இன, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகையில் எமக்கு சேறு பூசுகின்றனர் - மஹிந்த ராஜபக்ஷ
தாய்நாட்டை மீண்டும் சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை என்ற செய்தியை எதிர்வரும் 29 ஆம் திகதி உலகுக்கு தெளிவாக வெளிப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
28 ஆம் திகதி ஜெனீவாவில் நாம் தோல்வியுற்றாலும் 29 ஆம் திகதி நாட்டில் வெற்றி பெறுவோம் என தெரிவித்த ஜனாதிபதி, இந்த வெற்றி நாட்டினதும் மக்களதும் வெற்றியாகுமெனவும் தெரிவித்தார்.
மாத்தறை அக்குறஸ்ஸவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.அமைச்சர்கள் சுசில் பிரேம ஜயந்த, நிமல் சிறிபால டி சில்வா, டளஸ் அழகப்பெரும உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி :-
மாத்தறையில் திரண்டிருக்கும் சனத்திரளை நோக்கும் போது மக்கள் கருத்தை எம்மால் சரியாக உணர்ந்துகொள்ள முடிகிறது. நான் இன்று எனது நண்பரான மஹிந்த விஜேசேகரவைப் பார்த்து சுகம் விசாரிக்கச் சென்றேன். அப்போது அக்குறஸ்ஸ குண்டு வெடிப்புச் சம்பவம் எனது நினைவில் மீண்டும் வந்தது. இந்த சம்பவம் இடம்பெற்று ஐந்து வருடங்களும் 15 நாட்களும் நிறைவு பெற்றுள்ளன.
அச்சம்பத்தில் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். அமைச்சர் பெளசி மயிரிழையில் உயிர் தப்பினார் என்பது எமக்குத் தெரிந்ததே. இந்த சம்பவத்துக்குப் பின் மூன்று மாதங்களில் இச்சம்பவத்துக்குக் காரணமான பிரபாகரன் உட்பட பயங்கரவாதத்தை எம்மால் முற்றாக ஒழிக்க முடிந்தது.
நாம் அன்று தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை. இதை அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு எதிராகவோ அல்லது ஏனைய தமிழ் மக்களுக்கு எதிராகவோ யுத்தம் செய்ய வில்லை. நாம் பயங்கரவாதத்துக்கு எதிராகவே யுத்தம் செய்தோம். பயங்கர வாதத்தை அதன் மூலம் முற்றாக ஒழித்தோம். முதலில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு மக்கள் எம்மிடம் பயங்கரவாதத்தை ஒழித்துத் தருமாறு கேட்டனர். மக்களுக்கு அன்று நாம் வழங்கிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம்.
கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த தலைவர்கள் தேர்தலுக்குப் பயந்தவர்கள். தேர்தலை ஒத்திவைப்பர். அல்லது தேர்தலை நடத்தாமல் விடுவர். தேர்தல் என்பதையே மறந்து அதனால் 17 வருடங்கள் நாம் காத்திருக்க நேர்ந்தது. இக்காலங்களில் நாம் பல இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது. நாம் பொறுமையுடன் செயற்பட்டோம். எனினும், 17 வருடங்களின் பின்னர் நாம் பதவியேற்று அன்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி யுள்ளோம். நாம் உரிய காலங்களில் தேர்தலை நடத்தியுள்ளோம். எமக்குத் தேர்தலுக்கு எந்தவித பயமுமில்லை.
நாம் இனியும் தேர்தல்களை பின்தள்ளவோ முன்தள்ளவோ போவ தில்லை. உரிய காலத்தில் தேர்தல்களை நடத்துவோம் இந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் 2016 லேயே நடத்தப்படும். நாம் 2010 ல் தேர்தலின் போது மக்களுக்கு மஹிந்த சிந்தனை கொள்கை மூலம் இந்த நாட்டை முழுமையாக அபிவிருத்தி செய்வதாக மக்களுக்கு வாக்குறுதியளித்தோம். அதனையும் வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் தெரிவித்ததை இப்போது நிறைவேற்றி வருகின்றோம்.
ஜெனீவாவில் 48 வாக்குகளும் எமக்கு எதிராக அளிக்கப்பட்டாலும் நாம் அதனைப் பொருட்படுத்தப் போவதில்லை. இந்த நாட்டைக் காட்டிக் கொடுக்கவோ தாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிபணியச் செய்யவோ நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இதை நாட்டு மக்களுக்கு நான் தெளிவாகக் குறிப்பிட விரும்புகின்றேன். முதல் நாளில் நாம் ஜெனீவாவில் தோல்வியுற்றாலும் மறுநாள் தாய்நாட்டில் நாம் வெற்றியைத் தழுவுவோம். ஜெனீவாவை நாம் பெரிதாக பொருட்படுத்தத் தேவையில்லை.
கியூபா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு ஜெனீவாவிலிருந்து 60 ற்கு மேற்பட்ட தடவைகள் இவ்வாறு இடம்பெற்றுள்ளன. கடந்த காலங்களில் நாகவிஹாரைக்கு நாம் வழிபட செல்ல முடியாத காலம் இருந்தது. தலதா மாளிகை, ஸ்ரீபோதி, சோமாதேவி போன்ற வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டன. தேரர்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். வடக்கிலிருந்து சிங்கள - முஸ்லிம் மக்கள் துரத்தப்பட்டனர். அப்போதெல்லாம் மத நல்லிணக்கம் பற்றி எவரும் பேசவில்லை.
இந்த அத்தனை அழிவுகளையும் நிறுத்தி நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பி இன - மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகையில் எமக்கு சேறு பூசுகின்றனர். நாட்டைச் சீர்குலைத்து அரசாங்கத்தை கவிழ்ப்பது அவர்களது நோக்கமாகவுள்ளது. நாம் பிறந்து, வாழ்ந்து, அடக்கம் செய்யப்படும் இந்த தாய்நாட்டை அனைவரும் நேசிக்க வேண்டும். இந்த மண்ணை நாம் கெளரவப்படுத்த வேண்டும்.
இதுவே எமது பலமும, தேவையுமாகும். போர்த்துக்கீசருக்கும் ஒல்லாந்தருக்கும் இந்த நாட்டை ஆக்கிரமித்து கைப்பற்ற முடியாமற்போனது. இதன்போது எமது தலைவர்கள் மன்னர்களை நாம் இழக்க நேர்ந்தது. இன்றும் அதனையே செய்யப் பார்க்கின்றனர்.
இன்று சிலர் வாழ்க்கைச் செலவு அதிகாரிப்பு பற்றி பேசுகின்றனர். 30 வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர முடிந்த எம்மால் வாழ்க்கைச் செலவைக் குறைக்க வழிசெய்யவும் முடியும். அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பியுள்ள இந்த அரசாங்கத்துக்கே அதனையும் மேற்கொள்ள முடியும் என்பதை நாம் மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூற விரும்புகின்றோம்.
எதிர்க் கட்சியினர் மக்களுக்குச் சொல்வதற்கு எதுவுமில்லாத போது சேறுபூசுவதையே தொழிலாகச் செய்கின்றனர். நம் பிள்ளைகளுக்கு இந்த நாட்டைப் பாதுகாத்து கையளிக்க வேண்டும். இளைய தலைமுறைக்கு சுதந்திரமான சிறந்த நாடாக இதனை வழங்குவது அவசியம். அதற்காக நாட்டைக் கட்டியெழுப்பி எதிர்கால உலகை வெற்றிகொள்ள வேண்டும். அதற்காகவே கல்வியிலும் நாம் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தி யுள்ளோம்.இவற்றுக்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.
தென் மாகாணத்தில் உள்ளூராட்சி சபைகள் எம் வசமே உள்ளன. மாகாண சபையையும் எமது அதிகாரத்தில் பெற்று இப்பிரதேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்த வெற்றியின் மூலம் நாம் உலகுக்கு தெளிவான செய்தியொன்றை வழங்க வேண்டும். அது இந்த நாட்டு மக்கள் மீண்டும் இந்த நாட்டை அடிமைப்படுத்த எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. எமக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்ற செய்தியே அது.
28 ஆம் திகதி நாம் தோல்வியுற்றால் பரவாயில்லை. 29 ஆம் திகதி நாம் பெறும் வெற்றி எமது வெற்றி மட்டுமல்ல, நாட்டினதும் மக்களினதும் வெற்றி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பெருமளவில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (ஸ)
Post a Comment