Header Ads



சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது - ரவூப் ஹக்கீம்


முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கும்பல்களின் அட்டகாசம் பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றும், அக் கும்பல்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு மெத்தனப் போக்கு கடைபிடிக்கப்படும்பொழுது,  விமர்சிக்கின்ற உரிமை தமது கட்சிக்கு இருப்பதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.  

மேல் மாகாண சபைத் தேர்தலில், கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மாதர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை (02) மாலை அத்தனகல்லை தேர்தல் தொகுதியில் திஹாரிய, கொடெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற பொழுது உரை நிகழ்த்துகையிலேயே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். 

கட்சியின் கம்பஹா மாவட்டத்துக்கான முதன்மை வேட்பாளர் ஷாபி ரஹீம், திஹாரிய முஸ்லிம் காங்கிரஸ் மாதர் அமைப்பின் தலைவி ஸரீனா பேகம்  ஆகியோர் உட்பட ஏனைய வேட்பாளர்களும், கட்சி ஆதரவாளர்களும், பிரதேச மக்களும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  அங்கு உரையாற்றும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தவையாவன, 

முஸ்லிம் காங்கிரஸூக்கு எதிரான பலதரப்பட்ட விமர்சனங்கள் இப்பொழுது செய்யப்படுகின்றன. தேர்தலில் எதிர்கட்சிகளில் போட்டியிடுவோரும். ஆளும் கட்சியில் போட்டியிடுவோரும் முஸ்லிம் காங்கிரஸை இலக்கு வைத்து பிரசாரம் செய்வார்கள்.  தற்பொழுது முஸ்லிம் சமூகம் குறித்த குழப்பங்கள் உள்ளன. சில அமைப்புகள் அண்மையில் உருவாகி அவற்றின் ஊடாக முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான வன்முறைகளை நாங்கள் பார்த்தோம். வலிய முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் பாங்கில் பல விடயங்கள் நடந்தன. அவற்றையிட்டு நாம் மிகவும் விசனத்துடன் இருந்தோம். அவ்வாறான முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு எதிரான வெறுப்பாக மாறியது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மீதும் எமது மக்கள் ஆத்திரமடைய நேர்ந்தது.  அரசாங்கத்திற்குள்ளே இருந்து கொண்டே இவ்வாறான விடயங்களுக்காக நாங்கள் குரல் எழுப்பினோம். ஆனாலும் பலருக்கு உண்மை தெரியாது. இப்பொழுது தான் ஓரளவுக்கு அம்பலத்திற்கு வருகிறது. 

எனக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான வாக்குவாதம் பற்றி நான் போகும் இடமெல்லாம் ஊடாகவியலாளர்கள் வந்து என்னிடம்  கேள்விக்கனைகளை தொடுக்கிறார்கள். எனக்கே உரிய பாணியில் அவற்றிற்கு நான் பதிலளிக்கிறேன்.  வாராந்த முஸ்லிம் பத்திரிகையொன்றில் வெளிவந்துள்ள தலைப்புச் செய்தியைப் பார்த்தேன். முஸ்லிம்கள் நாட்டுப் பற்றோடு நாட்டைப் பாதுகாத்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் முழுமையாக வாசித்தால் அதன் உள்ளடக்கத்தை புரிந்துகொள்வீர்கள். அதில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை அவரது அழைப்பின் பேரில் அவரது இல்லத்தில்  எமது ஜம்இய்யதுல் உலமா சபையினர், ஷூரா சபை மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் ஒன்றியம் என்பவற்றின் பிரதிநிதிகள் சந்தித்ததாக எழுதப்பட்டுள்ளது. நான் அந்தச் சம்பவத்தை கூறப்போய் தான் ஜனாதிபதியுடன் பிரச்சினை உருவானது. 

அந்த அமைப்புகள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் எவற்றைக் கூறினார்கள் என அந்த அமைச்சரிடமே கேட்குமாறு நான் ஜனாதிபதியிடம் சொன்ன போதுதான் ஜனாதிபதிக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அச்செய்தியின் தலைப்பு வித்தியாசமாக தென்பட்டாலும் அவர்கள் எவற்றை சொன்னார்கள் என்பதுதான் முக்கியமாகும். அவர்கள் இந்த நாட்டில் அண்மைக்காலமாக நடந்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் பற்றிய எல்லாத் தகவல்களையும் கூறியுள்ளனர். அப்பொழுது அமைச்சர் தனக்கு அவை பற்றி எதுவும் தெரியாதே, எவரும் சொல்லவில்லையே என்றிருக்கிறார். 

