மரணத்தை எதிர்நோக்கும் தொழிலாளி - முத்தமிட்டு வழியனுப்பிய ஒட்டகச் சிவிங்கி
புற்றுநோயின் பாதிப்பால் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் வன விலங்கு காப்பகத்தின் துப்புரவு தொழிலாளியை அவருடன் பழகிய ஒட்டகச் சிவிங்கி முத்தமிட்டு வழியனுப்பிய காட்சி இணையதளத்தில் கண்டவர்களின் நெஞ்சை நெகிழ வைக்கும் விதமாக உள்ளது.
நெதர்லாந்து நாட்டின் இரண்டாவது பெருநகரமான ரோட்டர்டாமில் டியெர்கார்டே ப்லிஜ்டார்ப் வன விலங்கு காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் விலங்குகளை அடைத்து வைத்திருக்கும் கூண்டில் உள்ள அசுத்தங்களை கழுவி சுத்தம் செய்து பராமரிக்கும் பணியில் மரியோ(54) என்பவர் தனது இளமைக் காலம் முதல் ஈடுபட்டு வந்தார்.
சமீபத்தில் தீவிர புற்று நோயின் தாக்கத்துக்கு உள்ளான அவர், லேசான மன நோய் பாதிப்புக்கும் ஆளாகியுள்ளார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மரியோ, தனது இறுதிக்காலம் நெருங்குவதை தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டார்.
உயிர் பிரிவதற்கு முன்னதாக தான் பணியாற்றி வந்த வன விலங்கு காப்பகத்துக்கு சென்று ஆசையாய் பராமரித்து வந்த பாச விலங்குகளை எல்லாம் இறுதியாக பார்வையிட விரும்பிய அவர், தனது பேராவலை ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் தெரிவித்தார்.
மரணத்தை எதிர்நோக்கியுள்ள அந்த நோயாளியின் கடைசி ஆசையை நிராசையாகி விடாமல் நிறைவேற்ற விரும்பிய டாக்டர்கள், ஒரு ஆம்புலன்சில் மரியோவை ஏற்றி வன விலங்கு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். சக்கர கட்டிலில் படுத்தபடி, ஒவ்வொரு விலங்கின் கூட்டுக்குள்ளும் சென்ற மரியோ, பாச விலங்குகளை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார்.
அவற்றில், மரியோவை நீண்ட நாட்களாக பிரிந்திருந்த ஒரு ஒட்டகச் சிவிங்கி மட்டும் அவரது கட்டிலை நெருங்கி அவரது முகத்தை நுகர்ந்து பார்த்து பிரியாவிடை அளிக்கும் பாணியில் கன்னத்தை நக்கி, முத்தமிட்டது. எதிர்பாராத இந்த பாசப்பிணைப்பால் புல்லரித்துப் போன மரியோவின் சோர்ந்திருந்த முகம் திடீரென பிரகாசம் அடைந்தது.
இந்த காட்சி இண்டர்நெட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டதையடுத்து, உலகம் முழுவது இதனை கண்ட லட்சக்கணக்கான மக்கள், பழகிய மனிதர்களின் மீது விலங்கினங்கள் வைத்திருக்கும் அன்பினைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்துப் போய் உள்ளனர்.
Post a Comment