Header Ads



ஜெனீவா அமர்வு இன்று ஆரம்பம் - இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகள் களத்தில் குதிப்பு


ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த வருடத்துக்கான முதல் அமர்வு இன்று ஆரம்பமாகிறது. முதல் நாளிலேயே இலங்கைக்கு எதிராகக் காட்டமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன என்று ஜெனிவா செய்திகள் கூறுகின்றன. 

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பான தமது இறுக்கமான நிலைப்பாட்டை ஆரம்ப உரையிலேயே வெளிப்படுத்துவர் என்று கூறப்படுகிறது. 

இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் ஆகியோர் உரையாற்றுவர்.

அமெரிக்க நிலைப்பாடு

அதையடுத்து, உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரைகள் இடம் பெறவுள்ளன. அமெரிக்கா சார்பில், ஐ.நாவுக்கான தூதுவரான சமந்தா பவர் உரையாற்றவுள்ளார். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா மீண்டும் முன்வைக்கவுள்ளதால், சமந்தா பவரின் உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒபாமா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சமந்தா பவர், தனது உரையில், இலங்கை தொடர்பாக அமெரிக்கா எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவநீதம்பிள்ளைக்கு ஆதரவு

ஏற்கனவே அவர், கடந்த 27ஆம் திகதி வெளியிட்ட டுவிற்றர் செய்தியில், ஜனநாயக ஆட்சிமுறைக்கும், மனித உரிமைகளுக்கும் இலங்கை மதிப்பளிக்க வேண்டும் என்றும், மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அழைப்புக்கு ஆதரவளிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, இந்தக் கூட்டத் தொடரில் உயர்மட்டப் பிரதி நிதிகளின் உரை நிகழ்ச்சி நிரலில், இடம்பெற்றிருந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்கும், கனேடிய வெளிவகார அமைச்சர் ஜோன் பயார்ட்டும் இதில் பங்கேற்கமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்குப் பதிலாக, பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகத்துக்கான இணை அமைச்சர் ஹியூகோ சுவைரும், கனேடிய வெளிவிவகார இணைய அமைச்சர் லைன் யெயலிச்சும் இன்றைய கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.

No comments

Powered by Blogger.