அதற்கு முன்னர் சென்ற ஆண்டு ஐம்பதிற்கு மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய முஸ்லிம் நாடுகளின் ஒன்றியம் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் நடக்கின்றன. அவற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள் என கடிதம் எழுதியிருந்தது. அது வெளிவிவகார அமைச்சிற்கு வந்த கடிதம். ஜனாதிபதி எங்களிடமும் அதுபற்றி கூறினார்.  அப்பொழுதே அக் கடிதத்தின் மீது உரிய கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அமைச்சர் அந்தக் கடிதத்தின் பாரதூரம் பற்றித் தனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார். 

இங்கு என்னவெல்லாம் நடந்தன என நான் எழுதவில்லை. அவர்கள் எழுதிய கடிதத்தில் எவற்றை எழுதியிருந்தனர் என உங்களுக்குத் தெரியுமென அமைச்சர் பீரிஸிடம் கூறிய நான், அவை ஊடகங்களிலும், இணையங்களிலும் ஏற்கனவே வெளிவந்தவை தாம் என்றேன்.  நான் சவூதி அரேபியாவிற்கு சென்றிருந்த போது அந் நாட்டு பத்திரிகைகள் இரண்டை இலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் பற்றி அரைப்பக்க கட்டுரைகள் இரண்டு வெளிவந்திருந்தன. அவற்றில் ஒன்றில் இலங்கை மியன்மார் போன்று ஆகிவிடப் போகிறதா என குறிப்பிடப்பட்டிருந்தது. அங்குள்ள இலங்கைத் தூதுவரிடம் அக் கட்டுரைகள் பற்றி சுட்டிக்காட்டிய நான். அவற்றை உடனடியாக இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன். 

எங்களுடைய கட்சிக்குள்ளேயே சர்வதேசத்திற்கு நாம் எவற்றையும் சொல்லத்தேவையில்லை என்ற அபிப்பிராயம் உள்ளவர்களும் இருக்கிறார்கள்.  கட்சிக்குள்ளேயே இது ஒரு கருத்து முரண்பாடான விடயமாக வரவேண்டிய அவசியமில்லை. கட்சி ஒருமித்த நிலைபாட்டில் இருக்க வேண்டும். கட்சியில் மெத்தனமாகவும், தீவிரமாகவும் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தலைவர் என்ற முறையில் கட்சியையும் பாதுகாத்துக்கொண்டே சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது. 

உண்மையிலேயே இந்த அரசாங்கத்தோடு நாட்டு நலன் கருதியும், சமூக நலன் கருதியும் நாம் ஒர் உள்ளகப் போராட்டத்தைச் செய்கிறோம். இப்படியான ஒரு கட்டத்தில் இந்த இயக்கத்தை பாதுகாக்கும் ஒரு தேர்தலாக இது மாற வேண்டும். கட்சிதான் இந்த சமூகத்தின் அடையாளச் சின்னம். இன்னும் வீரியமுள்ள இயக்கமாக இது மாறவேண்டும். அதற்கான ஒரு களமாக இந்த தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும்.  முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கும்பல்களின் அட்டகாசம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அக் கும்பல்கள் மீதான ஒரு மெத்தனப் போக்கு கடைபிடிக்கப்படும்பொழுது அதனை விமர்சிக்கின்ற உரிமை இந்தக் கட்சிக்கும், இதன் தலைமைத்துவத்துக்கும் இருக்க வேண்டும். 

இவற்றை எடுத்துக் கூறும் போதுதான் பிரச்சினைகள் உருவாகின்றன. ஜனாதிபதிக்கும் எனக்கும் இடையிலான வாக்குவாதங்கள் வழமையானவை.  சில ஊடகங்கள் அவற்றை ஊதிப் பெருப்பிக்கின்றன. நாங்கள் ஊசியை நுழைக்கும் போது அவை உலக்கையை நுழைக்கின்றன. அதுவல்ல பிரச்சினை, இந்தச் சமூகத்தின் பிரச்சினைகளை உரிய முறையிலான அடிப்படையில் பேச வேண்டிய உரிமை இந்த இயக்கத்திற்கு இருக்கிறது. சர்வதேசத்திடமும் தான். ஏனென்றால் சர்வதேசம் இந்தக் கட்சியிடம் தான் கேட்கும். முஸ்லிம்களின் நிலைமை குறித்து அறிந்துகொள்வதற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் இந்தக் கட்சியின் தலைவரைத் தான் அணுகுகிறார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாங்கள் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. அப்படி மறைப்பது இக் கட்சியின் நம்பகத் தன்மைக்கும் உகந்ததல்ல. 

