உயரதிகாரிகள் தான் இந்நாட்டிற்கு சாபக் கேடாக மாறியிருக்கிறார்கள் - நகர சபை உறுப்பினர் ஸபீல் நளீமி
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி நகர சபையின் உதவித் தவிசாளரின் அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகததிற்கெதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அரச உயர் அதிகாரிகள்- நகர சபை உறுப்பினர் ஸபீல் நளீமி
கடந்த 2013.09.21ம் திகதி காத்தான்குடி நகர சபையின் நான்கு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஜாமிஉழ்ழாபிரீன் மையவாடிக் காணி சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு சபை அமர்வினை கூட்டுமாறு அக்காலப் பிரிவில் கடமையில் இருந்த பதில் நகர முதல்வரைக் கேட்டிருந்தோம்.
ஆனால், 2013.10.07ம் திகதி வரை எங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை என்பதனால் இவ்விடயம் சம்பந்தமாக உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியிருந்தோம்.
எமது வேண்டுகோள் நியாயம் எனக் கருதிய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் நகர சபையின் பதில் தவிசாளருக்கு உள்ளுராட்சி மன்ற விதிகளை மீறிய விடயத்தினை சுட்டிக் காட்டி உடனடியாக சபையைக் கூட்டுமாறு பனித்திருந்தார்.
அவரது வேண்டுகோளையும் புறந்தள்ளிய பதில் தவிசாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உள்ளுராட்சி ஆணையாளரை வேண்டியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து 2014.01.20ம் திகதி உள்ளுராட்சி ஆணையாளர் மேற்படி விடயத்திற்கான தெளிவுகளை நகர சபை செயலாளரிடம் கோரிய போது அவர் தவறாக பதில் அளித்ததன் காரணமாக மீண்டுமொரு முறை விளக்கம் கோரி அதனது இறுதித் திகதியாக 27.01.2014ம் திகதி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இச்சிறிய விடயத்தினைக் கூட கையாள்வதற்கு சுமார் 5 மாதங்கள் கடந்திருக்கின்றன.
நகர சபைக் கட்டளைச் சட்டத்தின் 25.2 இன் பிரகாரம் 'இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் சபை அமர்வைக் கூட்டுமாறு தவிசாளருக்கு எழுத்து மூலம் கோருமிடத்து சபை அமர்வினை கூட்டவேண்டுமென்று' மிகத் தெளிவாகக் கூறிய போதும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாத இவ்வாறான உயரதிகாரிகள் தான் இந்நாட்டிற்கு சாபக் கேடாக மாறியிருக்கிறார்கள் என்பதைக் சுட்டிகாட்டவேண்டியுள்ளது.
Post a Comment