Header Ads



ஜெனீவா பிரேணை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இறுதி முயற்சி


ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு இந்தியாவின் ஆதரவைப் பெறும் கடைசி முயற்சியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஈடுபடவுள்ளார். 

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தின் போது, சிறிலங்காவுக்கு இந்தியா ஆதரவு வழங்காது என்றே பரவலாக நம்பப்படுகிறது. 

இந்தியாவில் விரைவில் நடக்கவுள்ள தேர்தல் காரணமாக, ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு உள்ளது என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது. 

நேற்று முன்தினம் வெளிநாட்டுச் செய்தியாளர்களை சந்தித்த போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இதனை ஒப்புக்கொண்டிருந்தார். 

எனினும், இறுதி முயற்சியாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம், நேரடியாகவே இந்தியாவின் ஆதரவைக் கோர அவர் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வங்காள விரிகுடா நாடுகளின் பலதுறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் ஏழு நாடுகளின் தலைவர்களின் கூட்டம் நாளை மறுநாள் மியான்மர் தலைநகர், நேபிடோவில் நடைபெறவுள்ளது. 

இதில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாளை நேபிடோ புறப்படவுள்ளார். 

இந்தக் கூட்டத்தின் பக்க நிகழ்வாகவே, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேசவுள்ளார். 

இதன்போதே, இந்தியப் பிரதமரிடம் இறுதி முயற்சியாக ஆதரவு கோரத் திட்டமிட்டுள்ளார். 

எனினும், இதற்கு இந்தியப் பிரதமர் வெளிப்படையாகப் பதில் ஏதும் கூறமாட்டார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, இந்த மாநாட்டில் பங்கேற்பகாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நேபிடோ சென்றுள்ளார். 

இவரும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் பேச்சு நடத்தவுள்ளார். 

இதையடுத்து பீரிஸ் அங்கிருந்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நாளை மறுநாள், ஜெனிவா செல்லவுள்ளார்.

1 comment:

  1. பக்கத்து வீட்டுக்காரனே கல் எறியும் போது......?

    ReplyDelete

Powered by Blogger.