கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாமின் விளக்கம்..!
(எம்.ஏ.றமீஸ்)
கிழக்கு மாகாணத்திலுள்ள சுமார் இருபத்தோராயிரம் அதிபர் ஆசிரியர்களின் நன்மை கருதி விபரங்களைச் சேகரிக்க முற்பட்டதும் தொடர்லில் ஏற்பட்ட சில புரிந்துணர்வின்மையே சர்ச்சைகள் தோன்றக் காரணம் என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள அதிபர் ஆசிரியர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பொருட்டு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் மூலம் வலயக் கல்வி அலுவலகத்தினூடாக அதிபர் ஆசிரியர்களிடம் கோரப்பட்ட தகவல்கள் அடங்கிய படிவங்களை சில தினங்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என பாடசாலைகளின் அதிபர்கள் கோரியதனையடுத்து எழுந்துள்ள சர்ச்சையின் அடிப்படையில் மாகாணக் கல்விப்பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் பற்றி மேலும் அவர் குறிப்பிடுகையில், எமது கல்வித் திணைக்களத்தின் மூலம் அதிபர் ஆசிரியர்களின் விபரங்களைக் கோரும் வகையில் 47 வினாக்கள் அடங்கிய படிவங்களை பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்தோம். அந்தப் படிவங்கள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட போதிலும் அதற்கான தமிழ் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட பத்திரமும் அப்படிவத்துடன் இணைத்து அனுப்பியுள்ளோம். ஆங்கிலத்தில் விபரங்களைக் கோரய போதிலும் முற்று முழுதாக அனைத்து ஆசிரியர்களும்; விளங்கி விபரங்களை பூரணப்படுத்தும் வகையில் தமிழ் மொழியில் அதற்கான தகவல்களை அச்சிட்டு விநியோகித்திருக்கின்றோம்.
எதிர்வரும் 28ம் திகதி ஆசிரியர்கள் விண்ணப்பங்களை பூரணப்படுத்தி வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தால் போதுமானதே என நாம் அறிவுறுத்தியிருந்தோம். ஆனால் குறிப்பிட்ட ஒரு சில தினங்களுக்குள் விண்ணப்பங்கள் பூரணப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட வேண்டும் என சில அதிபர்கள் கோரியுள்ளதை நாம் அறிகின்றோம். இதுவே சர்ச்சை தோன்ற மூல காரணம்.
கடந்த காலங்களில் நாம் வலயக் கல்வி அலுவலகங்கள் மூலம் பல தகவல்களைக் கோரியிருந்தோம் அவற்றுள் பெரும்பாலானவை முறையானவிதத்தில் அமையாததாலேயே நேரடியாக நாம் ஆசிரியர்களிடம் தகவல்களைக் கோரியிருக்கின்றோம். ஒருவர் பற்றிய முழுத்தகவல்களும் அவரிடம் நிச்சயம் இருக்கும் என்ற வகையில் முழுக்க முழுக்க அதிபர் ஆசிரியர்களின் நன்மையினை மையமாகக் கொண்டே இத்தகவல் கோரப்பட்டுள்ளது. சுயவிபரக் கோவையில் இருந்து இவ்விடயங்கள் அனைத்தையம் எடுக்க விளைந்தால் வீண் கால தாமதம் ஏற்படுவதுடன், அனைத்து ஆவணங்களையும் பெற முடியாதென்பதற்காகவே நாம் நேரடியாக ஆசிரியர்களிடம் இத்தகவல்களைக் கோரியுள்ளோம்.
இது தவிர, வதிவிடத்தை உறுதிப்படுத்திய சான்றிதழ் மற்றும் வாக்காளர் இடாப்பில் பிரித்தெடுக்கப்பட்ட பிரதி என்பனவும் இப்படிவத்தில் கோரப்பட்டுள்ளது. இதனை ஆசிரியர்களும் அதிபர்களும் தாம் வதியும் கிராம சேவை அதிகாரி மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் இதனை உறுதிப்படுத்தினால் போதுமானது. மாறாக மாவட்ட செயலகத்திற்குச் சென்று அதனைக் கட்டாயமாக எடுக்க வேண்டும் என நாம் கண்டிப்பாக கோரவில்லை.
நாம் வதிவிடத்தினை உறுதிப்படுத்த வேண்டும் என கோரியிருப்பதற்கு முக்கிய காரணமிருக்கின்றது. அது யாதெனில், ஆண்டாண்டு காலமாக கல்வித் திணைக்களத்தின் மூலம் கஸ்டப்பிரதேசத்தில் சேவையாற்றி வரும் அதிபர் ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. இக் கொடுப்பனவு வழங்கும் விடயத்தில் முறையான தகவல்கள் இல்லாமையால் பல அதிபர் ஆசிரியர்கள் இக் கொடுப்பனவினைப் பெற முடியாத துரதிஸ்ட நிலையில் உள்ளனர். ஏனெனில் பாடசாலையின் பெயர்ப் பட்டியலை வைத்துத்தான் இதுவரை அக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்தது. பாடசாலையின் அருகில் வசிக்கும் பல ஆசிரியர்கள் இக் கொடுப்பனவினைப் பெற்ற போதிலும் பல நூறு கிலோ மீற்றருக்கப்பால் சென்று சேவையாற்றி வரும் அதிபர் ஆசிரியர்களுக்கு கஸ்டப்பிரதேச பாடசாலை அல்லாத விடத்து இக்கொடுப்பனவினைப் பெற முடியாமல் இருந்தது. ஆனால் நாம் தற்போது வதிவிடத்தினை உறுதிப் படுத்தி கோரியுள்ளதனால் எதிர்காலத்தில் தூர பிரதேசத்திற்குச் சென்று சேவையாற்றுபவர்களும் நன்மை பெறவுள்ளனர்.
மாகாணத்தில் எத்தனை அதிபர்கள் ஆசிரியர்கள் சரியாக இருக்கின்றார்களஎன்ற முற்று முழுதான தகவல் இதுவரை எமது திணைக்களத்தில் இல்லை. நாங்கள் இதுவரைச் சொல்லும் தகவல்கள் அண்ணளவானவையே. அது மட்டுமல்லாமல் ஏனைய மாகாணங்கள் அனைத்திலும் அதிபர் ஆசிரியர்கள் கல்விப் பணியாளர்கள் பற்றிய போதிய தகவல்கள் சேகரிப்பில் உள்ளன. ஆனால் எமது மாகாணத்தில் இதுவரை இல்லாத ஒன்றை உருவாக்கும் முயற்சிக்காக எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இது தவிர எமது கல்வித் திணைக்களத்தின் கீழுள்ள 17 கல்வி வலயங்களை ச்சேர்ந்த 34 கல்விக் கோட்ட அதிபர் ஆசிரியர்களின் தகவல்களுக்கேற்ப அவர்களுக்கு தொழில் சேவை இலக்கமொன்றை வழங்கவுள்ளோம். இனிவரும் காலங்களில் அந்த இலக்கத்தினை அடிப்படையாகக் கொண்டே அவ் உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வுத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் இலக்கத்திற்கேற்ப பதிவேற்றம் செய்ப்படும் தகவல்களைத் தொடர்ந்து எதிர்காலத்தில் சேரும் தகவல்களை இவ் விலக்கக் கோவையில் பதிவேற்றத்திட்டமிட்டுள்ளோம்.
இப்படிவத்தில் பெண்கள் பற்றி கேட்கப்பட்ட கற்பம் தரித்தல், பெற்றோர் பிள்ளைகள் விபரம் போன்றன கேட்கப்பட்டதன் காரணம் யாதெனில் மேற்கூறப்பட்ட விடயங்களை மையமாக வைத்து ஒருவர் இடமாற்றம் கோரி வரும் போது உடனடி நடவடிக்கையினை செய்து கொடுப்பதேயாகும். கற்பம் தரித்தது முதல் ஒருவர் பயணம் செய்ய முடியாதெனக் கோரி இடமாற்றத்திற்கென விண்ணப்பிக்கின்ற பட்சத்தில அவர் முறையான ஆவணங்களைக் கொண்டு வந்து சேர்க்க விளைகின்றபோது சில வேளைகளில் அவருக்கு பிள்ளை பிறந்த வரலாறுகளும் இருக்கின்றன. இப்படியாக வீண் கால தாமதம் இதன் மூலம் இல்லாது செய்யப்படும் என்பதே எமது நோக்கமாகும்.
இவ்வாறு இப்படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவலகளையும் ஆவணங்களின் பிரதிகளும் அனுப்பி வைக்கப்படுகின்றபோது எதிர்காலத்தில் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் மூலம் செய்யப்படுகின்ற பதவியுயர்வு, ஓய்வூதியம் போன்ற விடயங்களுக்காக கேட்கப்படும் மேலதி ஆவணங்கள் எதனையும் கோராது கோவையில் உள்ள தகவல்களை மையப்படுத்தி அவர்களுக்கான நடவடிக்கைகளை நாம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
இவ்விடயம் முற்றுப் பெற்றதும் கிழக்கு மாகாணத்தில் பாடசாலகளது முழு விபரங்களையும் நாம் திரட்ட திட்டமிட்டுள்ளோம். இதன்போது பாடசாலை பற்றிய அனைத்து விடயங்களையும் நாம் பதிவேற்றி எதிர்காலத்தில் பாடசாலைகளதும் பாடசாலை மாணவர்களதும் அதிபர் ஆசிரியர்களதும் நன்மையினை மையமாகக் கொண்டு செயற்படவுள்ளோம.
அதிபர் ஆசிரியர்களின் நன்மை கருதி நான் மேற்கொண்ட இந்நற்பணியினை நாடறியச் செய்தமைக்காக ஊடகங்களுக்கும், தொடர்புடைய தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும் என்றார்.
This is the great work for education sector ,you have done a historical and unforgettable service according Teachers and all of us are in School education field.I pray Allah to grant forward all of your beautiful activities.The teachers will get more benefits in this golden opportunity
ReplyDelete