு மிகக் குறைவாகக் காணப்பட்டதாகவும், கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்தாகும் அறியக் கிடைத்துள்ளது.
முதலாம் தவணைப் பரீட்சை இம்மாதம் 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ஆசிரிர்களை இவ்வாறு காலம் குறிப்பிட்டு தகவல் திரட்டுப்படிவம் வழங்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதெனவும் இவற்றை உடன் நிறுத்துமாறு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாள் ஜோஸப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கோரப்பட்டுள்ள இவ்விபரத்திட்டு நடவடிக்கையானது அதிபர்களினதும் ஆசிரியர்களினதும் சரியான தரவுகளைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மைபயக்கத்தக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்ட முயற்சியென கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளார் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment