Header Ads



புற்றுநோய் பாதித்த பெண்களும் ஆரோக்கியமாக குழந்தை பெறலாம்..!

யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதிலும் வருகிற காய்ச்சல், தலைவலி மாதிரி மாறிக் கொண்டிருக்கிறது புற்றுநோய். திருமணத்துக்குப் பிறகோ,  திருமணத்துக்கு முன்போ கூட புற்றுநோயினால் பாதிக்கப்படுகிறார்கள் இளம் பெண்கள். திருமணமாகாத இளம் பெண்களுக்கும் புதிதாகத்  திருமணமானவர்களுக்கும் புற்றுநோய் பாதிக்கிற போது, அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. நோய் குணமானாலும், அவர்களுக்குக் குழந்தைப்  பேறு என்கிற விஷயம் பெரும்பாலும் சாத்தியமில்லாமலேயே போகிறது.

‘‘புற்றுநோய் பாதித்த பெண்களும் ஆரோக்கியமான முறையில் குழந்தை பெறலாம். திருமணமாகாத பெண்களும், புதிதாகத் திருமணமான பெண்களும்  சற்றே சமயோசிதமாக செயல்பட்டால் பின்னாளில் குழந்தையின்மைப் பிரச்னையைத் தவிர்க்க இன்றைய நவீன மருத்துவத்தில் நிறைய சாத்தியக்  கூறுகள் உள்ளன...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. 

‘‘18 முதல் 30 வயதுப் பெண்களின் உடலில் நிணநீர் சுரப்பிகளைத் தாக்கும் புற்றுநோய் இன்று மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. கர்ப்பப்பையில்  புற்றுநோய் கட்டி இருக்கும் பெண்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். புற்றுநோயைக் குணப்படுத்துகிற சிகிச்சைகளில் கீமோதெரபியும், ரேடியேஷனும்  தவிர்க்க முடியாதவை. இந்த சிகிச்சைகளால் பெண்களின் உடலில் உள்ள கருமுட்டைகள் அழியும். சினைப் பை திசுக்களில் இழப்பு ஏற்படும்.  புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், அதை முழுமையாகக் குணப்படுத்திவிடலாம். 

நோயிலிருந்து மீண்ட பெண்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். ஆனால், சிகிச்சையின் விளைவாக அவர்கள் இழந்த கருத்தரிக்கும் தன்மையை எப்படி மீட்பது?

புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதுமே, அவர்களது கருமுட்டை வளர்ச்சியைத் தூண்டி, முட்டைகள் உருவாகச் செய்வோம். அந்த முட்டைகள்  முதிர 15 முதல் 21 நாட்கள் ஆகும். பிறகு அவற்றை எடுத்து உறையச் செய்து பாதுகாக்கலாம். ஆனால், புற்றுநோயைப் பொறுத்தவரை இன்று அது  ஆரம்பக்கட்டத்தில் இருக்கும். நாளைக்கே அது அடுத்தக்கட்டத்துக்கு மாறலாம். எனவே கருமுட்டைகளை முழுக்க முதிரும் வரை காத்திருக்காமல்,  அவற்றை முன்கூட்டியே எடுத்து ஐ.வி.எம் (இன்வெர்ட்டோ மெச்சூரேஷன்) முறையில் உறையச் செய்தும் பாதுகாக்கலாம். 

பிறகு அந்தப் பெண் நோயிலிருந்து மீண்டு, 10, 20 வருடங்கள் கழித்துத் தாய்மை வேண்டும் போதுகூட இந்த முட்டைகளைப் பயன்படுத்திக்  கொள்ளலாம். இந்த முறையில் குழந்தைப் பேறுக்கான வெற்றி வாய்ப்பு 13 முதல் 18 சதவிகிதம். திருமணமான உடனே புற்றுநோய் இருப்பது  கண்டுபிடிக்கப்படுகிற பெண்களும் உண்டு. அவர்களுக்கு  கருமுட்டையுடன், ஆணின் உயிரணுவையும் சேர்த்து கருவாக்கி, அந்தக் கருவையே  உறையச் செய்தும் பாதுகாக்கலாம். தேவைப்படுகிற போது ஐ.வி.எஃப் சிகிச்சை முறையில் அதை கர்ப்பப் பையினுள் செலுத்தி, வளரச் செய்து,  குழந்தை உருவாக்கலாம். இந்த முறையில் குழந்தையைப் பெறுவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம்.

இவை தவிர, இன்னொரு முறையும் உண்டு. ரேடியேஷன் கொடுக்கும் போது பெரும்பாலும் அது வயிற்றுப் பகுதியில் கொடுக்கப்படும் என்பதால்  சினைப்பை திசுக்கள் பாதிக்கப்படும். எனவே முன்கூட்டியே அந்தத் திசுக்களை எடுத்து கைகளிலோ, தோள்பட்டையிலோ மாற்றி வைத்து விடுவோம்.  பிறகு ரேடியேஷன் கொடுத்தால், இந்தப் பகுதிகளுக்குப் பாதிப்பிருக்காது. தேவைப்படுகிற போது அப்படி திசுக்களை மாற்றி வைத்த இடத்திலேயே  முட்டையை வளரச் செய்து, அதை எடுத்துக் கருவாக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவும் இன்றைய மருத்துவத்தில் வழிகள் உண்டு...’’ என்கிறார்  மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. 

- ஆர்.வைதேகி

No comments

Powered by Blogger.