சவூதி அரேபிய மன்னரை ஒபாமா சந்திப்பது வெட்கக் கேடு - சிறைபட்டிருக்கும் மகள்கள் பேட்டி
சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவூத்-தை சந்திக்க அமெரிக்க அதிபர் ஒபாமா தலைநகர் ரியாத்தை வந்தடைந்தார்.
இந்நிலையில், வளர்ந்த மகள்கள் 4 பேரை வீட்டில் அடைத்து பூட்டி வைத்திருக்கும் சவூதி மன்னர் அப்துல்லாவை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்து பேசுவது அவருக்கு வெட்கக் கேட்டினை ஏற்படுத்தும் என்று அப்துல்லாவின் மகள்கள் கூறியுள்ளனர்.
சவூதி மன்னர் அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற மனைவி அலனவ்ட் அல் ஃபயெஸ். கடந்த 13 ஆண்டுகளாக தன்னையும் தந்து மகள்களையும் ஜெட்டாவில் உள்ள வீட்டில் அடைத்து, மன்னர் சிறைபடுத்தி வைத்துள்ளதாக கடந்த வாரம் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
சமீபத்தில் ஒளிபரப்பாகிய இந்த பேட்டி, உலகில் உள்ள பெண்ணியக்க வாதிகளிடமிருந்து கண்டனக் குரல்களை எழச் செய்தது. தற்போது ஒபாமா சவூதி வந்திருக்கும் நிலையில் மன்னர் அப்துல்லாவின் மகள்களான இளவரசிகள் சஹர் மற்றும் ஜவஹர் கூட்டாக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தனர்.
’பெற்ற மகள்களான எங்களையே வீட்டுச் சிறையில் அடைத்து வைத்து மன்னர் சித்திரவதை படுத்துவதை வைத்து மற்ற பெண்களின் கதி என்ன? என்பதை சிந்தித்து பாருங்கள். எங்களுக்கு நேர்ந்த அவலம் சர்வதேச சமுதாயத்தின் பார்வைக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக பின்னால் ஏற்படப் போகும் ஆபத்தை கூட பொருட்படுத்தாமல் இந்த பேட்டியை தருகிறோம்.
வளர்ந்த பெண்களான எங்களை பிணைய கைதிகளைப் போல் பிடித்து வைத்திருக்கும் மன்னரை சந்தித்துப் பேசுவது ஒபாமாவுக்கு வெட்கக் கேடாக அமைந்து விடும்’ என்று அந்த பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment