பங்களாதேஷ் நாட்டினர் உலக சாதனை படைத்தனர்
வங்கதேசத்தின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 2.5 லட்சம் பேர் ஒன்றாக, அந்நாட்டு தேசிய கீதத்தைப் பாடி, புதிய உலக சாதனை படைத்துள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் இருந்து வங்காளத்தைப் பிரிக்க ஆங்கிலேயர்கள் முயன்றனர். இறுதியில், 1947ல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தானுடன், கிழக்கு வங்காளம் இணைந்தது. இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றிய, நோபல் பரிசு பெற்ற இந்திய கவிஞர் ரவிந்திரநாத் தாகூர், வங்கப் பிரிவினையை எதிர்த்து, ""அமார் சோனார் பங்களா, ஆமி தோமாயி பாலாபாஷி'' என்ற பாடலை இயற்றினார். பாகிஸ்தான் அடக்குமுறையை எதிர்த்து, இந்தியாவின் உதவியுடன் போராடி, 1971, மார்ச், 26ம் தேதி வங்கதேசம், தனி நாடாக உருவானது.
தாகூரின் பாடல், வங்கதேச விடுதலைப் போரின் போது, அந்நாட்டு தேசிய கீதமாக, முதல் முறையாக பாடப்பட்டது. தற்போது, அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த, ஷேக் ஹசீனா பிரதமராக இருக்கும் வங்கதேசத்தின், 43வது சுதந்திர தின விழா, சமீபத்தில், கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், 2.5 லட்சம் பேர் பங்கேற்று, தேசிய கீதத்தைப் பாடி, உலக சாதனை படைத்தனர். பிரதமர், ஷேக் ஹசீனாவும் பொதுமக்களுடன் இணைந்து, தேசிய கீதம் பாடினார். இந்த சாதனையை, "கின்னஸ்' உலக சாதனை புத்தக அதிகாரிகள் கண்காணித்தனர்.
நிகழ்ச்சியில், இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 681 பேர் பாடியதாக அறிவிக்கப்பட்டது; ஆனால், பார்வையாளர்களையும் சேர்த்து, மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு, மே 6ம் தேதி, உத்தர பிரதேசத்தின், லக்னோ நகரில், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 653 பேர் ஒருங்கிணைந்து, இந்திய தேசிய கீதத்தை பாடி உலக சாதனை படைத்துள்ளனர்.
Post a Comment