எனவே, கட்சியின் நம்பகத்தன்மை என்பது மக்கள் மத்தியில் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்தின் மத்தியிலும், இராஜதந்திரிகள் மத்தியிலும் பேணப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டும். எமது கட்சி வெறும் கூஜாத் தூக்கிகளின் கட்சியென்று பார்க்கப்பட முடியாது. எனவே தான் மிகவும் தெளிவான நிலைப்பாடுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அரசியலைச் செய்து வருகிறது. எதற்காகவும் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.   முற்றிலும் எதிர்பாராத விதமாக பொதுபலசேனா என்ற அமைப்பு திடீரென கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிடுகிறது. இப்பொழுது ஜெனீவா பிரச்சினை வந்தவுடன், நாம் இனிமேல் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டோம் என அவ்வமைப்பினர் அறிவித்தல் விடுக்கிறார்கள். எனவே, யார் இவர்களின் கடிவாளத்தை வைத்திருக்கிறார்கள் என சிலர் மத்தியில் யூகங்கள் எழுகின்றன.

இஸ்லாமிய கண்ணோட்டத்தில், நோன்பு காலத்தில் சைத்தான்களுக்கு விலங்கிடப்படுவதாக,  அவை கட்டிப்போடப்படுவதாக கூறப்படுகிறது. அதே போன்று இந்த ஜெனீவா காலத்தில் பொதுபலசேனாவை கட்டிப்போடப்பட்டுள்ளதா என சிலர் கேட்கிறார்கள். இதில் நியாயமில்லாமல் இல்லை. தேவையான போது அவிழ்த்து விடுவது, தேவையற்ற பொழுது கட்டிப்போடுவது, இது தான் நடக்கிறது. இவர்கள் யாருடைய ஏவலுக்காக முஸ்லிம்களுக்கு எதிராக இவற்றைச் செய்கின்றனர் என்ற சந்தேகம் கிளப்பப்படுகிறது. 

ஒரு பொறுப்பான அரசாங்கம் இவ்வாறான இனவாத கும்பல்களின் செயல்பாட்டை காணாமல் இருக்க முடியாது. ஒரு பலமான அரசாங்கம் பலவீனமான சமூகத்தை பாதுகாக்கின்ற அரசாங்கமாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அது பலமான அரசாங்கமாக இருக்க முடியாது. இதை நான் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்ட போதும், அதன் பின்னரும் கூறியிருந்தேன்.  எனவே குற்றம் செய்கின்றவர்கள் யாராக இருந்தாலும் பலமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எவருக்கும் சட்டத்தை மீறுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது. சட்டத்தை மீறினால் பிடித்து அடைக்க வேண்டும். துறவிகள் என்ற காரணத்தினால் அவர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்ல முடியாது என்ற எந்த சட்ட நியதியும் கிடையாது. அதை நீதியமைச்சர் என்ற அடிப்படையில் நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன். உரிமையைப் பொறுத்த விடயத்தில் நான் மிகவும் திட்டவட்டமான நிலைப்பாட்டில் இருக்கிறேன். 

இவற்றுக்கு அப்பால், என்னைப் பொறுத்தமட்டில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பற்றி பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. அதைப் பேசப்போனால் உலமாக்கள் சிலரின் எதிர்ப்பை சம்பாதிக்க நேருகிறது.  இன்று ஷரிஅத் சட்டம் நடைமுறையில் இருக்கும் இஸ்லாமிய நாடுகளில் கூட முஸ்லிம் பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் அவர்கள் பெரும் குறைபாடுகளை காணவில்லை. மாறி வரும் இன்றைய உலகில் இந்த விடயம் நன்கு ஆராயப்பட வேண்டியதாகும். 

எனவே தான் எமது கட்சிக்குள்ளும் மாதர்களின் பங்களிப்பையும், ஈடுபாட்டையும் நாங்கள் ஊக்குவிக்கின்றோம். இப்பொழுது காத்தான்குடி நகர சபையில் சல்மா ஹம்ஸா என்பவர் எமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவ்வாறே எனது தேர்தல் மாவட்டமான கண்டியில் யட்டிநுவர பிரதேச சபையில் புஷ்பா  கொடிதுவக்கு என்ற சிங்கள பௌத்த பெண்மணி  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்று உறுப்பினராக இருந்து வருகிறார். ஆண்கள் பலர் இருக்கத்தக்கதாக சிங்களப் பெண்மணி ஒருவரை முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் வெல்ல வைத்தது. 

