அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸினை வெளியேற்றும் திட்டமில்லை - அமைச்சர் சுசில்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை , ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கூட்டணியிலிருந்து வெளியேற்றும் திட்டம் எதுவும் கிடையாது என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸை விலக்கும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை வெளியிட சுதந்திரம் உண்டு.
எனினும், கூட்டணி கட்சிகளின் பொதுநோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு 52 பக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமயத் தளங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதனால் ஜனாதிபதி கடும் ஆத்திரம் கொண்டு, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை அமைச்சரவைக் கூட்டத்தில் சாடியிருந்தார்.
எனினும், கூட்டணியிலிருந்து விலகப் போவதில்லை என ரவூப் ஹக்கீமும், விலக்கப் போவதில்லை என சுசில் பிரேமஜயந்தவும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment