Header Ads



ஆங்கிலத்தை உரிய முறையில் உச்சரித்து பேச முடியாதவர்களாக இருக்கின்றோம் - நிஸாம் காரியப்பர்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவதற்கான திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு- அதற்கான தீவிர முயற்சிகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நான் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று கல்முனை மாநகர முதல்வர்- எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

மருதமுனை அல்-ஹறமைன் சர்வதேச முன்பள்ளிப் பாடசாலையின் பரிசளிப்பு விழாவும் மாணவர் கௌரவிப்பும் நேற்று மாலை மருதமுனை அல்-மதினா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பாடசாலையின் தலைவர் மௌலவி ஏ.ஆர் சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதல்வர் மேலும் பேசுகையில் கூறியதாவது;

"கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளிப் பாடசாலைகளில் பணியாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு மாதாந்தம் ஒரு கொடுப்பனவை வழங்க வேண்டும் என்கின்ற முன்மொழிவை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதிடம் சமர்ப்பித்ததன் பேரில் அது தொடர்பில் சில நடவடிக்கைகளை அவர்கள் இருவரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கொரியாவின் கொய்கா நிதி நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியை சில மாதங்களுக்கு முன்னர் நாங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது மேற்படி திட்டத்தையும் ஒரு முக்கிய அம்சமாக அவர்கள் முன்வைத்து- அதற்கு உதவுமாறு வலியுறுத்தியிருந்தனர்.   
அத்திட்டம் வெற்றியளிக்கும் என்று நான் நம்புகின்றேன். அது அவ்வாறு நடைமுறைக்கு வருமாயின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட 127 முன்பள்ளி பாடசாலைகளிலும் பணியாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நான் உரிய நடவடிக்கைகளை எடுப்பேன்.

முன்பள்ளி ஆசிரியர்களின் சேவை குறைத்து மதிப்பிட முடியாத ஒரு பெரும் பணியாகும். அவ்வாறானவர்களின் நலன்கள் நிச்சயம் பேணப்பட வேண்டும்.

எமது பிரதேசத்தில் எவ்வளவுதான் படித்து உயர் நிலைகளில் இருந்தாலும் பெரும்பாலானோர் ஆங்கிலத்தை உரிய முறையில் உச்சரித்து பேச முடியாதவர்களாக இருக்கின்றோம். இது மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இதற்கான அடித்தளம் முன்பள்ளிப் பாடசாலைகளில் இடப்பட வேண்டும். எந்த மொழியாயினும் அதனை இலகுவாக பேசுவதற்கான ஒரு பருவம் ஐந்து ஆறு வயதுக்குட்பட்ட முன்பள்ளிப் பருவமாகும்.

ஆகையினால் முன்பள்ளிப் பாடசாலைகள் எதைச் செய்யா விட்டாலும் பச்சிளம் மாணவர்களுக்கு ஆங்கிலத்தை உரிய உச்சரிப்புடன் பேசக் கற்றுக் கொடுத்தால் மட்டும் போதும். அதுவே எதிர் காலத்தில் அவர்கள், ஆளுமை மிக்க பிரஜைகளாக மிளிர்வதற்கு வழிவகுத்துக் கொடுக்கும் என்று எம்மால் உறுதியாக சொல்ல முடியும்.

இந்தப் பணியை மருதமுனை அல்-ஹறமைன் சர்வதேச முன்பள்ளிப் பாடசாலை சிறப்பாக முன்னெடுப்பதை நாம் இங்கு காண்கின்றோம். இப்பாடசாலையில் அரபு, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு- கற்பிக்கப்படுவதை இம்மானவர்களினால் அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் அறிய முடிகின்றது.

இதற்கு இப்பாடசாலையின் தலைவர் மௌலவி ஏ.ஆர்.சுபைர் மற்றும் மொழி பெயர்ப்பாளர் லலிதா சுதாகரன் ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியதாக இருப்பதைக் கண்டு நான் பெரும் மகிழ்ச்சியடிகின்ரேன்" என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சட்டத்தரணி எம்.எச்.எம்.ஹம்ஸா, உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபையின் பதில் சட்ட அதிகாரி சட்டத்தரணி எம்.பி.எம்.பௌசான், கலாசார உத்தியோகத்தர் றஸ்மி எம்.மூஸா உள்ளீட்ட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.


No comments

Powered by Blogger.