சிங்களப் பத்திரிகையொன்று அவரது நேர்காணல் ஒன்றை பிரசுரித்திருந்தது. அதில் தாம் ஏன் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டேன் என அவர் விளக்கமளித்துள்ளார். ஏனென்றால், பொதுவாக பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் சிங்கள  சமூகத்தில் சாதிப் பிரச்சினை அதாவது சாதி அடிப்படையிலான பாகுபாடு, ஒதுக்குதல் என்பன நிலவி வருகின்றன. ஆனால், அவர்கள் அதனை வெளியில் பகிரங்கமாக பேச மாட்டார்கள். தேர்தல் தொகுதியொன்றில் எந்த சாதியினர் அதிகமாக வசிக்கின்றனரோ அந்தச் சாதியினருக்குத் தான் வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்படுகிறது. அவ்வாறான வேட்பாளர்கள் தேர்தலுக்கு நிறுத்தப்படாவிட்டால் அந்த சாதியினரின்  வாக்குகள் கிடைக்கமாட்டாது. 

சாதிப்பிரச்சினை காரணமாகவே அந்தப் பெண்மணி முஸ்லிம் காங்கிரஸில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட நேர்ந்தது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக போட்டியிடுவதற்கு வேறு வேட்பாளர்கள் சிலர் முண்டியடித்துக்கொண்டிருந்த பொழுது நான் அந்த பெண்மணியை கட்சித் தலைவர் என்ற முறையில் எனது தற்றுணிபை  பயன்படுத்தி அவரை போட்டியிட வைத்தேன். அவர் வெற்றி பெற்றார். மத்திய மாகாண சபைத் தேர்தலிலும் எமது கட்சியில் அவர் போட்டியிட்டார். 

கம்பஹா மாவட்டத்தைப் பொறுத்தவரை உலகின் முதல் பெண்மணியான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோர் அமோக வெற்றியீட்டி இருந்தாலும், அதற்கு முக்கிய காரணம் கணவர் அல்லது தந்தை புகழ்பூத்த அரசியல் தலைவராக இருந்ததாலேயே ஆகும். அவ்வாறே டாக்டர். சுதர்ஷனி பெர்ணான்டோ பிள்ளை பாராளுமன்ற பிரவேசித்ததும் கூட அவரது கணவர் எனது நண்பர் ஜெயராஜ் பெர்ணான்டோ பிள்ளை நன்கு பிரசித்தமானவராக இருந்து குண்டுத் தாக்குதலில் மரணித்ததாலேயாகும்.  அவ்வாறானதொரு பாரம்பரியம் இன்றி பெண்களை அரசியலுக்கு அறிமுகப்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். பெண்கள் எவ்வளவோ நல்ல காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் தங்களது சமய விழுமியங்களைப் பாதுகாத்துக்கொண்டு, எமது சமூகத்தின் பிரதிநிதிகளாக வருவதற்கான உரிமையும், தகைமையும் அவர்களுக்கு இருக்கின்றது.  அந்த அடிப்படையில் இந்த விடயத்தை மிகவும் திறந்த மனதோடு அணுக வேண்டிய அவசியம் இருக்கிறது. 

கம்பஹா மாவட்டத்தைப் பொறுத்தவரை முஸ்லிம் கிராமங்கள் தோறும் சென்று முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிக்குமாறு ஒவ்வொருவரையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் காலத்திலிருந்தே முஸ்லிம் காங்கிரஸை கம்பஹா மாவட்டத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எமது மக்கள் ஆதரித்து வருகிறார்கள். ஆகையால் கொல்லன் தெருவில் போய் ஊசி விற்கத் தேவையில்லை.  முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரை இன்று அரசியல் விழிப்புணர்ச்சியும், அரசியல் ரீதியான அறிவும் அவர்களிடம் அதிகம் காணப்படுகின்றது.  இந்த இயக்கம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் பிழைத்து விடக் கூடாது. இந்த இயக்கம் சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கம் என்பதை மறந்து விட்டு வெறுமனே அபிவிருத்தியைப் பற்றி மட்டுமே பேச முடியாது. அது இந்த கட்சியுடைய அடிப்படையல்ல. எங்களுக்கு உரிமையும் வேண்டும். அபிவிருத்தியும் வேண்டும். 

திஹாரிய முஸ்லிம் காங்கிரஸ் மாதர் அமைப்பின் ஊடாக சுய தொழில் வாய்ப்பு, தையற் கலை, சமையல் பயிற்சி என்பன வழங்கப்படுகின்றன. எமது அரசியல் பிரதிநிதிகளின் நிதி ஒதுக்கீடும் இவ் அமைப்புக்கு வழங்கப்படுகின்றது என்றார்.   தூல்மலை, ஓகொடபொல, உடுகொட, கஹட்டோவிட ஆகிய கிராமங்களில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டங்களிலும் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றினார். 

No comments

Powered by Blogger.